இதனால். . .
சகலமானவர்களுக்கும். . .
வியாழன், 22 டிசம்பர், 2011
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் சு.வெங்கடேசனுக்கு (42) 2011ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசனின் சொந்த ஊர் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விப்பட்டியாகும். 16.3.1970ல் பிறந்தார். தமது ஆரம்பக்கல்வியை ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், உயர்கல்வியை திருநகரில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது தந்தை இரா.சுப்புராம், தாயார் நல்லம்மாள், இவருடன் உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரன், மூன்று சகோதரிகள். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி என்ற இருமகள்களும் உள்ளனர்.
காவல்கோட்டம் நாவல் மொத்தம் 1054 பக்கங்களைக் கொண்டது. காவல்கோட்டம் நாவல் ஆறு நூற்றாண்டு கால (1310-1910) மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும், தீவிரமான தருணங்களையும் திரும்பிப்பார்க்கிற நாவல் இது.
கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சித்தமிழ் ஒரு வரலாற்றுப்பார்வை உள்ளிட்ட ஏழு ஆய்வு நூல்களையும், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் உள்ளிட்ட நான்கு கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
காவல்கோட்டம் நாவலின் ஒரு சிறு பகுதியை வசந்தபாலன் இயக்கும் அரவாண் திரைப்படத்திற்கு கதை வசனமாக எழுதியுள்ளார் என்து குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள விருது குறித்து சு.வெங்கடேசன் கூறுகையில், தமது பத்தாண்டுகால உழைப்பிற்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.தகுதியானதொரு படைப்பு உரிய காலத்தில் அங்கீகாரம் பெற்றதென்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தவிருது, தற்போது அந்த எல்லைகளைக் கடந்து இலக்கியத் தகுதியை மட்டுமே மையமாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன். கனடா தமிழ்ச்சங்க விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் விருது, ஆனந்த விகடனின் சிறந்த நாவலுக்கான விருது, நொய்யல் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இந்நாவலுக்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து.
சு.வெங்கடேசனுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்பி., சிஐடியு அகில இந்திய தலைவர் கே.பத்மநாபன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த எழுத்தாளர் திகசி, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், இலக்கியவாதிகள், கவிஞர்கள்,தமுஎகச நிர்வாகிகள், திரைப்பட கலைஞர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
செவ்வாய், 6 செப்டம்பர், 2011
அழுகுரலின் ஓலம் அதன் பெயர் ஈழம்
பூமிக்கடியிலிருக்கும்
ரத்த வாடையைப் பிடித்தே
எப்படியேனும்
துளிர்த்து விடுகின்றன செடிகள்.
பூக்கள் புன்னகையைத் தொலைத்து
பல பத்தாண்டுகளாகி விட்டன.
எதிரில் இருப்பவன்
மனிதனென மறந்ததால்
மரணத்தைச் சுவைக்கும்
ஆயுதங்களின் நுனிக்குத்
தெரியவில்லை
செத்து விழுந்தவன்
எந்த இனமென்று.
அழுகுரலின் ஓலம்
அதன் பெயர் ஈழம்!
மாரீசன் வராமலேயே
எத்தனை சீதைகள்
இன்னமும்
முள்வேலி சிறைகளில் . . . .
காலடியில் வாழும்
ஜீவராசிகள் கூட செத்துவிடக்கூடாது
எனப் போதித்த
புத்தனை சேவிப்பவர்கள்
மயிலறகிற்குப் பதில்
தோட்டக்களையே தூவுகிறார்கள்.
மண்டையோடுகளின் குவியலில்
இலங்கை திணறுகிறது.
சயனைட் குப்பிகளை நம்பியல்ல
சக வாழ்வையே விரும்பும்
ஆயுதம் தரிக்காத
அப்பாவி தமிழன்
கேட்பது பிச்சையல்ல . . .
வாழ்க்கையை.
லேபிள்கள்:
ஈழம்
சனி, 27 ஆகஸ்ட், 2011
செருப்பு
சாலையோரம் முதல்
குளிர்சாதனம் பொருத்திய
கடைகள் வரை
அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
செருப்புகள்.
மனிதர்கள் மட்டும் தான்
செருப்புகள் அணிவார்களா?
புதிதாகக் கட்டப்படும்
வீடுகளின் வாசல்களில்
காவலுக்கிருக்கும்
திருஷ்டி பொம்மைகளின்
கால்களில் செருப்புகள்!
விக்ரமாதித்தன், வேதாளம்
இதில் ஏறினார்களா
எனத்தெரியவில்லை . . . .
காய்த்துத் தொங்கும்
முருங்கை மரங்களில்
செருப்புகள்!
எவ்வளவு விலை உயர்ந்த
செருப்பானாலும்
வீட்டின் வாசலிலேயேத்தான்
கழட்டி விடப்படுகின்றன.
பிறகெப்படி
பாரதத்தை
பதினான்கு ஆண்டுகள்
ஆண்டது செருப்பு?
லேபிள்கள்:
செருப்பு
வியாழன், 25 ஆகஸ்ட், 2011
ஆட்டம் காணும் திரையரங்குகள் !
காணாமல் போன நியூசினிமா திரையரங்கு
தமிழ் சினிமாவிற்கும், அரசியலுக்கும் நிறைய தொடர்பு உண்டு என்பதை மனப்பிறழ்வு ஏற்பட்டவனிடம் கேட்டால் கூட சொல்லி விடுவான். அறிஞர் அண்ணா துவங்கி வைத்த அந்தப் பயணத்தில் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, ஜெயலலிதா பலர் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயகாந்த் தற்போது இந்தப்பட்டியலில் சேர்ந்துள்ளார்.
நடிகர் எம்.ஜி.ஆர் திமுகவில் பல ஆண்டுகள் செல்வாக்குடன் திகழ்ந்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதன் பின்னணியில் அவர் கட்சித்துவங்கும் போது, ஆதரவு கிடைத்து அதன் பின் முதல்வரானார். அவருடைய மறைவிற்குப் பின் அவருடைய துணைவியார் வி.என்.ஜானகியால் முதல்வராக தொடர முடியாமல் போனது. குறுகிய காலத்தில் முதல்வராக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால் இரட்டைப்புறா சின்னத்தில் நின்று தோற்றுப்போனார்.
நடிகர் எம்.ஜி.ஆரின் புகழைப் பார்த்து நடிகர் சிவாஜி கணேசனும் அரசியலில் குதித்தார்.ஆனால், அதன் ஆழம் தெரியாமல் காலை விட்டு பின் தப்பித்தால் போதும் என துறவறம் மேற்கொண்டார். எம்.ஜி.ஆரைப் போன்று நாடகத்தில் இருந்து துவங்கிய அவரது பயணம், பராசக்தி மூலம் பெரும் சக்தியாக உருவெடுக்கக் காரணமானது.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த சிவாஜிகணேசன் 1961 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் ஆனார். 1987 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார்.
1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி அவ்வாண்டே கலைக்கப்பட்டு விட்டது தான் பெரும் சோகம். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ) அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர். அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார். ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக (ஜா) அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார். இப்படி அரசியலில் அவரால் நிலைத்து நிற்க முடியாமல் போனதற்குக் காரணம் உழைத்து சம்பாதித்த பணத்தை அரசியலில் செலவழிக்க அவர் தயாராக இல்லாமல் போனது தான். நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இப்போது கூட நடிகர் விஜய், நடிகர் அஜித் உள்ளிட்டோர் அரசியல் பிரவேசித்தலுக்கான முயற்சியுடன் இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் பரப்பப்படுகின்றன. நடிகர் ரஜினி ஒருகாலத்தில் வாய்ஸ் கொடுத்து தமிழ் மாநில காங்கிசை வெற்றி பெற வைத்ததாக கதைக்கப்பட்டது. அதன் பின் அவர் பல முறை குரல் கொடுத்தும் அவருடைய குரல் அரசியல் தளத்தில், அவர் பாணியில் சொல்தென்றால் “சும்மா! அதிர்வை“ ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு மத்தியில் எம்ஜிஆரின் வாரிசு என சினிமாவில் கைகாட்டப்பட்ட இயக்குநர் கே.பாக்யராஜ், இயக்குநர் டி.ராஜேந்தர் ஆகியோரின் கட்சிகள் போணியாகவில்லை.
தமிழகத்தைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படி கலைத்துறையினர் அதிகம் பேர் முதல்வரான வரலாறு இல்லை. அதனால் தான் கலைத்துறையில் கால் வைத்ததும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பற்றிய கனவுடன், கதாநாயகன்கள் திரையில் அறிமுகமாகும் காட்சியில் பில்டப் பாடல்கள் மெட்டிசைக்கப்படுகிறது. ஓடும் குதிரையில் பந்தயம் கட்டுவது போல வெற்றி பெற்ற கதாநாயகன்கள் சொல்வதைக் கேட்டு அவர்கள் மீது பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு இவர்களின் அரசியல் எல்லாம் தேவையில்லை. மூன்று சென்டர்களிலும் படம் ஓட வேண்டும். கல்லா நிரம்ப வேண்டும். அவ்வளவு தான் !
நாம் பார்க்கிறோமோ இல்லையோ அன்றாடம் வீடுகளில் உள்ள சின்னத்திரையில் 5 படங்களை ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இத்துடன் கண்ணீர் சிந்தும் காட்சிகளுடன் 5 நாடகங்கள் என பெண்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கும் சின்னத்திரையால் பெரிய திரை பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.
1916-ஆம் ஆண்டு தமிழில் முதல் மௌனப்படமாக துவங்கிய திரைப்பட பயணம் தற்போது டிஜிடல் கேமரா கொண்டு படப்பிடிப்பிலேயே டப்பிங் பேசி படத்தை முடிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் மண்ணை குவித்து வைத்து படம் பார்த்த டூரிங் தியேட்டர்களும் பல திரைப்படங்களை ரீலிஸ் செய்த பெரிய திரையிரங்குகளும் காணாமல் போய் கொண்டிருக்கிறது.
ஆசியாவின் மிகப்பெரிய
திரையரங்கான தங்கம்(இடிப்பதற்கு முன்பு)
மதுரையில் உள்ள சிந்தாமணி தியேட்டரில் மூன்றாண்டுகள் “சிந்தாமணி“ என்ற படம் ஓடியதால் அப்படத்தின் பெயரை தனது பெயராக்கிக் கொண்டத அத்தியேட்டர் இப்போது ஜவுளிக்கடைக்காக வாங்கப்பட்டு பல ஆண்டுகளாக அப்படியே உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையங்கு என பெயர் பெற்ற தங்கம் தியேட்டர் பல ஆண்டுகளுக்கு முன்பே தனது திரையோட்டத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்காவின் பிளான்விடா தியேட்டரைப் போல மதுரையில் ஒரு தியேட்டரை உருவாக்க வேண்டும் என நினைத்த விருதுநகரைச் சேர்ந்த பிச்சை என்பவர் உருவாக்கியது தான் இந்த தங்கம் திரையரங்கம். மதுரையின் மத்தியப்பகுதியான டவுன்ஹால் ரோட்டில் 1952-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திரையரங்கில் வெளியிடப்பட்ட முதல் படம் பராசக்தி. இந்தியாவின் மிகச்சிறந்த நடிகரான நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அறிமுகமான இப்படம், 4 மாதங்கள் திரையிடப்பட்டு மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்களை கவருவதற்காக பல புதிய ஆங்கிலப்படங்களை ரீலிஸ் செய்தது தங்கம் தியேட்டர். இப்படிப்பட்ட புகழ்பெற்ற இத்தியேட்டர் 1993-ஆம் ஆண்டு மூடப்பட்டது. சமீபத்தில் இந்த திரையரங்கு முற்றிலும் இடிக்கப்பட்டு விட்டது. சென்னையைச் சேர்ந்த ஒரு பெரிய ஜவுளி நிறுவனம் இந்த இடத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் புகழ்பெற்று விளங்கிய பல திரையரங்குகள் தற்போது இல்லை. இம்பீரியல், சிடிசினிமா, நியூசினிமா, சந்திரா, போத்திராஜா, சிந்தாமணி,தீபா, ரூபா, தினமணி, விஜயலெட்சுமி, வீரலெட்சுமி, கதிர்வேல், பத்மா, லெட்சுமி, சோனைமுத்தையா, என பல திரையரங்குகள் தற்போது திருமண மண்டபங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறியுள்ளன.
இதற்குக் காரணம் தான் என்ன? ஒரு காலத்தில் ஒரு திரைப்படம் மூன்று ஆண்டுகள் ஒரே திரையரங்கில் திரையிடப்பட்ட காலம் போய் ஒரே திரையரங்களில் ஒரே நாளில் இரண்டு படங்கள் திரையிடும் நிலைமைக்கு தமிழ் சினிமா உலகம் தள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கதையற்ற மசாலாத்தனத்துடன் எடுக்கப்படும் படங்களினாலும், ஒரு பக்கம் 20 ரூபாய்க்கு 5 படங்களைத் தரும் திருட்டு டிவிடியினாலும், மறுபக்கம் படம் பார்க்க வருபவர்களின் பர்சை பதம் பார்க்கும் திரையரங்க கட்டணங்களினாலும் திரையிரங்குகள் பெரும்பாலும் ஈ ஓட்டிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் பிக் சினிமா, அட்லாப்ஸ் என்ற அடைமொழிகளோடு புதிய திரையரங்குகள் அங்காங்கே தோன்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை என்பது குறைவு. திரையரங்குகளால் உயர்ந்த பலர் அத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
அன்றைய காலத்தில் 70 லட்ச ரூபாயில் பிரம்மாண்டமாக சந்திரலேகா என்ற படத்தை ஜெமினி தயாரித்தது. எதிர்பார்த்த வெற்றியை அப்படம் தரவில்லை. ஆனால், குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் வெள்ளிவிழா கண்டது. ஆனால், இன்றைய காலத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் கதாநாயகனுக்கு தந்து படம் எடுக்கும் நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளதால், இந்த பணத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை டிக்கெட் கட்டணங்களாக தியேட்டரில் வசூலிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை சினிமா ரசிகர்கள் சுமத்துகிறார்கள். கட்டண உயர்வால் கூட்டம் குறைவதால் தான் திரையரங்குகள் மூடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார்கள்.
மதுரையில் ஒரு படம் வெற்றிப் பெற்றதால் தான் தமிழகம் முழுவதும் அப்படம் குறித்த நல்ல அபிப்பிராயம் சொல்லப்படும். அப்படிப்பட்ட ரசிக மகாஜனங்களின் காலடிப்பட்ட பல திரையரங்குகளின் அஸ்திவாரங்கள் இருந்த இடங்கள் புல் முளைத்துக்காணப்படுகின்றன. இந்த கவிதையைப் படிக்கும் போதெல்லாம் பலருடைய மனசில் வந்துபோகும் டூரிங் தியேட்டர்கள்!
“டூரிங் தியேட்டரில்
படம் பார்த்து
நாளானதை விட
டூரிங் தியேட்டரே பார்த்து
வெகுநாளாகிப்போச்சு!
லேபிள்கள்:
மூடுவிழா திரையரங்குகள்
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
விரிசல் விழுந்து இடிய ஆரம்பித்துள்ள மதுரை காந்திமியூசியம்
வெளியில் இருந்து பார்க்கும் போது சங்கு போல வெண்மையோடு காட்சி தரும் மதுரை காந்தி மியூசியத்தின்(அருங்காட்சியகம்) உள்பகுதி இடிந்து காரைகள் உதிர்ந்து ஒழுகி வருகிறது. காந்திமியூசியத்தைப் புனரமைப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள 1.25 கோடி ரூபாய் நிதியில் அஸ்தி, அமருவதற்காக காலரி வேலைகள் நடைபெறுகிறது. ஆனால், காந்தி மியூசியம் பழுது பார்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை என்றவுடன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாபகத்திற்கு மதுரை காந்தி மியூசியம் தான்.
காந்தி அருங்காட்சியகம் தில்லி,மும்பை, பாட்னா, கொல்கொத்தா, புனே, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் மதுரையில் தான் அமைக்கப்பட்டது. மதுரையில் கடந்த 1959 ஆம் ஆண்டு ஏப்-15 ம் தேதி ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
ராணி மங்கம்மாள் அரண்மனை
மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளின் அரண்மனையாக 13.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த இடம், புதுதில்லியில் உள்ள, அகிலஇந்திய காந்திய ஸ்மாரட் நிதிக்கு நன்கொடையாக தமிழக அரசு வழங்கியது. அதில் தான் மகாத்மா காந்தியின் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரியவகை புகைப்படங்கள், அவரது மூக்குக்கண்ணாடி,ராட்டையில் நூற்றநூல், அவர் பயன்படுத்திய கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காந்தியின் நினைவைச் சுமந்து கொண்டு நிற்கும் இந்த அருங்காட்சியகத்தின் உள்பகுதிகள் சேதமடைந்து காரைகள் உதிர்ந்து விழுகின்றன. அத்துடன் மேல்பகுதியில் இருந்து தண்ணீர் உள் பகுதியில் இறங்கி அருங்காட்சியகத்தின் பல பகுதிகள் நீரால் ஊறிப்போய் உள்ளது. ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பார்வையிடும் காந்தி அருங்காட்சியகம், தற்போது பள்ளிக்குழந்தைகளால் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் சேதமான பகுதிகள் இடிந்து விழுந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக பல நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் கழிப்பறைகளுக்கு பாதாளச்சாக்கடை இணைப்பு கிடையாது. இதனால் நிரம்பி வழியும் சாக்கடை நீரை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தும் பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
ரூ.6.2 கோடியில் புனரமைக்கத்திட்டம்
காலையில் யோகா நடைபெறும் நேரத்தில் கழிப்பறை திறக்கப்படாதால் அவசரத்திற்கு காந்தி அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதி முழுவதும் அசுத்தப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மதுபாட்டில்கள் மட்டுமின்றி இரவில் பெண்களையும் அழைத்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து விடுவதும், அவர்களைப் பிடித்து காவலர்கள் வெளியேற்றுவதும் தொடர்கதையாக உள்ளது.
காந்திமியூசியத்தின் பொன்விழா ஆண்டையொட்டி அருங்காட்சியகத்தை புனரமைத்து விரிவுபடுத்துவதற்கும், கேலரிகள் அமைப்பதற்கும், நூலகத்தை விரிவுபடுத்தவும்,சாலை அமைக்கவும், வாகனக்காப்பகம்,பாதாளச்சாக்கடை திட்டம், பாதுகாவலர்களுக்கு அறை உள்ளிட்டவையுடன் ரூ.6.2 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிபுணர் குழு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.25 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
இந்த நிதியைக் கொண்டு தற்போது காந்தி அருங்காட்சியகத்தைத் தவிர மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. காந்தி அருங்காட்சியகம் புனரமைப்பு என வாங்கப்பட்ட நிதியை அருங்காட்சியகத்தின் வெளியே உள்ள அஸ்தி மண்டபப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் அதன் அருகில் உள்ள இரண்டு கட்டிடங்களின் மேற்கூரை அமைக்கும் பணியும், கேலரியை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
காந்திமியூசியம் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சேரிப்புலிகளின் அமைப்பின் மாநில அமைப்பாளர் க.திலீபன் கூறுகையில், காந்திமியூசியத்தின் நேரத்திற்கும், அங்குள்ள நூலகத்தின் நேரத்திற்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நூலகம் செயல்படுகிறது. அதன் பின் மாலை 4 மணி வரை மூடப்படுகிறது. அதன் பிறகு திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை செயல்படுகிறது. ஆனால், காந்திமியூசியம் காலை 10 மணிக்கு தான் திறக்கப்பட்டு மாலை 5.30 மணியோடு மூடப்படுகிறது. ஆகவே, நூலகம் திறக்கப்படும் நேரம் சரிசெய்யப்பட வேண்டும். அத்துடன் சமூகவிரோதிகள் இரவில் காந்திமியூசியத்திற்குள் நுழையாதவாறு சுற்றுச்சுவரை உயர்த்திக்கட்ட வேண்டும். கழிப்பறைகளை காலையில் 9 மணிக்குத் தான் திறக்கிறார்கள். யோகா, நடைபயிற்சிக்கு வருபவர்கள் பலர் கழிப்பறை இல்லாத காரணத்தால் இயற்கை உபாதைகளை வெட்டவெளியிலேயே செய்து விடுவதால் காந்திமியூசியத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பொன்விழா கொண்டாடிய அருங்காட்சியகத்தில் பாதாளச்சாக்கடை இணைப்பு இல்லை. இதன் காரணமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வெளிநாட்டு பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்திய காந்தியடிகளின் பெயரில் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.
மாநில அரசு நிதி ஒதுக்கும்
மத்தியஅரசு ஒதுக்கியுள்ள நிதியில் சேதமடைந்துள்ள அருங்காட்சியகப் பணிகள் நடைபெறுமா என காந்திமியூசியத்தின் செயலாளர் ஆர்.ரெங்கசாமியிடம் கேட்டதற்கு, இது டெக்னிக்கல் மேட்டர் என்று கூறியவர், 13 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள காந்திமியூசியத்தைப் புனரமைக்க மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 1.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் பணிகள் நடைபெற்று வருகிறது. காந்திமியூசியத்தின் சுற்றுச்சுவர் எழுப்பப்படும். இப்பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யும். இத்துடன் தமிழக அரசு சார்பில் ரூ. 2.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. இந்த நிதியோடு 20 சதவீத நிதியை காந்திமியூசியப்பங்காக செலுத்தி இப்பணி நிறைவடையும்.ஏற்கனவே, 20 லட்ச ரூபாயை அருங்காட்சியகத்தின் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் வழங்கியுள்ளார். இப்பணியை சிறப்புடன் முடித்திட அவர் திட்டமிட்டுள்ளார். ஆகவே, அருங்காட்சியகமும் பழுது நீக்கப்படும் என அவர் கூறினார். எப்போது இப்பணிகள் முடிவடையும் எனக்கேட்டதற்கு, முதல்கட்டப்பணி அக்-2 ம் தேதிக்குள் முடிவடையும் என செயலாளர் ஆர்.ரெங்கசாமி பதிலளித்தார்.
லேபிள்கள்:
இடிய ஆரம்பித்துள்ள மதுரை காந்திமியூசியம்
ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011
சுதந்திரம் எப்படியிருக்கும்?
வான்வெளி பயணம் போல
முதுகில் தூக்க முடியாத
சுமையோடு
பள்ளிச் சென்று திரும்பிய பின்
முகம் கழுவி
சிகை திருத்தி
டியூசன் சென்று
பாடங்களைப் படித்து விட்டு
வீடு வந்து
பள்ளி வீட்டுப்பாடங்களை
இரண்டு மணி நேரமாய்
எழுதி முடித்து
கண்ணசரப் போகும் முன்
பாரதி கேட்டாள்
“சுதந்திரம் என்றால் எப்படியிருக்கும்?“
வீட்டின் முகட்டில்
வளர்க்கப்பட்டு வரும் புறாக்களில் இரண்டு
கூண்டில் கதவு விலகி திடீரென
சடசடத்து பறந்து போன போது
ஒன்றின் சிறகில் இருந்து பறந்து வந்த
இறகை எடுத்துப் பார்த்து
சுதந்திரம்
இப்படி இருக்குமா
என மீண்டும் கேட்டாள்.
ஆரஞ்சு மிட்டாய் வடிவத்தில்
பள்ளியில் காட்டும்
சுதந்திரத்தை விட
இது தேவலையென நினைத்து
இருக்கும் என்றேன்.
பிறகெதற்கு
சுதந்திரத்தை
அடைத்து வளர்க்கிறாய்
என்றாள்.
லேபிள்கள்:
சுதந்திரத்திருநாள் கவிதை
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
கான்கீரிட் காடுகளாக்கப்பட்ட தமிழக நிலங்கள்
நிலங்கள் என்பவை ஐந்து வகைப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என்றும்,வெம்மை உற்ற நிலம் பாலை என்றும் , காடும் காடு சார்ந்த நிலமும் முல்லையென்றும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஐவகை நிலங்களையும் மோசடி செய்து சுருட்டியவர்கள் சிறைச்சாலைகளுக்கும், ஜாமீன் பெற நீதிமன்றங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். வட்டம், குட்டம் துவங்கி முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியே இவ்வில்லங்கத்தில் சிக்கியிருப்பது நிலத்தின் மதிப்பை ஊருக்கு உணர்த்துகிறது.
நாற்பது வயத்தில் வீடு கட்டவேண்டும் என்பது ஒரு காலத்தில் கனவாய் இருந்தது. ஆனால், ஆயுள் முடிந்தாலும் நிலம் வாங்க முடியாத நிலைக்கு விலை உயர்ந்து நிற்கிறது. எந்த தொலைக்காட்சியைத் திறந்தாலும்,“ பேருந்துவசதி, மருத்துவவசதி, சுடுகாட்டு“ வசதியுடன் பிளாட்டுகள் தயாராக இருப்பதாக பெரிய திரை ,சின்னத்திரை பிரபலங்கள் பேசிக்கொண்டேயிருக்கின்றனர்.
கான்கீரிட் காடுகள்
“ நிலம் என்னும் நல்லாள்“ இப்போது ரியல் எஸ்டேட் நிலச்சுரண்டல்காரர்களிடம் சிக்கித் தவிக்கிறாள். நில உச்சவரம்பு சட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் வளைக்கப்பட்ட நிலங்களில் கல்லூரிகளும், பள்ளிகளும், பிளாட்டுகளுமாக தமிழகத்தின் பசுமை பகுதிகள் கான்கீரிட் காடுகளாக மாற்றப்பட்டு விட்டன. இதன் காரணமாக உணவு உற்பத்தி தமிழகத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்ற பாடல் பழங்கதையாய் போகிறது என்பதற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக இருந்த சரத்பவார் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை சான்றாக உள்ளது. “இந்தியாவின் அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது“ என்று அவர் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியிருந்தார். தமிழகத்தில் கடந்த 2004 - 2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61 லட்சத்து 46 ஆயிரத்து 44 டன்கள் ஆகும். ஆனால், 2005-2006-ல் 61 லட்சத்து16 ஆயிரத்து 145 டன்களாக அது குறைந்து போனது.
ஆய்வு நூல்கள்
நிலமோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், நிலச்சீர்த்திருத்தம் சம்பந்தமாகவோ, நிலக்குவியல் குறித்தோ, ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட 12 லட்சம் பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதோரிடம் சிக்கியிருப்பது குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நிலக்குவியலைத் தடுப்பதன் மூலமே, விவசாயத்தில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்க முடியும். நிலக்குவியலை ஒழிப்பதென்பது நிலப்பிரபுத்துவத்தின் அடித்தளத்தை தகர்க்கும் காரியமாகும். ஆசிய கண்டத்தில் ஏற்கனவே ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ நிலக்குவியல் முறை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளினால் நிலச்சீர்த்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதை கேரளா, மேற்கு வங்கம் மாநில அரசுகளே மிகச்சரியாக செய்தன. இம்மாநிலங்களைத் தவிர கர்நாடகத்திலும், தமிழகத்திலும் நிலச்சீர்த்திருத்தம் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து 1970 ஆண்டுகள் வரை மேற்கொள்ளப்பட்டன.
நில உடமை முறையில் நிலக்குவியல் ஏற்படாமல் நில உச்சவரம்பு விதித்து உபரி நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இந்த உபரி நிலங்களைப் பெற்று உற்பத்தி திறனைப் பெருக்கமுடியும் என்பதன் அடிப்படையிலேயே நிலச்சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலச்சீர்த்திருத்தம் குறித்த ஆய்வுகள் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமி மேற்கொண்டு நூல்களாக வெளியிடப்படடள்ளது. பீகார், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், பஞ்சாப்,அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தம் குறித்த ஆய்வுகள் இதுவரை எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி "தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் - முடிவடையாத கடமை" என்ற தலைப்பில் (2003) தமிழ்நாடு பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் 16 ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்நாட்டு நிலசீர்திருத்தத்தின் பல அம்சங்களை ஆராய்கின்றன.
இடதுசாரிகளால் சாத்தியமான நிலச்சீர்த்திருத்தம்
உழுபனுக்கே நிலம் என்ற முழக்கத்துடன் இடதுசாரிகள் எழுப்பிய முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இதையொட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக வலுவானப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாகவே மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தஞ்சைத்தரணியில் பி.சீனிவாசராவ் நடத்திய நிலமீட்சிப் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்தில் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றது என்பது காலத்தின் பதிவாக உள்ளது.
தமிழ்நாடு நிலச்சீர்திருத்தம் (நில உச்சவரம்பு சட்டம்) 1960 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டார்டு ஏக்கர் என நில உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இந்த 1970 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் 15 ஏக்கராக குறைக்கப்பட்டது. இது மறுபடியும் 1972 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி பினாமி உடமை மாற்றங்களை செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பினாமி மாற்று தடுப்பு சட்டம் 1988 ஆம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்டது. இது பினாமி மாற்றங்களை கிரிமினல் குற்றமாக அறிவித்து அத்தகைய பினாமி மாற்றங்களுக்கு மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
தலித்துகளிடம் உள்ளது எவ்வளவு நிலம்?
நிலக்குவியல் வைத்துள்ளவர்கள் பினாமி பெயர்களில் மாற்றம் செய்தாலே தண்டனை என சட்டமியற்றப்பட்ட நிலையில், நிலஅபகரிப்பு மன்னர்கள் காவல்துறை வசம் தற்போது சிக்கியுள்ளனர். இவர்களால் தமிழகத்தில் விவசாயம் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டது. நில அபகரிப்பு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளில சென்னை மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையில் மட்டும் 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற காவல்நிலையங்களில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வழக்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.
தங்கள் சொந்த நிலங்களை இழந்து பிழைப்புத் தேடி நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நிலம் சாதிய அமைப்போடு பிணைக்கப்பட்டுள்ளதால் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீதம் 19.18 என்ற நிலையில் 7.1 சதவீதம் பேரிடம் தான் நிலம் பெயரளவில் உள்ளது. அந்த நிலங்களும் தற்போது ஆதிக்க சாதியர்களிடம் சிக்கியுள்ளது. சோவியத் ரஷ்யாவின் முதலாளித்து வளர்ச்சி பற்றி ஆராய்ந்த மாமேதை லெனின், “நிலம் சரக்காக மாற்றப்படுகிறது “ எனக்குறிப்பிட்டது தமிழகத்திற்கு பொருத்தமாகத் தான் இருக்கிறது.
“ வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்,நெல் உயரக் குடி உயரும்,குடி உயரக் கோன் உயரும் என ஒளவை கூறியது போல் அரசு உயர விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படியென்றால் நிலங்கள்பாதுகாக்கப்பட வேண்டும். நிலமீட்பில் ஈடுபடும் அரசு அதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
லேபிள்கள்:
நிலச்சூறையாடல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









