ஞாயிறு, 8 ஜூன், 2014

ரூ.9.70 கோடி செலவிலான மதுரை ஆம்னி பேருந்து நிலையம் : விசாரணைக் குழு அறிக்கையால் பதறும் மாநகராட்சி அதிகாரிகள்


தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்தமதுரை ஆம்னி பேருந்து நிலையத்தினைக் கட்ட மாநகராட்சியின் பொதுநிதியான 9.70 கோடி ரூபாய் செலவுசெய்யும் அதிகாரத்தை மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் அதிகாரிகளுக்கு யார் கொடுத்தது என்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்துள்ளது.
முதல்வரின் உத்தரவின் கீழ் மதுரையில் ஆய்வு செய்து நகராட்சி நிர்வாக தனிப்படை அதிகாரிகள் கொடுத்த அறிக்கை தற்போது பலரின் பதவிகளுக்கு கெடு வைத்துள்ளது.மதுரையில் வெளியூர் பேருந்துகள் தற்போது பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுவதால் பொதுமக்களும், பயணிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகிலேயே வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதன்படி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 11 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையில் இருந்தே முதல்வர் ஜெயலலிதா காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார். இந்தபேருந்து நிலைய விவகாரம் தான்தற்போது கிணறு வெட்ட பூதம்கிளம்பியது போல கிளம்பியுள்ளது.மதுரை மாநகராட்சி நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரை மாநகராட்சியின் நிர்வாகம் குறிப்பிடத்தக்க முறையில் நடைபெற்று வந்தது. ஏ.கார்த்திக் ஐஏஎஸ், ஹர்சகாய் மீனாஐஏஎஸ் ஆகியோர் மட்டுமே கடைசியாக பணிபுரிந்த நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவார்கள்.
அதன் பின் கிரண்குமார் குர்ராலாஎன்பவர் தான் மதுரை மாநகராட்சியில் நேரடி நியமன ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். நேர்மையாக செயல்பட்ட காரணத்தால் இரண்டே மாதங்களில் மதுரையில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார். அவர் எழுதி அனுப்பிய ஒரு அறிக்கைதான் தற்போது மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ரூ.1 கோடிக்குள் மட்டுமே மாநகராட்சியின் பொதுநிதியை பயன்படுத்தி திட்டங்கள் நிறைவேற்ற முடியும்.
அதற்கு மேல் மதிப்பிடப்படும் திட்டங்களுக்கு தமிழக அரசின் அனுமதி அல்லது தமிழக அரசின் நிதிஉதவி பெற வேண்டும். ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தில் அதைப் பின்பற்றாமல் முறைகேடாக பணி நடந்ததாகவும், தமிழக அரசு விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் கிரண்குமார் குர்ராலா அனுப்பிய புகார் தற்போது விசாரணை வளையத்தினையும் தாண்டி நடவடிக்கைக்குப் போகிறது. சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரக தனிப்படை அதிகாரிகள் ஐந்து பேர் மதுரையில் இரண்டுநாட்கள் தங்கி ஆய்வு செய்து அறிக்கையைத் தயாரித்து முதல்வரிடம் வழங்கியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு விபரங்கள் வெளியாகியுள்ளன.
நூதன ஏமாற்று
மதுரையில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதலில் ரூ.26கோடி வரை அதற்கான மதிப்பீடுதயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் அனுமதியை தவிர்ப்பதற்காக ஒரேபணியை பல வகையாக பிரித்து ரூ.99 லட்சத்து 99 ஆயிரத்து 999என்ற ரீதியில் தான் பெரும்பாலான மதிப்பீடுகள் தயாராகின. எத்தனை மதிப்பீடுகள் இந்த பேருந்துநிலையத்திற்கு என தயாரிக்கப்பட்டது என்ற விபரங்களை சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரக தனிப்படை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். சுமார் ரூ.9.70 கோடி செலவில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட இந்த பேருந்து நிலையத்தினை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளராக இருந்த ஒருவர் அனுப்பியிருந்த குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படாத நிலையில், முதல்வர் எப்படி இந்த பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு அனுமதியளித்தார் என்ற கேள்வியும் தற்போது அதிகாரிகள் மட்டத்தில் உலவுகிறது. இந்த ஊழல் முறைகேடுகளுக்குப் பின்புலமாக பல அதிகாரிகள் இருப்பதையும் நகராட்சி நிர்வாக ஆணையரக அதிகாரிகள் குறிப்பெடுத்துள்ளனர்.
`பொறுப்பு’ அதிகாரிகள்
மதுரை மாநகராட்சியின் அனைத்து விரிவாக்கத் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் பொறியியல் துறையின் முதன்மைப் பணியாகும். இத்துறையின் கீழ் தான் மதுரையின் பல வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பலர் `பொறுப்பு’என்ற பதவியுடன் பல ஆண்டுகளாகபணியாற்றி வருகிறார்கள். உதாரணத்திற்கு இளநிலை பொறியாளர்நிலையில் உள்ள முருகேசபாண்டியன் மதுரை வடக்கு மண்டல உதவி ஆணையாளராகவும், உதவியாளர் நிலையில் உள்ள தேவதாஸ் இன்றுவரை தெற்கு மண்டல உதவி ஆணையாளராகவும் பணி புரிந்து வருகின்றனர்.
இன்னும் உதவிப் பொறியாளராக இருக்கக்கூடிய எஸ்.அரசு என்பவர் செயற்பொறியாளர் என்ற பொறுப்பில் பணிபுரிகிறார். இளநிலைப் பொறியாளராக பணிபுரியக்கூடிய சேகர் என்பவர் மதுரை வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர் என்ற நிலையில் இருந்து பணிபுரிந்து வருகிறார். இதே உதவி செயற்பொறியாளர் நிலையில் உள்ள இராஜேந்திரன், சந்திரசேகரன் ஆகியோர் இன்றைய நிலையில் செயற்பொறியாளர் பொறுப்பு என்ற பதவியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அடிப்படையில் மஸ்தூர் கிரேட் 1 லேபராகவும், தொழில்நுட்ப உதவியாளராகவுமே அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை விடக்கொடுமை என்னவென்றால், கடந்த 2001 ஆம் ஆண்டுஜனவரியில் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ககன்தீப் சிங் பேடிஐ.ஏ.எஸ், 12 உதவிப் பொறியாளர்களை நேரடி நியமனம் செய்த பின்புதான் பி.இ என்ற கல்வித்தகுதியை பலர் பூர்த்தி செய்தனர் என்றும்கூறப்படுகிறது. நேரடி நியமனம் பெற்ற இந்த 12 உதவிப் பொறியாளர்களுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்குப் பின்பும் பணிமூப்பு பட்டியலை முறைப்படி தயாரித்து பதவிஉயர்வு வழங்கப்படவில்லை. முறையான பதவி உயர்வு பெற வேண்டியவர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள நிலையில், தகுதியில்லாத பலர் பொறுப்பு அதிகாரிகளாக இருந்து மாநகராட்சியை கோலோச்சி வருகின்றனர் என்ற விபரங்களையும் தனிப்படை குறிப்பெடுத்துள்ளது.
ஒருவர் ஒரு பதவியில் பொறுப்பு அலுவலராக 3 மாதங்களுக்கு மிகாமல் இருக்கலாம்; ஆனால், மதுரை மாநகராட்சியில் பல பத்தாண்டு காலம் பலர் பொறுப்பு அலுவலராக நீடிப்பதில் மர்மம் நீடிக்கிறது. குறிப்பாக, மதுரை மாநகராட்சியின் முக்கிய பொறுப்பான நகரப் பொறியாளர் பொறுப்பு பல ஆண்டுகளாக பொறுப்பு அலுவலராலேயே நிரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபரங்களையும் தனிப்படை அதிகாரிகள் திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை போன்ற வளர்ந்த நகரத்திற்கு தலைமைப் பொறுப்பில் உள்ள பொறியாளர், செயற்பொறியாளர் நிலையில் இல்லாமல் தலைமைப்பொறியாளர் நிலையில் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும். திட்ட மதிப்பீடுகளைசம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர்கள் சுயமாக திட்டமிடாமல், ஒப்பந்தக்காரர்களின் பொறியாளர்கள் திட்டமதிப்பீட்டில் கையெழுத்திடும் முறையைத் தவிர்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பொறுப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய முறையான, நேர்மையான தொழில்நுட்ப குழுவை பொதுப்பணித்துறை மூலம் நியமித்து முறைகேடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவிப்பொறியாளர்கள் நேரடிநியமனத்தில் நடைபெற்ற விதி மீறல்கள், குளறுபடிகளுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை இக்குழு பரிந்துரைத்துள்ளதாக மாநகராட்சி வட்டாரத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகள் சிலர் கூறினர். இப்பிரச்சனை குறித்து எழுதிய பல பத்திரிகையாளர்களின் குரல்கள், கரன்சிக் கட்டுகளால் சத்தமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளர் கிரண்குமார் குர்ராலா எழுப்பிய நேர்மையான புகாரின் மீது விசாரணை நடத்த உத்தரவிட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனிப்படை அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் ?
- ப.கவிதா குமார்
( ஜூன் 3- தீக்கதிர் )

கருத்துகள் இல்லை: