வியாழன், 11 செப்டம்பர், 2014

உ.சகாயம் மாற்றம் அறை மட்டுமா காரணம்?

 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் கோ ஆப்டெக்ஸ்  கிளைக்கு இடம் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கிளை மேலாளர் சோமசுந்தரத்தைத் தாக்கிய  ஆளுங்கட்சியினர்  மீது நடவடிக்கை எடுப்பதற்கு அத்துறையின் அமைச்சர் கோகுல இந்திரா தடையாக இருப்பது குறித்து உ.சகாயம் ஐ.ஏ.எஸ்,  தமிழக அரசின் முதன்மை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு எழுதிய கடிதத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லாப திசையில் கோ ஆப் டெக்ஸ்
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் மிக நேர்மையான அதிகாரி எனப்பெயர் எடுத்தவர் உ.சகாயம். இவர் மதுரை மாவட்ட ஆட்சியராக  இருந்த போது மேலூரில் நடந்த கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தி அரசுக்கு அறிக்கை அளித்தன் விளைவாக பல கோடி கிரானைட் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
மதுரையின் ஆட்சியராக இருந்த உ.சகாயத்தை தமிழக அரசு, கோ ஆப் டெக்ஸ்   நிர்வாக இயக்குநராக கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென பணி மாறுதல் செய்தது.  பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தினை லாபத்தின் திசை நோக்கி உ.சகாயம் திருப்பினர் என்றால் மிகையில்லை.
கால, காலமாய் நஷ்டத்தில் இயங்கி வந்த கோ ஆப் டெக்ஸ்  கடந்த 2012 - 13ம் ஆண்டு, 2 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியது. அத்துடன்  200 கோடியில் இருந்த விற்பனை  300 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு மட்டும் 14 கோடி ரூபாய் லாபம் கோ ஆப் டெக்ஸ் மூலம்  கிடைத்தது. இதிலிருந்து ஒரு கோடியை, நெசவாளர்களுக்கு ஊக்கத் தொகையாக உ.சகாயம்  வழங்கினார் என்பது குறிப்பிடத்க்கது.
வெளிச்சத்திற்கு வந்த
இலவச வேட்டி சேலை ஊழல்

கால, காலமாய் நெசவு செய்யும் நெசவாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவர்கள் நெய்த துணியில்  நெசவாளர்கள் புகைப்படத்தை இணைக்க நடவடிக்கை எடுத்தார். தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டியை அனைத்து தமிழர்களும் அணிய வேண்டும் என்பதற்காக வேட்டி தினத்தை கோ ஆப் டெக்ஸ் மூலம்  அறிவித்து அதன் மூலம் இளைஞர்களையும் வேட்டியின் திசைநோக்கி திருப்பினார்.  அத்துறையில் நடைபெற்ற இலவச வேட்டி சேலை ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததும் உ.சகாயம் ஐ.ஏ.எஸ். தான்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் பிரபல ஜவுளி உற்பத்தி ஆலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்காக இந்த ஆலையில் கடந்த ஆண்டு நிறைய வேட்டி, சேலைகள் தயாரிக்கப்பட்டது. ஆனால் அவற்றை பொதுமக்களுக்கு முறையாக விநியோகிக்காமல் ஆலையில் பதுக்கி வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலையில் உள்ள முத்திரையை அழித்துவிட்டு புதிய முத்திரை பதித்து, மீண்டும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அந்த ஜவுளி ஆலை திட்டமிட்டிருந்தாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் அந்த ஆலையில் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகள் முறையாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படாமல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் சகாயத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சகாயம் மேற்கொண்ட ஆய்வில் இந்த மோசடி உறுதி செய்யப்பட்டடுள்ளது. மேலும் ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2 நாட்களில் 2 துறைக்கு மாற்றம்
இப்படி அதிரடியாக பணியாற்றி கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் நற்பெயரை உயர்த்திய உ.சகாயம் அப்பணியில் இருந்து அமைச்சர் எஸ்.கோகுல இந்திராவின் தூண்டுதலால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்ற புகார்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இதில் கொடுமை என்னவென்றால், அவருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய மற்றும் ஹோமியோபதி துறைக்கு இயக்குநராக பொறுப்பதற்கு முன்பே இரண்டு நாளுக்குள் சென்னையில் உள்ள அறிவியல்  நகரத் திட்டத்துறையின் துணைத்தலைவராக மாற்றப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்குள் அவர் இரண்டு துறைக்கு அவர் மாற்றப்பட்டதன் பின்னணியில் இருப்பதை விசாரித்தோம்.
கிளை மேலாளர் மீது தாக்குதல்
கோ ஆப் டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் தனக்கு அறை ஒதுக்கும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான எஸ்.கோகுல இந்திரா கேட்டதற்கு, இது நாள் வரை இங்கு எந்த அமைச்சருக்கும் இங்கு அறை ஒதுக்கப்படவில்லையென்பதுடன், அறை ஒதுக்கினால் அங்கு கட்சிக்காரர்கள் திரள்வார்கள். இதனால் ஊழியர்களின் பணிகள் பாதிக்கப்படும் என்று உ.சகாயம் மறுத்துள்ளார்.
கோ ஆப் டெக்ஸ் மண்டல விற்பனை மேலாளர்கள் 11 பேருக்கு கார் வாங்கி முதல்வர் ஜெயலலிதா கையால் வழங்க வேண்டும் என்று அமைச்சர் நினைத்தற்கும், தேவையின்றி கார் வாங்கி நிதியை வீணடிக்க வேண்டாம் என்று அரசிடம் உ.சகாயம்  அறிவுறுத்தியுள்ளார்.
உ.சகாயம் இடமாறுதல் செய்யப்பட்டதற்கு இவைகள் மட்டும் காரணமல்ல. இந்த மாற்றத்தின் பின்னணியில் மிக முக்கியமான விஷயமாக உள்ளது கோ ஆப் டெக்ஸ் கிளை மேலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கிளை மேலாளரான சோமசுந்தரம் என்பவரை  அதிமுகவைச் சேர்ந்த நகராட்சித்தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உ.சகாயம் ,  தமிழக காவல்துறை தலைவர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு  கடிதம் எழுதியுள்ளார். இதனால் கடுப்பான  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான எஸ்.கோகுல இந்திரா, கிளைமேலாளர் சோமசுந்தரம் கொடுத்த புகாரை காவல்துறையிடம் இருந்து வாங்க அமைச்சர் வற்புறுத்தியதற்கு  உ.சகாயம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது துறையைச் சேர்ந்த  அதிகாரி ஒருவரை  ஓட ஓட விரட்டி அடித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவிடாமல்  அமைச்சர் தடுப்பது குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்துக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்  உ.சகாயம்  ஒரு புகார்  கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் விளைவே, உ.சகாயம் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்று திட்டவட்டமாகக் கூறப்படுகிறது.
பணிமாறுதலிலும் பழிவாங்குதல்
கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து உ.சகாயம் முதலில் மாறுதல் செய்யப்பட்ட இந்திய மற்றும் ஹோமியோபதி துறையில் தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர். இத்துறையின் கீழ் பல கல்லூரிகள் செயல்படுகின்றன. இத்துறையில் உ.சகாயத்தை விட்டால், அங்கு நடைபெறும் விஷயங்கள் வெளி உலகத்திற்கு வரும் என்பதால் அவர் 2 நாட்களில் 8 பேர் பணிபுரியும் சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள அறிவியல்  நகரத் திட்டத்துறையின் துணைத்தலைவராக மாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த துறையின் அலுவலகம் சென்னை காந்தி மண்டபம் சாலையில்  செயல்பட்டு வருகிறது. நேர்மையான அதிகாரிகள் இப்படி ஆட்சியாளர்களாலும், அமைச்சர்களாலும் பந்தாடப்படும் போது, அவர்களுக்கு ஆதரவான குரல் அனைத்துத் தரப்பில் இருந்தும் எழுப்பப்படுவதே ஜனநாயகத்திற்கு நல்லது. சமூகத்திற்கும் நல்லது.
- ப.கவிதா குமார்
( தீக்கதிரில் 9.9.2014 வெளியான எனது கட்டுரை )

கருத்துகள் இல்லை: