ஞாயிறு, 8 ஜூன், 2014

அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் கிடைக்குமா? கிடைத்தால் நவீனமயத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு செலவழிக்குமா?


அரசு நிறுவனங்கள் தொலைக்காட்சி சேனல் நடத்த அனுமதிக்கக் கூடாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ( டிராய் ) உத்தரவை மீறி தமிழக அரசின் கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.சமீபத்தில் மத்திய தகவல் மற் றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதி யிருந்தார். அக்கடிதத்தில்,“ டிஜிட்டல் உரிமம் பெற தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு சட்டப்படி முழுத் தகுதி உள்ளது. டிஜிட்டல் உரிமம் தரப்பட்டால்தான் ஏழை, நடுத்தர மக்கள் தரமான கேபிள் சேவை பெற முடியும். டிஜிட்டல் உரிமம் கோரி கடந்த 2012ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அரசு கேபிள் நிறுவனம் விண்ணப்பித்தது. அரசு கேபிளுக்கு பின்பு விண்ணப்பித்தவர்களுக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இதுவரை டிஜிட்டல் உரிமம் வழங்கப்படவில்லை ’’ என்று கடிதத்தில் எழுதியிருந்தார்.
டிராய் அறிவுறுத்தல்
கடந்த 2008ம் ஆண்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியது. அதில், “ மத்திய அமைச்சகங்களோ, மாநில அரசுத் துறைகளோ, மத்திய- மாநில அரசுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களோ, மத்திய-மாநில அரசின் சார்பு நிறுவனங்களோ அல்லது மத்திய- மாநில அரசுகள் தனியாருடன் இணைந்து கூட்டாகவோ அல்லது மத்திய-மாநில அரசு நிதி உதவியில் செயல்பட்டு வரும் எந்த ஒரு நிறுவனமோ சேனல் ஒளிபரப்பிலோ, கேபிள் விநியோகத்திலோ ஈடுபட அனுமதிக்கக்கூடாது’’ என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதன் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை என்றால் கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்று தமிழக அரசு இடைக்காலத்தடையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் உரிமம் கேட்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் 5-7-2012 அன்று மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தது.
கேபிள் கட்டுப்பாட்டு அறையின் நிலை
இந்தப் பின்னணியில் அனலாக் முறையில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுமளவிற்கு தமிழகத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடைபெற்று வருகிறதா என்ற கேள்வியை எழுப்பு வது அவசியமாக இருக்கிறது. உதா ரணத்திற்கு மதுரையைப் பொருத்த வரை கடந்த 2011 ஆம் ஆண்டு எல் லீஸ்நகர் பகுதியில் உள்ள சொசைட்டி கட்டிடத்தில் கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டது. இதில் வட் டாட்சியர், ஒரு வருவாய் ஆய்வாளர், டெக்னீசியன், 2 உதவியாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு சென்னை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது. இது போக, மேலும் வசூல் செய்வதற்கு 2 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு தினசரி 250 ரூபாய் வழங்கப்படுகிறது. வாடகை கால்டாக்சி மூலம் ஆபரேட்டர்களிடம் மாதம் தோறும் பணம் வசூல் செய்யப்படுகிறது. இதுவரை மூன்று வட்டாட்சியர்களும், மூன்று வருவாய் ஆய்வாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த அரசு கேபிள் டிவி கட்டுப் பாட்டு அறையில் உள்ள ஜெனரேட்டர், டிரான்ஸ்மீட்டர், இடிஎப்ஐ கருவி போன்றவற்றை மின்சாரம் போனால் ஜெனரேட்டர் மூலம் இயக்குவதற்கான டீசல், யூபிஎஸ்க்கான 10 பேட்டரிகள் ஆகியவை அனைத்தும் மதுரையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட் டர்கள் வாங்கித்தருவதாகும். இவற்றை சர்வீஸ் செய்யும் செலவையும் இவர்கள் தான் செய்து வருகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
கேபிள் செலவு
இது அலுவலகத்தில் இருந்து வீடுகளுக்கு வரும் கேபிள் வயர் அனைத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செலவில் தான் இணைக்கப்பட்டுள்ளது. மதுரை எல்லீஸ்நகரில் உள்ள அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் இருந்து கொட்டாம்பட்டி வரை 45 கி.மீ தூரம் வரை கேபிள் வயர்களும், உசிலம்பட்டி வரையிலான சுமார் 36 கி.மீ வரையிலான கேபிள் வயர்களும், கல்லுப்பட்டி சுமார் 30 கி.மீ வரையிலான கேபிள் வயர்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 1 மீட்டர் கேபிளின் விலை 12 ரூபாய். 1 கி.மீ தூரத்திற்கு கேபிள் இணைப்பைக் கொண்டு செல்வதற்கு 12 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதில் பாபின் ஸ்டே உள்ளிட்ட செலவிற்கு 3 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இதில், எந்தச் செலவையும் தமிழக அரசோ, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனமோ செய்யவில்லை. அனைத்துச் செலவையும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள்தான் செய்துள்ளனர். மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இது தான் நிலை. மாவட்டந்தோறும் இருக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து பொருட்களை வாங்காத தமிழக அரசு, தமிழகம் முழுவதும் டிஜிட்டல்மயமாக்க பல ஆயி ரம் கோடி ரூபாயைச் செலவு செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கொட்டும் வருமானம்
மதுரையில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் மாதம் சுமார் 30 இலட்ச ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இது போக மதுரை மாநகரில் இயங்கும் உள்ளூர் கேபிள் டிவிக்கள் ஐந்தின் மூலம் சேவை வரியில்லாமல் தலா 8.25 இலட்ச ரூபாய் கிடைத்து வருகிறது. இது தவிர மாவட்டத்தில் தாலூகாக்கள் வாரியாக இயங்கும் உள்ளூர் கேபிள் டிவிக்கள் மூலம் பணம் கொட்டுகிறது. இவ்வளவு பணம் வந்தாலும், கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைக்கான செலவுகள் கேபிள் ஆபரேட்டர்கள் தலையில்தான் விழுந்து வருகிறது.
போதுமான நிதி தேவை
அரசு கேபிள் டிவி டிஜிட்டல்மய மானால் அரசுக்கு மட்டுமல்ல, இணைப்பு பெறுவர்களுக்கும் செலவுதான். டிவியில் படம் பார்க்க வேண்டுமானால் வீடுகளில் செட்ஆப் பாக்ஸ் இல்லாமல் படம் பார்க்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் 1,500 ரூபாய் கூடுதலாகச் செலவு செய்து செட்ஆப் பாக்ஸ் வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். செட்டாப் பாக்ஸ் தயாரிப்பை கொரியா மற்றும் சீனா கம்பெனிகள் தான் தற்போது செய்து வருகின்றன.
இவற்றில் பழுது ஏற்பட்டால், அவற்றை சரிசெய்வதிலும் பிரச்சனை உள்ளது.முதலில் தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளை நவீனமயமாக்க போதுமான நிதியை தமிழக அரசு செலவு செய்ய வேண்டும் என்பதே கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கோரிக்கையாக உள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) உத்தரவை மீறி தமிழக அரசின் கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்படுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.
- ப. கவிதா குமார்
ஜூன் 7- தீக்கதிர் )

கருத்துகள் இல்லை: