ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இரவு நேரத்தில் நடத்தப்படும் நடனப்போட்டிகளைக் கண்டு கொதித்துப் போய் இந்த கட்டுரையை எழுதுகிறேன். குறிப்பாக எம்எம்(அதாங்க மானாடா, மயிலாடா) நிகழ்ச்சியின் போக்குகளைக் கண்டும், அதன் இயக்குர் குறித்தும் எழுத வேண்டும் என நீண்ட நாள் யோசனை இப்போது தான் நிறைவேறியுள்ளது.
டீ போடும் மாஸ்டரை யாரும் டீ மாஸ்டர் என அழைப்பதில்லை. புரோட்டா போடும் மாஸ்டரை யாரும் புரோட்டா மாஸ்டர் என்று அழைப்பதில்லை. ஹோட்டலில் சரக்கு மாஸ்டரையும் அப்படி அழைப்பதில்லை. பெயரைச்சொல்லித்தான் அழைப்பார்கள். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியில் மானாட, மயிலாட நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து இந்த புரோட்டா மாஸ்டர்களும் தங்கள் பெயருக்குப் பின் மாஸ்டரை கண்டிப்பாகப் போட வேண்டும் என போர்க்கொடி தூக்கி விட்டனர். இது என்னடா கஷ்ட காலமாகப்போச்சே என ஓணாசீர் மெஸ்சில் இருந்த பாயிடம்,உங்க புரோட்டா மாஸ்டருக்கு என்ன ஆச்சு எனக்கேட்டதற்கு, கமலஹாசன் குருநாதர் தங்கப்பன் தன் பெயருக்குப் பின் மாஸ்டர் என போடவில்லை. அதற்கு முன் இருந்த லலிதா, பத்மினி, ராகிணி யாரும் நடனத்தின் பெயரில் மாஸ்டர் எனப்போடவில்லை. ஆயிரம் படங்களுக்கு மேல் டான்ஸ் மாஸ்டராக இருந்த ரகுராம் தனது பெயருக்குப் பின்னால் மாஸ்டர் எனப்போடவில்லை.
மானாட,மயிலாட நிகழ்ச்சியின இயக்குநர் கலா, கலைஞர் தொலைக்காட்சியில் டைட்டில் கார்டில் “கலா மாஸ்டர்“ என போடுவதைப் பார்த்த புரோட்டா மாஸ்டர் விச்சு, தன்னோட பெயரோடு கட்டாயம் மாஸ்டர் என போட வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறான் என்று கூறினார்.
விஜய் டிவியில் சீனப்படங்களை தமிழாக்கம் செய்து போடுவார்கள். அதில் கராத்தே பள்ளியில் உள்ள ஒருவரை அனைவரும் மாஸ்டர், மாஸ்டர் எனக் கூப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள். குங்பு சண்டைக்காட்சியில் மாஸ்டர், ஆ, ஊ என சத்தம் போடுவார்கள். அது போல, மானாட மயிலாட நிகழ்ச்சியில், நாங்கள் இந்த மேடையில நிற்கிறதற்கு காரணமே கலா மாஸ்டர் தான் என கண்ணைக் கசக்கி பலர் புலம்பிக்கொண்டேயிருப்பார்கள். எந்த யுனிவர்சிட்டியில் பட்டம் வாங்கினார்கள் எனத்தெரியாது. கலா, நமீதா, குஷ்பு உள்ளிட்ட நடுவர்கள், ஆடுபவர்களுக்கு கெமிஸ்ட்ரி,சோஜியாலஜி பயாலஜி என பாடம் நடத்தி பெண்டு கழட்டி விடுவார்கள்.
இவர்களின் பிளாக் அன்ட் ஒயிட் ரவுண்ட், காப்பி ரவுண்ட், டீ ரவுண்ட்டு என கலா அடிக்கும் கூத்தைப் பார்த்து ஸ்கூல் பிள்ளைகளை அவங்க மிஸ்சுகளும் இப்படி ஆடு, அப்படி ஆடு என பல பள்ளிக்கூட ஆண்டுவிழாக்களில் பெண்ட கழட்டுகிறார்கள்.
சினிமாவில் ஒரு காலத்தில் நடனம் என்பது நளினமாக இருந்தது. 40 பாடல்களைக் கொண்ட பழைய எம்.கே.டி படங்களில் ஆண் குரலில் பாடும் போது அதற்கு ஆடும் பெண்ணும், அப்பாடலை மெல்ல வாயசைப்பார். மன்மதலீலையை வென்றார் உண்டோ என்ற பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி, மண்பாண்டம் செய்யும் தொழிலாளி களிமண்ணை மிதிப்பது போன்று ஆடிக்கொண்டிருப்பார். ஆனால், ஆடாமல் ஆடுபவர் பானுமதி தான். எம்ஜிஆரோ, சிவாஜியோ அவர்களுடன் டூயட் பாடும் பானுமதி, கையில் கட்டாயம் ஒரு செடி வைத்திருப்பார். தலையை ஆட்டியவாறு அவர் சொந்தக்குரலில் பாடும் போது அவர் கைகள் ஆடுவது தான் நாட்டியம். இந்த காட்சியில் சிவாஜி என்றால் அவர், பானுமதியின் தாடையை ஏந்தி குளோசப் ஷாட்டில் உதடும், கன்னமும் அதிர வாய் அசைந்து கொண்டிருப்பார். சிவாஜியின் டான்ஸ் என்பது ஒரு வகை. உத்தமபுரத்தின் படத்தில் அவர் நடனப்பெண்மணிகளுடன் இணைந்து ஆடும் யாரடி நீ மோகினி பாடல் புகழ்பெற்றது. பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தவறு செய்து விட்டால், ஆசிரியர் பிரம்பை எடுத்து கையை நீட்டு என்று கூறும் போது, குழந்தைகள் கையை நீட்டி அடிக்கும் போது இழுத்துக் கொள்வது போல, இரண்டு கைகளையும் அவர் நீட்டி, இழுத்து ஆடும் காட்சியும் அதற்கு அவர் போட்டிருக்கும் கவுனும் இன்னும் மறக்க முடியாது. பிளாக் அன்ட் ஒயிட் படத்தில் இப்படி என்றால் கலர் படங்களில் சிவாஜி காதல் காட்சியில் கதாநாயகி நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல, ஒரு காலை வைத்துக் கொண்டு ஆடுவார். ரொமான்ஸ்காட்சி என்றால் கதாநாயகியுடன் செடி அருகே கீழே அமர்ந்து வெளியே வரும் போது உதட்டைத் துடைப்பார். முத்தம் கொடுத்த காட்சி என்பதை உணர்த்த அவர் அப்படி செய்வார். ஆனால், ஜில் ஜில் ஜிகர்தண்டாவை சாப்பிட்டு விட்டு கடல்பாசி வாயில் ஒட்டியதை துடைப்பது போலத்தான் தெரியும்.
ஆனால் எம்ஜிஆர் நடனக்காட்சியில் கதாநாயகியின் அங்கங்களைப் பிடித்து அக்குபஞ்சர் செய்வது போல அட்டகாசம் செய்து கொண்டிருப்பார். குறிப்பாக, நடனக் காட்சியில் எம்ஜிஆர் ஒரு இடத்தில் நிற்கமாட்டார். சேரில் ஏறி குதிப்பார். இடதுகையை தரையில் ஊன்றி வலது கையை வானத்தை நோக்கி பாடும் பாடல் எல்லா படத்திலும் வரும். நாட்டிய பேரொளி பத்மினியையே, மன்னாதி மன்னன் படத்தில் டான்ஸ் ஆடி தோற்கடித்து விடும் நடனத்திறமை உள்ளவர் எம்ஜிஆர்.
அவர் சோகமாக பணம் படைத்தவன் படத்தில் கண் போன போக்கிலே கால் போகலாமா என தத்துவம் பாடிக்கொண்டிருக்கும் போது நாகேஷ் அடுத்த பக்கத்தில் இந்த பாட்டிற்கு டான்சில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருப்பார். இந்த காட்சி அமைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இது போல, காட்சி எம்ஜிஆர் படங்களில் மட்டும் வரும். மேடை நடனக்கலைஞர்கள் நாகேஷ் நடனத்திற்காக ஆட்களைத் தயார் செய்யும் அளவிற்கு அவரின் நடன அசைவு அவ்வளவு கிளாசிக்கானது. இதே போல சந்திரபாபு நடனமும் மேலைநாட்டு பாணியில் மிக அற்புதமாக இருக்கும். பழைய படங்களில் நடிகர் கமலஹாசன் நடன உதவி இயக்குநராக இருந்து வந்தவர் என்பதால் அனைத்து நடனங்களும் அவருக்கு அத்துபடி.
ஆனால், ரஜினிகாந்த் ஆடும் டான்ஸ் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும். முள்ளும், மலரும் படத்தில் இடம் பெற்ற ராமன் ஆண்டாலும், ராவணனும் ஆண்டாலும் என்ற பாடலுக்கு அவர் ஆடும் ஆட்டம் கராத்தே ஸ்டெப் போடுவது போலிருக்கும். அப்போது ஆரம்பித்த அவருடைய நடனபாணி, குருசிஷ்யன் படத்தில் சிங்கிடி சிங்கிடி எனக்கு என்ற பாடலுக்கு அவர் பிடித்த அபிநயம் இதே கராத்தே வகை தான். இந்த வகை நடனத்தை ஷங்கர் இயக்கிய எந்திரனிலும் கிராபிக்ஸ் மயத்தில் ரஜினி ஆடுவார்.
இவருக்குப் போட்டியாக இயக்குநர் கே.பாக்யராஜ், ஸ்கூல் டிரில் பிரியடில் இருந்து வந்தவர் போல கையையும், காலையும் அசைத்து ஆடும் நடனம் தமிழ் சினிமாவுக்கு புதுசு. இவருக்குக் கொஞ்சமும் சளைக்காத நடன அசைவை கொண்டவர் அஷ்டாவதனி டி.ராஜேந்தர். இடதுகாலை எடுக்காமல் வலது காலை மட்டும் எடுத்து அவர் ஆடும் ருத்ரதாண்டவம் பார்ப்பவர்களை பயமுறுத்தும். மும்தாஜ்க்கு போட்டியாக அவர் வீராசாமியில் போட்ட ஆட்டத்தைப் பார்த்து மைக்கல் ஜாக்சன் பயந்து போனதாகக் கூறப்பட்டது. இவர்களுக்கு மத்தியில் கரகத்தை தலையில் வைத்துக் கொண்டு கிராமிய ராஜன் நம்ம ராமராஜன் ஆடும் ஆட்டம், சித்திரைத்திருவிழாவின் போது நடத்தப்படும் ரங்கராட்டிணத்தின் உயரத்தில் உள்ள கிளிபொம்மை அசைவதைப்போலிருக்கும். பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை மட்டுமின்றி அதே கலரில் மேக்கப் போட்டுக் கொண்டு அவர் ஆடிய கரகாட்டக்காரன் படம் மதுரையில் ஒரு வருடத்திற்கு மேல் ஓடியது. பஞ்ச் வசனம் இன்று கதாநாயகன் பேசி நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தனது முதல் படத்திலேயே பஞ்ச் வசனத்தைத் துவக்கியவர் கவுண்டமணி. அவர் வாய் கொஞ்சம் நீளம் என்றாலும் அவர் டான்ஸ் ஆட காலை இழுத்து நீளம் காட்டுவதைப் பார்த்து ரசிக்காத மகாஜனங்களே இருக்க முடியாது. இன்றைய நடன இயக்குநர் ஸ்ரீதர், கவுண்டமணியின் நடன அசைவை பல படங்களில் புகுத்தி வருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இப்படி சம்பந்தா, சம்பந்தமில்லாத நடிகர்,நடிகைகளின் டான்ஸ் குறித்து இந்த கட்டுரையை எழுத வைத்த கலா மாஸ்டர் டான்ஸ் என்ற பெயரில் எம்எம் 6 வரை நடத்தும் நாடகத்திற்கு எப்போது தான் ரெட்கார்டு போடுவார்கள்?











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக