வியாழன், 22 டிசம்பர், 2011

சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் சு.வெங்கடேசனுக்கு (42) 2011ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சு.வெங்கடேசனின் சொந்த ஊர் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள ஹார்விப்பட்டியாகும். 16.3.1970ல் பிறந்தார். தமது ஆரம்பக்கல்வியை ஹார்விப்பட்டி நடுநிலைப்பள்ளியிலும், உயர்கல்வியை திருநகரில் உள்ள முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவரது தந்தை இரா.சுப்புராம், தாயார் நல்லம்மாள், இவருடன் உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரன், மூன்று சகோதரிகள். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி என்ற இருமகள்களும் உள்ளனர். காவல்கோட்டம் நாவல் மொத்தம் 1054 பக்கங்களைக் கொண்டது. காவல்கோட்டம் நாவல் ஆறு நூற்றாண்டு கால (1310-1910) மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டது. அரசியல், சமூகவியல், இன வரைவியல் கண்ணோட்டங்களுடன் அந்த வரலாற்றின் திருப்புமுனைகளையும், தீவிரமான தருணங்களையும் திரும்பிப்பார்க்கிற நாவல் இது. கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சித்தமிழ் ஒரு வரலாற்றுப்பார்வை உள்ளிட்ட ஏழு ஆய்வு நூல்களையும், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் உள்ளிட்ட நான்கு கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். காவல்கோட்டம் நாவலின் ஒரு சிறு பகுதியை வசந்தபாலன் இயக்கும் அரவாண் திரைப்படத்திற்கு கதை வசனமாக எழுதியுள்ளார் என்து குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். தமக்கு கிடைத்துள்ள விருது குறித்து சு.வெங்கடேசன் கூறுகையில், தமது பத்தாண்டுகால உழைப்பிற்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.தகுதியானதொரு படைப்பு உரிய காலத்தில் அங்கீகாரம் பெற்றதென்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பொதுவாக மூத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தவிருது, தற்போது அந்த எல்லைகளைக் கடந்து இலக்கியத் தகுதியை மட்டுமே மையமாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன். கனடா தமிழ்ச்சங்க விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் விருது, ஆனந்த விகடனின் சிறந்த நாவலுக்கான விருது, நொய்யல் விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இந்நாவலுக்காக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்து. சு.வெங்கடேசனுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்பி., சிஐடியு அகில இந்திய தலைவர் கே.பத்மநாபன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த எழுத்தாளர் திகசி, சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், இலக்கியவாதிகள், கவிஞர்கள்,தமுஎகச நிர்வாகிகள், திரைப்பட கலைஞர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: