செவ்வாய், 6 செப்டம்பர், 2011
அழுகுரலின் ஓலம் அதன் பெயர் ஈழம்
பூமிக்கடியிலிருக்கும்
ரத்த வாடையைப் பிடித்தே
எப்படியேனும்
துளிர்த்து விடுகின்றன செடிகள்.
பூக்கள் புன்னகையைத் தொலைத்து
பல பத்தாண்டுகளாகி விட்டன.
எதிரில் இருப்பவன்
மனிதனென மறந்ததால்
மரணத்தைச் சுவைக்கும்
ஆயுதங்களின் நுனிக்குத்
தெரியவில்லை
செத்து விழுந்தவன்
எந்த இனமென்று.
அழுகுரலின் ஓலம்
அதன் பெயர் ஈழம்!
மாரீசன் வராமலேயே
எத்தனை சீதைகள்
இன்னமும்
முள்வேலி சிறைகளில் . . . .
காலடியில் வாழும்
ஜீவராசிகள் கூட செத்துவிடக்கூடாது
எனப் போதித்த
புத்தனை சேவிப்பவர்கள்
மயிலறகிற்குப் பதில்
தோட்டக்களையே தூவுகிறார்கள்.
மண்டையோடுகளின் குவியலில்
இலங்கை திணறுகிறது.
சயனைட் குப்பிகளை நம்பியல்ல
சக வாழ்வையே விரும்பும்
ஆயுதம் தரிக்காத
அப்பாவி தமிழன்
கேட்பது பிச்சையல்ல . . .
வாழ்க்கையை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்
கருத்துரையிடுக