சனி, 7 ஜூலை, 2012

ஒரு நூலகத்தைக் காணவில்லை . . . .

மதுரை கோ.புதூரில் கடந்த 1965 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வந்த ஒரு கிளை நூலகம் திடீரென காணாமல் போனதால் பொதுமக்களும், வாசகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகமும்,60 கிளை நூலகங்களும், 62 ஊர்ப்பு நூலகங்களும் இயங்கிவருகின்றன. ஒரு புதிய நூலக கிளையை உருவாக்க 2 புரவலர்கள், 200 உறுப்பினர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு தடவாளச் சாமன்கள் ஆகியவை உதவி செய்யப்பட்டால் அரசு சார்பில் கிளை நூலகம் அமைக்கப்படும். அப்படித்தான் பல கிளை நூலகங்கள் இயங்கி வருகின்றன. மதுரை அழகர்கோவில் சாலையில் கோ.புதூர் கருப்பட்டி மண்டபத்தில் கடந்த 1965 ஆம் ஆண்டு அப்படி உருவாக்கப்பட்ட கிளை நூலகம் தான் தற்போது காணாமல் போய் உள்ளது. சுமார் 2 இலட்சம் பேருக்கு மேல் வசிக்கக்கூடிய புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த கோ.புதூர் கிளை நூலகத்தை ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். இந்த நூலகத்தைப் பயன்படுத்தி ஆய்வு பட்டம் பெற்றவர்களும், டாக்டர் பட்டம் பெற்றவர்களும், உயர் பதவிகளைப் பெற்றவர்களும் ஏராளமானோர் உண்டு. சொந்த கட்டடம் இல்லாத காரணத்தால் சில ஆண்டுகளில் சிங்காரவேலர் தெருவில் டான்போஸ்கோ பள்ளி அருகில் இந்த நூலகம் இயங்க ஆரம்பித்தது. அன்றாடம் ஆயிரக்கணக்கான வாசகர்கள் வந்து செல்லும் வகையில் குடியிருப்பு பகுதியில் இந்த நூலகம் அமைந்திருந்தது. இடநெருக்கடி இருந்தாலும் நூல்கள் பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இந்த நூலகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2633 ஆகும். சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட புதூர் நூலகம் வாடகை இடம் என்பதால் அதன் பின் லூர்து நகர் 6 வது தெருவிற்கு மாற்றப்பட்டது. காலை 8 மணியில் இருந்து பிற்பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இந்த நூலகம் நல்ல முறையில் இயங்கி வந்தது. இங்கு இயங்கி வந்த நூலகம் திடீரென காணவில்லை. இந்த நூலகத்தைப் பயன்படுத்தி வந்த ஏராளமான பெண் வாசகர்கள் நூல் நிலையம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில், கோ.புதூர் கிளை நூலகம் எங்கிருக்கிறது என தேட ஆரம்பித்தோம். மூன்றுமாவடியில் இருந்து அய்யர் பங்களா சாலை செல்லும் கண்ணனேந்தலில் இந்த நூலகம் தற்போது இயங்கி வருகிறது என்ற தகவல் கிடைத்தது. மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் கண்ணனேந்தல் ஊராட்சி அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தில் கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு பயனற்று இருந்த இடத்தில் தான் தற்போது நூலகம் மாற்றப்பட்டுள்ளது.ஏனெனில் தற்போது கண்ணனேந்தல் பகுதி மாநகராட்சி பகுதியோடு இணைந்துள்ளது. லூர்து நகர் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த போது வீட்டின் உரிமையாளர் புகார் செய்ததன் அடிப்படையில் புதூருக்குள்ளேயே இடம் தேடப்பட்டுள்ளது. முன்பணம் தந்தால் தான் வாடகைக்கு இடம் தருவோம் என பலர் கைவிரித்த நிலையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின்வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத இந்த இடத்தில் எப்படி நூலகம் அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. மாலை நேரத்தில் வாசகர்கள் எப்படி நூல்களை எடுத்துப் படிப்பார்கள்?போதுமான காற்றோட வசதியில்லாததாலும், நின்று நூல்கள் எடுக்க போதுமான இடம் இல்லாத காரணத்தாலும் வாசகர்கள் வருகை என்பது நாள்தோறும் 25 க்கு மேல் இல்லை. நூல்கள் வைக்க போதுமான இடம் இல்லாததால் நூல்கள் கட்டப்பட்டு அலமாரியில் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இயங்கி வந்த இடத்தில் இருந்து அருகில் மாற்றினால் தான், வாசகர்கள் அந்த நூலகத்தை வருவார்கள். ஆனால், சொந்த இடம் இல்லாத காரணத்தால் ஒரு அரசு நூலகத்தின் கிளை, அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு தற்போது தூரதேச பயணத்திற்கு வாசகர்களைக் கொண்டு சென்றுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தனிடம் கேட்டதற்கு, கோ.புதூர் நூலகம் ஏற்கனவே இயங்கிய இடத்தின் உரிமையாளர் நூலகத்தைக்காலி செய்யச்சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்கொடுத்தார். நாங்களும் நூலகத்திற்கான இடம் கடந்த 1 ஆண்டாகத் தேடினோம். முன்பணம் தர விதியில்லாதால் மாநகராட்சி கட்டடமான கண்ணனேந்தலில் உள்ள கட்டடத்தில் தற்போது நூலகத்தை இயக்கி வருகிறோம். புதூருக்குள் யாராவது 5 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கி அதை ஆர்டிஓ மூலம் வகை மாற்றம் செய்து தந்தால் கட்டடம் கட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறினார். டாஸ்மாக் கடைகளை வைக்க குடியிருப்பு பகுதியில் அவசர அவசரமாக இடம் தேடும் ஆளுங்கட்சி நிர்வாகம், ஒரு கிளை நூலகத்திற்கு அப்பகுதியிலேயே அமைக்க ஒரு இடம் தேடமுடியவில்லை என்பது வெட்கக்கேடு. மதுரை மாவட்ட நிர்வாகம் நூலக விஷயத்தில் உரிய கவனம் செலுத்தினால், இது போன்ற நூலகங்கள் தொலைந்து போவதில் இருந்து காப்பாற்றப்படும். - ப.கவிதா குமார்

கருத்துகள் இல்லை: