ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சுதந்திரம் எப்படியிருக்கும்?















வான்வெளி பயணம் போல
முதுகில் தூக்க முடியாத
சுமையோடு
பள்ளிச் சென்று திரும்பிய பின்
முகம் கழுவி
சிகை திருத்தி
டியூசன் சென்று
பாடங்களைப் படித்து விட்டு
வீடு வந்து
பள்ளி வீட்டுப்பாடங்களை
இரண்டு மணி நேரமாய்
எழுதி முடித்து
கண்ணசரப் போகும் முன்
பாரதி கேட்டாள்
“சுதந்திரம் என்றால் எப்படியிருக்கும்?“

வீட்டின் முகட்டில்
வளர்க்கப்பட்டு வரும் புறாக்களில் இரண்டு
கூண்டில் கதவு விலகி திடீரென
சடசடத்து பறந்து போன போது
ஒன்றின் சிறகில் இருந்து பறந்து வந்த
இறகை எடுத்துப் பார்த்து
சுதந்திரம்
இப்படி இருக்குமா
என மீண்டும் கேட்டாள்.


ஆரஞ்சு மிட்டாய் வடிவத்தில்
பள்ளியில் காட்டும்
சுதந்திரத்தை விட
இது தேவலையென நினைத்து
இருக்கும் என்றேன்.

பிறகெதற்கு
சுதந்திரத்தை
அடைத்து வளர்க்கிறாய்
என்றாள்.



3 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

Super kavithaiSuper kavithai

rajamelaiyur சொன்னது…

Super kavithai

ganesan சொன்னது…

கவிதை நன்கு சமைந்தது.மிட்டாய் சுதந்திரம் என்பதே சரியானது. வரும் வரும் தலைமுறைக்கு வரலாறு பற்றி என்ன சொல்கிறார்கள்? நன்றி.>B<