வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011
கான்கீரிட் காடுகளாக்கப்பட்ட தமிழக நிலங்கள்
நிலங்கள் என்பவை ஐந்து வகைப்படுகின்றன. மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என்றும்,வெம்மை உற்ற நிலம் பாலை என்றும் , காடும் காடு சார்ந்த நிலமும் முல்லையென்றும், வயலும் வயல் சார்ந்த நிலம் மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் ஐவகை நிலங்களையும் மோசடி செய்து சுருட்டியவர்கள் சிறைச்சாலைகளுக்கும், ஜாமீன் பெற நீதிமன்றங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். வட்டம், குட்டம் துவங்கி முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியே இவ்வில்லங்கத்தில் சிக்கியிருப்பது நிலத்தின் மதிப்பை ஊருக்கு உணர்த்துகிறது.
நாற்பது வயத்தில் வீடு கட்டவேண்டும் என்பது ஒரு காலத்தில் கனவாய் இருந்தது. ஆனால், ஆயுள் முடிந்தாலும் நிலம் வாங்க முடியாத நிலைக்கு விலை உயர்ந்து நிற்கிறது. எந்த தொலைக்காட்சியைத் திறந்தாலும்,“ பேருந்துவசதி, மருத்துவவசதி, சுடுகாட்டு“ வசதியுடன் பிளாட்டுகள் தயாராக இருப்பதாக பெரிய திரை ,சின்னத்திரை பிரபலங்கள் பேசிக்கொண்டேயிருக்கின்றனர்.
கான்கீரிட் காடுகள்
“ நிலம் என்னும் நல்லாள்“ இப்போது ரியல் எஸ்டேட் நிலச்சுரண்டல்காரர்களிடம் சிக்கித் தவிக்கிறாள். நில உச்சவரம்பு சட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் வளைக்கப்பட்ட நிலங்களில் கல்லூரிகளும், பள்ளிகளும், பிளாட்டுகளுமாக தமிழகத்தின் பசுமை பகுதிகள் கான்கீரிட் காடுகளாக மாற்றப்பட்டு விட்டன. இதன் காரணமாக உணவு உற்பத்தி தமிழகத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்“ என்ற பாடல் பழங்கதையாய் போகிறது என்பதற்கு கடந்த 2009 ஆம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக இருந்த சரத்பவார் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை சான்றாக உள்ளது. “இந்தியாவின் அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது“ என்று அவர் ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியிருந்தார். தமிழகத்தில் கடந்த 2004 - 2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61 லட்சத்து 46 ஆயிரத்து 44 டன்கள் ஆகும். ஆனால், 2005-2006-ல் 61 லட்சத்து16 ஆயிரத்து 145 டன்களாக அது குறைந்து போனது.
ஆய்வு நூல்கள்
நிலமோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார். ஆனால், நிலச்சீர்த்திருத்தம் சம்பந்தமாகவோ, நிலக்குவியல் குறித்தோ, ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட 12 லட்சம் பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதோரிடம் சிக்கியிருப்பது குறித்தோ அவர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. நிலக்குவியலைத் தடுப்பதன் மூலமே, விவசாயத்தில் அடிப்படையான மாற்றங்களை உருவாக்க முடியும். நிலக்குவியலை ஒழிப்பதென்பது நிலப்பிரபுத்துவத்தின் அடித்தளத்தை தகர்க்கும் காரியமாகும். ஆசிய கண்டத்தில் ஏற்கனவே ஜப்பான், கொரியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ நிலக்குவியல் முறை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளினால் நிலச்சீர்த்திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதை கேரளா, மேற்கு வங்கம் மாநில அரசுகளே மிகச்சரியாக செய்தன. இம்மாநிலங்களைத் தவிர கர்நாடகத்திலும், தமிழகத்திலும் நிலச்சீர்த்திருத்தம் 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து 1970 ஆண்டுகள் வரை மேற்கொள்ளப்பட்டன.
நில உடமை முறையில் நிலக்குவியல் ஏற்படாமல் நில உச்சவரம்பு விதித்து உபரி நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் நிலமற்ற ஏழை விவசாயிகள் இந்த உபரி நிலங்களைப் பெற்று உற்பத்தி திறனைப் பெருக்கமுடியும் என்பதன் அடிப்படையிலேயே நிலச்சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலச்சீர்த்திருத்தம் குறித்த ஆய்வுகள் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய அகாதெமி மேற்கொண்டு நூல்களாக வெளியிடப்படடள்ளது. பீகார், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், கர்நாடகம், பஞ்சாப்,அரியானா, மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தம் குறித்த ஆய்வுகள் இதுவரை எட்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி "தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் - முடிவடையாத கடமை" என்ற தலைப்பில் (2003) தமிழ்நாடு பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில் 16 ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்நாட்டு நிலசீர்திருத்தத்தின் பல அம்சங்களை ஆராய்கின்றன.
இடதுசாரிகளால் சாத்தியமான நிலச்சீர்த்திருத்தம்
உழுபனுக்கே நிலம் என்ற முழக்கத்துடன் இடதுசாரிகள் எழுப்பிய முழக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. இதையொட்டி நிலப்பிரபுக்களுக்கு எதிராக வலுவானப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இதன் விளைவாகவே மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் தஞ்சைத்தரணியில் பி.சீனிவாசராவ் நடத்திய நிலமீட்சிப் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்தில் நிலச்சீர்திருத்தம் நடைபெற்றது என்பது காலத்தின் பதிவாக உள்ளது.
தமிழ்நாடு நிலச்சீர்திருத்தம் (நில உச்சவரம்பு சட்டம்) 1960 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டார்டு ஏக்கர் என நில உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இந்த 1970 ஆம் ஆண்டு திருத்தப்பட்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் 15 ஏக்கராக குறைக்கப்பட்டது. இது மறுபடியும் 1972 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. நிலச்சீர்திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி பினாமி உடமை மாற்றங்களை செய்யும் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பினாமி மாற்று தடுப்பு சட்டம் 1988 ஆம் ஆண்டு தமிழக அரசால் இயற்றப்பட்டது. இது பினாமி மாற்றங்களை கிரிமினல் குற்றமாக அறிவித்து அத்தகைய பினாமி மாற்றங்களுக்கு மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
தலித்துகளிடம் உள்ளது எவ்வளவு நிலம்?
நிலக்குவியல் வைத்துள்ளவர்கள் பினாமி பெயர்களில் மாற்றம் செய்தாலே தண்டனை என சட்டமியற்றப்பட்ட நிலையில், நிலஅபகரிப்பு மன்னர்கள் காவல்துறை வசம் தற்போது சிக்கியுள்ளனர். இவர்களால் தமிழகத்தில் விவசாயம் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டது. நில அபகரிப்பு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளில சென்னை மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையில் மட்டும் 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற காவல்நிலையங்களில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வழக்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.
தங்கள் சொந்த நிலங்களை இழந்து பிழைப்புத் தேடி நகரத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நிலம் சாதிய அமைப்போடு பிணைக்கப்பட்டுள்ளதால் தான் தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீதம் 19.18 என்ற நிலையில் 7.1 சதவீதம் பேரிடம் தான் நிலம் பெயரளவில் உள்ளது. அந்த நிலங்களும் தற்போது ஆதிக்க சாதியர்களிடம் சிக்கியுள்ளது. சோவியத் ரஷ்யாவின் முதலாளித்து வளர்ச்சி பற்றி ஆராய்ந்த மாமேதை லெனின், “நிலம் சரக்காக மாற்றப்படுகிறது “ எனக்குறிப்பிட்டது தமிழகத்திற்கு பொருத்தமாகத் தான் இருக்கிறது.
“ வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்,நெல் உயரக் குடி உயரும்,குடி உயரக் கோன் உயரும் என ஒளவை கூறியது போல் அரசு உயர விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படியென்றால் நிலங்கள்பாதுகாக்கப்பட வேண்டும். நிலமீட்பில் ஈடுபடும் அரசு அதை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
nila thirudarkaluku saathi matham illai . bt. thinakaran oru dhalith , but kalavaadiyadu 400 yekkar . nila thirutdil yeraalamana backward class people paathikkappatdu erukkanka . manitharkal vizhippadaium podu nila kuviyal udaikka padum .
கருத்துரையிடுக