திங்கள், 22 ஆகஸ்ட், 2011
விரிசல் விழுந்து இடிய ஆரம்பித்துள்ள மதுரை காந்திமியூசியம்
வெளியில் இருந்து பார்க்கும் போது சங்கு போல வெண்மையோடு காட்சி தரும் மதுரை காந்தி மியூசியத்தின்(அருங்காட்சியகம்) உள்பகுதி இடிந்து காரைகள் உதிர்ந்து ஒழுகி வருகிறது. காந்திமியூசியத்தைப் புனரமைப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள 1.25 கோடி ரூபாய் நிதியில் அஸ்தி, அமருவதற்காக காலரி வேலைகள் நடைபெறுகிறது. ஆனால், காந்தி மியூசியம் பழுது பார்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை என்றவுடன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாபகத்திற்கு மதுரை காந்தி மியூசியம் தான்.
காந்தி அருங்காட்சியகம் தில்லி,மும்பை, பாட்னா, கொல்கொத்தா, புனே, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் மதுரையில் தான் அமைக்கப்பட்டது. மதுரையில் கடந்த 1959 ஆம் ஆண்டு ஏப்-15 ம் தேதி ஜவஹர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது.
ராணி மங்கம்மாள் அரண்மனை
மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளின் அரண்மனையாக 13.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த இடம், புதுதில்லியில் உள்ள, அகிலஇந்திய காந்திய ஸ்மாரட் நிதிக்கு நன்கொடையாக தமிழக அரசு வழங்கியது. அதில் தான் மகாத்மா காந்தியின் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரியவகை புகைப்படங்கள், அவரது மூக்குக்கண்ணாடி,ராட்டையில் நூற்றநூல், அவர் பயன்படுத்திய கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காந்தியின் நினைவைச் சுமந்து கொண்டு நிற்கும் இந்த அருங்காட்சியகத்தின் உள்பகுதிகள் சேதமடைந்து காரைகள் உதிர்ந்து விழுகின்றன. அத்துடன் மேல்பகுதியில் இருந்து தண்ணீர் உள் பகுதியில் இறங்கி அருங்காட்சியகத்தின் பல பகுதிகள் நீரால் ஊறிப்போய் உள்ளது. ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் பார்வையிடும் காந்தி அருங்காட்சியகம், தற்போது பள்ளிக்குழந்தைகளால் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் சேதமான பகுதிகள் இடிந்து விழுந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது. கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக பல நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் கழிப்பறைகளுக்கு பாதாளச்சாக்கடை இணைப்பு கிடையாது. இதனால் நிரம்பி வழியும் சாக்கடை நீரை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தும் பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
ரூ.6.2 கோடியில் புனரமைக்கத்திட்டம்
காலையில் யோகா நடைபெறும் நேரத்தில் கழிப்பறை திறக்கப்படாதால் அவசரத்திற்கு காந்தி அருங்காட்சியகத்தின் வெளிப்பகுதி முழுவதும் அசுத்தப்படுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக இருப்பதால் சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மதுபாட்டில்கள் மட்டுமின்றி இரவில் பெண்களையும் அழைத்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து விடுவதும், அவர்களைப் பிடித்து காவலர்கள் வெளியேற்றுவதும் தொடர்கதையாக உள்ளது.
காந்திமியூசியத்தின் பொன்விழா ஆண்டையொட்டி அருங்காட்சியகத்தை புனரமைத்து விரிவுபடுத்துவதற்கும், கேலரிகள் அமைப்பதற்கும், நூலகத்தை விரிவுபடுத்தவும்,சாலை அமைக்கவும், வாகனக்காப்பகம்,பாதாளச்சாக்கடை திட்டம், பாதுகாவலர்களுக்கு அறை உள்ளிட்டவையுடன் ரூ.6.2 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு நிபுணர் குழு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.25 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியது.
இந்த நிதியைக் கொண்டு தற்போது காந்தி அருங்காட்சியகத்தைத் தவிர மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. காந்தி அருங்காட்சியகம் புனரமைப்பு என வாங்கப்பட்ட நிதியை அருங்காட்சியகத்தின் வெளியே உள்ள அஸ்தி மண்டபப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் அதன் அருகில் உள்ள இரண்டு கட்டிடங்களின் மேற்கூரை அமைக்கும் பணியும், கேலரியை அழகுபடுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பு
காந்திமியூசியம் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சேரிப்புலிகளின் அமைப்பின் மாநில அமைப்பாளர் க.திலீபன் கூறுகையில், காந்திமியூசியத்தின் நேரத்திற்கும், அங்குள்ள நூலகத்தின் நேரத்திற்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நூலகம் செயல்படுகிறது. அதன் பின் மாலை 4 மணி வரை மூடப்படுகிறது. அதன் பிறகு திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை செயல்படுகிறது. ஆனால், காந்திமியூசியம் காலை 10 மணிக்கு தான் திறக்கப்பட்டு மாலை 5.30 மணியோடு மூடப்படுகிறது. ஆகவே, நூலகம் திறக்கப்படும் நேரம் சரிசெய்யப்பட வேண்டும். அத்துடன் சமூகவிரோதிகள் இரவில் காந்திமியூசியத்திற்குள் நுழையாதவாறு சுற்றுச்சுவரை உயர்த்திக்கட்ட வேண்டும். கழிப்பறைகளை காலையில் 9 மணிக்குத் தான் திறக்கிறார்கள். யோகா, நடைபயிற்சிக்கு வருபவர்கள் பலர் கழிப்பறை இல்லாத காரணத்தால் இயற்கை உபாதைகளை வெட்டவெளியிலேயே செய்து விடுவதால் காந்திமியூசியத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பொன்விழா கொண்டாடிய அருங்காட்சியகத்தில் பாதாளச்சாக்கடை இணைப்பு இல்லை. இதன் காரணமாகவும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வெளிநாட்டு பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்திய காந்தியடிகளின் பெயரில் இயங்கும் இந்த அருங்காட்சியகத்தினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பராமரிக்க வேண்டும் என்று கூறினார்.
மாநில அரசு நிதி ஒதுக்கும்
மத்தியஅரசு ஒதுக்கியுள்ள நிதியில் சேதமடைந்துள்ள அருங்காட்சியகப் பணிகள் நடைபெறுமா என காந்திமியூசியத்தின் செயலாளர் ஆர்.ரெங்கசாமியிடம் கேட்டதற்கு, இது டெக்னிக்கல் மேட்டர் என்று கூறியவர், 13 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள காந்திமியூசியத்தைப் புனரமைக்க மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 1.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் பணிகள் நடைபெற்று வருகிறது. காந்திமியூசியத்தின் சுற்றுச்சுவர் எழுப்பப்படும். இப்பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ரூ.1.25 கோடி ஒதுக்கீடு செய்யும். இத்துடன் தமிழக அரசு சார்பில் ரூ. 2.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. இந்த நிதியோடு 20 சதவீத நிதியை காந்திமியூசியப்பங்காக செலுத்தி இப்பணி நிறைவடையும்.ஏற்கனவே, 20 லட்ச ரூபாயை அருங்காட்சியகத்தின் தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் வழங்கியுள்ளார். இப்பணியை சிறப்புடன் முடித்திட அவர் திட்டமிட்டுள்ளார். ஆகவே, அருங்காட்சியகமும் பழுது நீக்கப்படும் என அவர் கூறினார். எப்போது இப்பணிகள் முடிவடையும் எனக்கேட்டதற்கு, முதல்கட்டப்பணி அக்-2 ம் தேதிக்குள் முடிவடையும் என செயலாளர் ஆர்.ரெங்கசாமி பதிலளித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக