புதன், 29 டிசம்பர், 2010

தலித்துகளை ஏமாற்றும் ராகுல்காந்தி

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளரான ராகுல்காந்தி, ஒவ்வொரு மாநிலமாக கட்சி வளர்க்கிறேன் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.“ போகும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சென்றார். தலித் மக்கள் வீட்டுக்குச் சென்றார்“ என்று ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. ஆனாலும், பீகாரில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியுள்ளது.
இச்சூழ்நிலையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இளைஞர் காங்கிரசாரை ராகுல்காந்தி சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர் தான் முதல்வர் என ராகுல்காந்தி பேசியுள்ளார். சென்னையில் அவர் இப்படி பேசிய போது,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு அதை தமிழாக்கம் செய்யாமல் விட்டு விட்டார். இதைக்கண்ட இளைஞர் காங்கிரசார் கூச்சலிடவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, தங்கபாலுவின் பேச்சை மீண்டும் திருத்தி மொழியாக்கம் செய்துள்ளார். தமிழகத்தில் விரைவில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி வருவதைக் கண்டு தங்கபாலு, ராகுலின் இப்பேச்சை ரசிக்காமல் விட்டிருக்கக்கூடும்!
இந்த நிலையில் மதுரை வந்த ராகுல்காந்தி , காந்திமியூசியத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர் காங்கிரசாரைச் சந்தித்து உரையாடினார். அதன் பின் பயணிகள் தங்கும் விடுதி சென்றவர்,திடீரென மேலூர் தும்பைப்பட்டியில் உள்ள தியாகசீலர் கக்கனின் நினைவிடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு மதுரை திரும்பிய அவர், ரேஸ்கோர்ஸ் காலனி அருகே உள்ள தாமரைத்தொட்டி ஆதிதிராவிடர் விடுதிக்கும் ஒரு விசிட் அடித்துள்ளார். இந்த விசிட்டெல்லாம் சிலமணி நேரங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது.
தலித் மக்கள் மீது பாசம் கொண்டவர் போல ராகுல்காந்தி நடந்து கொள்வது பற்றி காங்கிரஸ் கட்சியில் உள்ள தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்த போது,   ராகுல்காந்தியின் செயல்பாடுகளை மட்டுமின்றி தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகளை கடுமையாகவே விமர்சித்தனர்.
தமிழகத்தில் காமராஜர் முதலமைச்சரான போது கக்கனை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கி அழகுபார்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முதல் தலித் தலைவர் கக்கன் தான்.  இதுமட்டுமில்லாமல் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின் நலம், அறநிலையத்துறைக்கு போன்ற பல்வேறு துறைக்கு அமைச்சராக்கிப் பார்த்தார். அதன் பின் தமிழகத்தில் எந்த திராவிட ஆட்சியிலும் உள்துறை, பொதுப்பணித்துறை வழங்கப்படவில்லை. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கக்கனை பெருமைப்படுத்திய காமராஜரையே காங்கிரஸ் கட்சி மறந்து விட்டது. காமராஜர் ஆட்சி அமைப்பதாகக் கூறும் காங்கிரஸ் தலைவர்கள், ராகுல்காந்தி பயணத்தில் எங்கும் காமராஜர் படத்தை வைக்கவில்லை. அதுகுறித்து பேசவும் இல்லை என்று குறைபட்டனர்.
தீயாகசீலர் கக்கனின் தம்பி பி.வடிவேலுவிடம் இதுகுறித்து கேட்டதற்கு,“ காங்கிரஸ் கட்சியில் தலித்துகளுக்கு மரியாதை இல்லை. கக்கன் குடும்பத்திற்கும் மரியாதையில்லை“ என்று குற்றம்சாட்டினார்.
ராகுல்காந்தி ஆதிதிராவிடர் நலவிடுதியைப் பார்த்து  என்ன ஆகப்போகிறது. பல ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆ.தமிழரசி தொகுதியில் உள்ள அந்த விடுதியில் பல ஆண்டுகளாக கழிப்பறை வசதியில்லை. அதை சரிசெய்யச் சொல்லி பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ராகுல்காந்தி பார்த்தால் சரியாகி விடுமா என்ற கேள்வியை முன்வைத்த காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாவட்டத்தலைவர் மானகிரி விஜயன், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களில் 60 சதவீதம் தலித் மக்கள் தான். ஆனால், அக்கட்சியில் மாவட்டத்தலைவராக தலித் வரமுடியாது. ஏனெனில் பிறசாதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், தலித்துகளை வளரவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெயக்குமார், எங்கள் துறையின் தலைவர் செங்கை செல்லப்பா ஆகியோர் சோனியாகாந்தியிடமும், ராகுல்காந்தியிடமும் இதுகுறித்து பல முறை முறையிட்டுள்ளனர்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஒரு தலித்தை நியமிக்க வேண்டும். அத்துடன், பத்து மாவட்டத்திற்கு தலித் தலைவர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் சில விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்தித்தே தீரும் என பேசினார்.
தியாகசீலர் கக்கனின் நூற்றாண்டு விழாவை மதுரையில் காங்கிரஸ் கட்சி நடத்திய போது, அவரை கேவலப்படுத்தி போஸ்டர் ஒட்டியது மட்டுமல்லாமல், அதில் ப.சிதம்பரம் படத்தை காந்தி போல சித்தரித்த கேவலத்தை என்னவென்று சொல்வது என ஆதங்கப்பட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தொண்டர்.
மதுரையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியை ராகுல்காந்தி சுற்றிப்பார்த்தது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மாணவர் சங்க மாநிலத்தலைவர் ஜோ.ராஜ்மோகன், தமிழகத்தில்  உள்ள அரசினர் குறிப்பாக ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் 75 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திருச்சியில் டோல்கேட் ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப்படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கட்டணக்கழிப்பறையைத் தான் பயன்படுத்தி வருகின்றனர். விடுதிகளில் உள்ள செப்டிக் டாங்குகளை சுத்தம் செய்யாத காரணத்தால் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வெளிச்சொல்ல முடியாத சோகத்துடன் தான் மாணவிகள் இப்படிப்பட்ட கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மனரீதியாக மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
தலித் மக்களுக்கு விடுதலை அளிக்க வந்தது போல ஊடகங்கள் காட்டும் ராகுல்காந்தியின் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிக்கு ஒதுக்கப்பட்டது.  தேசிய மனித உரிமை ஆணையம் இன்று சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில்  பேசிய இந்தியாவில் ஐ.நா.வின் மனித உரிமைக்காக செயல்படும் குழு உறுப்பினர் மிலூன் கோத்தாரி இதுகுறித்து வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். அவர்பேசும் போது,“  ‘‘இந்திய மனித உரிமை ஆணையங்கள் அனைத்தும் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அரசின் ஒரு துறையாகவே செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 720 கோடி ரூபாய் பணத்தை புதுதில்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்துவதற்கான ஸ்டேடியம் கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது“ எனக்குறிப்பிட்டார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தலித்துகளின் நிலை எப்படி இருக்கிறது என அக்கட்சியின்  எஸ்.சி.எஸ்.டி துறையின் மாநிலத்தலைவர் செங்கை செல்லப்பாவிடம் கேட்டதற்கு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக ஒரு தலித் நியமிக்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகிறது. இளையபெருமாளுக்கு பிறகு யாரும் எங்கள் சமுதாயத்தில்  இருந்து காங்கிரசில் தலைவராக முடியவில்லை. இந்த நிலையில் ராகுல்காந்தி தலித் மக்களை சந்திக்கிறார். தமிழகத்தில் அடுத்த முதல்வர் ஒரு தலித் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மதுரை மற்றும் மயிலாப்பூர் கூட்டங்களில் பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் மாவட்டத்தலைவராக ஒரு தலித் கூட காங்கிரஸ் கட்சியில் நியமிக்கப்படவில்லை. இதற்காக நீண்டநாளாக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் ஒரு மாவட்டத்தலைவராக கூட தலித்தை நியமிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப்பொதுச்செயலாளர்  பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, தமிழகம் வந்து குறிப்பாக மதுரையில் கக்கன் குறித்தும் ஆதிதிராவிட மாணவர்கள் குறித்தும் அக்கறைபட்டது போல காட்டிக்கொண்டது, நடிப்பு இல்லாமல் வேறெதுவாய் இருக்க முடியும்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ippa kooda Italy romeovai neenkal puriyaviddal, unkalai yarum kappatamudiyathu.Sathi.

ஆனந்தி.. சொன்னது…

நல்ல பகிர்வு