திங்கள், 27 டிசம்பர், 2010

மழை மீதா பிழை?

“போடா வெங்காயம்“ என
யாரையும்
இனி நீங்கள் திட்ட முடியாது.
ஏனெனில் அது
விலைமதிக்க முடியாத
பொருளாக மாறிவிட்டது
மழையால்
விலை உயர்வென
ஆட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
மலை போல
ஏறும் பெட்ரோல், டீசல்
விலைக்கும் கூட
இனி மழையைக் காரணம் காட்டுவார்கள்!
விதை நெல்லை விற்று
அக்காசில் பொங்கித்தின்னும்
வழியற்ற விவசாயி போல
கோதுமை, அரிசி, பருத்தி, வெங்காயம் என
இருப்பதையெல்லாம்
ஏற்றுமதி செய்துவிட்டு
இல்லையென கைவிரிக்கும்
ஆட்சியாளர்களுக்கு
காரணம் சொல்ல
மழை இருக்கவே இருக்கிறது!
பருத்தி விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்ட போதும்
கைத்தறி நெசவாளர்கள்
கஞ்சி தொட்டி திறந்த போதும்
விவசாய நிலங்கள்
விற்பனை மனைகளான போதும்
மழை மீதே பழிபோட்டார்கள்.
இருக்கும் மரத்தையெல்லாம் வெட்டி
தங்க நாற்கரச்சாலை போட்டாகிவிட்டது.
காடுகளை மொட்டையடித்து
பறவைகளையும், மரங்களையும்
அழித்தாகி விட்டது.
இயற்கையான மலையையும் குடைந்து
கிரானைட் கற்களாக
ஏற்றுமதி செய்தாகி விட்டது.
நதிகளை அழித்து
பாட்டில்களில் அடைத்தாகி விட்டது.
இயற்கையை அழித்த உங்களை 
பொறுத்துப் பெய்யும் மழை மீது
இன்னும் எத்தனை நாள்
பழி போடப்போகிறீர்கள்?




கருத்துகள் இல்லை: