புதன், 11 ஆகஸ்ட், 2010

அடையாளம்

எல்லோருக்கும்
ஏதோ ஒரு அடையாளமிருக்கிறது. . .
தெருக்களைக் கடந்து போகும் நாய்கள்
வழிமறக்காதிருக்க
கடந்து வந்த பாதையை
அடையாளப்படுத்த
மின்கம்பங்களை
கால்தூக்கி நனைத்து வைக்கின்றன.

வைக்கோல் பாரமேற்றி
சந்தை சென்று திரும்பும்
வண்டி மாடுகள்
வண்டிக்காரனின்
தார்க்குச்சி விரட்டுதலின்றி
இரவு நேரங்களில்
ஊர் நோக்கி நடைபோடுகின்றன.

கூடுகளானாலும்
கூண்டுகளானாலும்
பறவையினங்கள்
தங்கள் வாழிடங்களை
அடையாளப்படுத்தியே
வைத்துள்ளன . . .

ஆனால்
விதவிதமாய் முகங்களிருந்தாலும்
மனிதர்களின் அடையாளங்கள்
பெயர்களில் தான்
ஒளிந்து கிடக்கிறது.

நேரில் கண்ணுறாவிட்டாலும்
தொடர்பு கொள்ள
கட்டாயம் ஒரு பெயர்  தேவைப்படுகிறது.
ஏனெனில்
அலைபேசிகளில் தவறிய
அடையாளமற்றவர்களின் அழைப்புகளில்
ஒளிந்து கிடக்கிறது
அவர்களின் முகங்கள்.

சரி
தமிழரின் அடையாளம்
எதுவாயிருக்கிறது .  .  .?

கல்தோன்றா
மண்தோன்றா காலத்து
மூத்த குடியென்று முழங்கியவுடன்
கரவொலிகள்
காதைப்பிளக்கின்றன.
விசில் சத்தங்கள்
வீதிகளை உலுக்குகின்றன.
ரேகைகளே
உதிர்ந்து போகுமளவிற்கு
கரங்கள் கவிதைப்பாடுகின்றன.

தாயே !
தமிழே என்றவுடன் பட்ட உணர்ச்சி
ஆட்சிக்கட்டிலையே
அன்பளிப்பாய் தருகிறது.

கல்லும், மண்ணும்
தோன்றும் முன்
யாரிடமிருந்து பிறந்திருக்கும்
மொழியென்ற
அறிவை அடையாளப்படுத்தும்
கேள்விகளை எழுப்பாமல்
பெரியார் பிறந்த
பூமியென இன்னும் பெருமை கொள்கிறோம்.

கேள்விகளில் தான்
துவங்க வேண்டியுள்ளது
தமிழரின் அடையாளங்கள். . . .

கருத்துகள் இல்லை: