ஒரு ஊர் மக்கள் சுபிட்சமாக வாழ்கிறார்கள் என்பதற்கு அவர்கள் வண்ணத்தொலைக்காட்சியில் அன்றாடம் ஒளிபரப்பாகும் நாடகம், படம், நகைச்சுவை உள்ளிட்ட காட்சிகளை பார்த்தாலே போதும் என்ற நினைப்பு தமிழக முதல்வர் கலைஞருக்கு இருக்கும் போலிருக்கிறது!
உத்தப்புரத்தில் தலித் மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
சமீபத்தில் ஜூலை 12-ந் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் போது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.நன்மாறன், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட பலர் காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.போராட்டம் நடத்துபவர்களைக் காவல்துறை தடியடி நடத்தி கலைப்பது புதிய விஷயமல்ல. ஆனால், மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களைக் குறிவைத்து, தனி தனியாகத் தூக்கிச் சென்று கன்னத்திலேயே அறைந்த நடவடிக்கை என்பது முற்றிலும் புதிய நடைமுறையாகும். பிக்பாக்கெட் அடித்த குற்றவாளியை கையாளக்கூடிய காவல்துறையின் நடைமுறை மதுரையிலும் அரங்கேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உத்தப்புரத்தில் 1655 குடும்பங்களுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி வழங்கினேன் என முதல்வர் கலைஞர் வெளியிட்ட அறிக்கை செம காமெடியாக இருந்தது. உத்தப்புரத்தில் நிலவும் சாதிய பாகுபாட்டை நீக்குங்கள் என்றால், சட்டமன்றத்தில் புள்ளி விபரங்களை அள்ளி விடுவது போல, தொலைக்காட்சி கொடுத்தேன். இலவச அடுப்பு கொடுத்தேன் என கிளிப்பிள்ளைப் போல கூறுகிறார்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியான முறையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை, “கைது நடவடிக்கை எடுக்கும் போது எதற்காக மல்லாந்து ரோட்டில் அமர்ந்தார்கள்“ என தனக்கே உரிய பாணியில் முரசொலி " நாகரீகத்துடன்" எழுதுகிறது.
முதல்வராக மட்டுமின்றி காவல்துறையின் அமைச்சராவும் கலைஞர் இருப்பதால் காவல்துறையை அதிகமாக நம்புகிறார் போல் தெரிகிறது! கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன்-21 ந் தேதியை கலைஞர் இன்னமும் மறந்திருக்க மாட்டார் என நம்புகிறோம். அந்த நள்ளிரவு நேரத்தில் அவரை காவல்துறை கைது செய்த போது, காவல்துறைக்கு அவர் உரிய ஒத்துழைப்பு அளித்தாரா என்பதை அடுத்த நாள் அதிகாலையில் அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பிய காட்சியில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது.
கைது செய்ய வந்த காவல்துறையைப் பார்த்து “கொல்றாங்களே, கொல்றாங்களே“ என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் யாரும் எந்த கூச்சலும் எழுப்பவில்லை! அரசின் அடக்குமுறை கருவியான காவல்துறை கர்மசிரத்தையோடு நடத்திய தாக்குதல் ஒவ்வொன்றும் தலித்துகளுக்கு யாரும் உரிமை கேட்டு வருவீர்களா என்பதைப் போல் இருந்தது.
தமிழகத்தில் எத்தனையோ முதலமைச்சர்கள் வந்தாலும், மற்ற யாரும் சொல்லாத வார்த்தைகளை அதாவது, “தலித்துகளின் சம்பந்தி“, “தலித்துகளின் பாதுகாவலன் “ என்ற சொல்லாடல்களை கலைஞர் மட்டும் பயன்படுத்தி வருகிறார். இது ஒரு வகை தந்திரமாகத் தான் தெரிகிறது. தாமிரபரணி, ரெட்டணை, காங்கியனூர் என பல சம்பவங்களில் தலித்துகள் பாதிக்கப்பட்ட போது முதல்வராக கலைஞர் தான் இருந்துள்ளார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாக உள்ளது.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞரிடம் கேட்டக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று இது: “ எதிராளியை திணற வைத்த ஏதாவது ஒரு சம்பவம்?“ அதற்கு அவர் அளித்த பதில்:“ சட்டமன்றத்தில் ஒரு முறை டாக்டர் எச்.வி ஹண்டே அவர்கள், திமுக அரசைப் பற்றி விமர்சிக்கும் போது, இது மூன்றாம் தர சர்க்கார் என்றார். உடனே ஆளுங்கட்சியினர் வெகுண்டெழுந்தனர். நான் அனைவரையும் கையமர்த்தி விட்டு, டாக்டர் ஹண்டே அவர்கள் இந்த அரசை மூன்றாந்தர அரசு என்றார். திருத்திக் கொள்ள வேண்டும். இது நாலாந்தர அரசு. பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று கூறப்படும் வர்ணங்களில் நான்காவதாகக் கூறப்படும் சூத்திரர்களின் அரசு! என்று குறிப்பிட்டேன்“ என அவர் பதிலளித்திருந்தார்.
சூத்திர ஆட்சியில் தான் உத்தப்புரத்து சூத்திரர்களுக்கு இழிவு ஏற்படுத்தப்படுகிறது என்றவுடன், உத்தப்புரம் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்வதாக முதல்வர் கலைஞர், மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார். உத்தப்புரத்தில் தலித் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ்கிறார்கள் என்ற முதல் கேள்வியோடு, அவர்களை அமைதியோடு வாழவிடுகிறார்களா என்ற கேள்வியையும் சேர்த்தே எழுப்ப வேண்டியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உத்தப்புரத்திற்குள் நுழைந்த தமிழக அரசின் காவல்துறை, தலித் மக்கள் மீதும், அவர்களது உடமைகள் மீதும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தலித் மக்கள் காயமடைந்தனர். பலரது உடமைகள் சூறையாடப்பட்டன. இதை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து காவல்துறையினரின் தாக்குதல் குறித்து சட்டப்பணி ஆணையத்துறை செயலாளர் வெங்கடசாமி, திருப்பதி ஆகியோர் உத்தரப்புரத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.
தாக்குதலுக்குள்ளான தலித் மக்கள் 191 பேருக்கு 10 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமசுப்ரமணியன், ஹரிபரந்தாமன் ஆகியோர் உத்தரவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இடைக்கால நிவாரணமும் வழங்கப்பட்டது. உத்தப்புரத்தில் அமைதி நிலவுவதாக கலைஞர் சொல்வது முற்றிலும் பொய் என்பது இதில் இருந்து தெளிவாகும்.
உத்தப்புரத்தில் சாதிக்கு ஒன்றாக சத்துணவுக்கூடம், ரேசன் கடை, பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது தீண்டாமை இல்லாமல் என்னவாம் என கேள்வி எழுப்பினால், அதற்கு தலித்துகளின் சம்பந்தி எனச்சொல்லும் கலைஞரிடம் பதில் இருக்காது. ஏனெனில், இது சாதி பார்க்கும் அரசாக மாறிவிட்டது.
உத்தப்புரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெள்ளாள சமுதாய மக்கள் வாழும் வடக்குத் தெருவில் 39 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அத்தியாவசியப் பணிகளும், ஆதிதிராவிடச் சமுதாய மக்கள் வசிக்கும் தெற்குத் தெருவில் 73 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில் அத்தியாவசியப்பணிகளும் நடைபெற்றுள்ளதாக புள்ளி விபரத்தை முதல்வர் கலைஞர் தந்துள்ளார். தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் கூடுதல் செலவு செய்ததாக அவர் கணக்கு காட்டும் போதே, அப்பகுதியில் இன்னமும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படவில்லை என்ற உண்மையையும் புரிந்து கொள்ள முடியும்.
ஏனெனில், உத்தப்புரத்து மக்கள் பயன்படுத்தும் நீர் பெருக்கெடுத்து சாக்கடையாக தலித் மக்கள் வாழும் பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும் நோய்க்கொடுமைக்கு தலித் மக்கள் ஆளாகியுள்ளனர். அன்றாடம் மேல்சாதியினரின் இழிசொல்லுக்கு மட்டுமின்றி, கொசுக்கடிக்கும் ஆட்பட்டு வருகின்றனர். இச்சாக்கடையை திசை திருப்பி விடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. தலித் மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்றால் காத்திருக்க நிழற்குடையில்லை. மழையானாலும், வெயிலானாலும் வானம் தான் அவர்களுக்கு கூரை. தலித் மக்களுக்கு நிழற்குடை அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசு செவிசாய்க்கவில்லை. நிழற்குடை அமைத்தால் தங்களுக்கு முன்னால் தலித் மக்கள் அமர்ந்து விடுவார்கள் என சொல்லும் போக்கிற்கு மாவட்ட நிர்வாகமும் உடன்படுகிறது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 3.75 லட்ச ரூபாயை உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்க ஒதுக்கீடு செய்தார். அதை பெற்று பணியை நிறைவேற்ற வேண்டிய மாவட்ட நிர்வாகம் நிழற்குடை அமைக்க முடியாது என்றது. இதுகுறித்து டி.கே.ரங்கராஜன் அவர்கள், கலைஞரூக்கு எழுதிய கடிதத்திற்கு முதல்வரின் செயலாளர் கி.இராஜமாணிக்கம் தான் பதில் எழுதினார். நிழற்குடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முத்தாலம்மன் கோவில் சுவர் பகுதி உள்ளது. இச்சுவரை இடித்து நிழற்குடை அமைக்க முடியாது என அவர் தெளிவாக பதில் கூறிவிட்டார். கோவில் அமைந்துள்ள இடம் மட்டுமின்றி சுற்றுச்சுவர் உள்ளிட்டவையும், நிழற்குடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் இடமும் அரசு நிலம் தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, அவர்களுடைய தோளிலேயே கைபோட்டு நிற்கிறது.
தனது ஆட்சியின் சாதனையாக கலைஞர் சொல்லும் உத்தப்புரம் சுவர் இடிப்பு பகுதியில் இன்னமும் தலித் மக்கள் செல்லமுடியவில்லை. பொதுப்பாதையை ஆக்கிரமித்து ஆட்டுரல், சுவர் என ஆக்கிரமிப்புகள் எழுந்து நிற்கிறது. கூடவே, காவல்துறையும் இரவு, பகல் பாராது பாரா போட்டு இந்த பாதை வழியாக எந்த தலித்தும் வாகனத்தில் சென்று விடாமல் தடுக்கும் பணியை மிக நேர்த்தியாகச் செய்து வருகின்றது.
இதுவரை 6-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தப்புரம் சென்றும், தலித் மக்கள் பிரச்சனையைத் தீர்க்க முடியவில்லை என்றால், முதல்வர் சொல்லும் சூத்திர அரசு, யாருக்கானது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. உண்மையில் இது சூத்திர ஆட்சியா என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. இந்த நிலையில் உத்தப்புரத்து தலித் மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் மார்க்சிஸ்டுகள் மீது, மண்ணைவாரி இறைப்பதை நிறுத்தி விட்டு, உத்தப்புரத்து தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வேலையை செய்வதே கலைஞருக்கு நல்லது. அவரது அரசுக்கும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக