மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நலவாரியச்சலுகைகள் கேட்டு உறுப்பினர்கள் பதிவு செய்த விண்ணப்பங்களை தனியார் நிறுவனம் மூலம் பதிவு செய்யக்கொடுத்ததில் முறையாக பதிவு செய்யப்படாமல் போனதற்கு பல லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கட்டுமானம், ஆட்டோ, சுமைப்பணி, சாலையோரம், தையல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நலவாரியச்சலுகைகள் கேட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உறுப்பினர்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை நபர்கள் பதிவு செய்து வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நலவாரியத்தில் உறுப்பினர்களாக வேண்டும் என விண்ணப்பிக்கின்றனர்.அவர்களின் உறுப்பினர் பதிவிற்கான விபரங்களை கணினி மூலம் குறுந்தகட்டில் பதிவு செய்து ஒப்படைக்கும் பணி மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் மற்றும் சமூகப்பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் படி மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுகள் அனைத்தும் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு பதிவு செய்வதற்கான பணி வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஜெராக்ஸ் கடையின் பெயரைக் கொண்டுள்ள அந்த நிறுவனம் எப்படி இந்த பணியைப் பெற்றது எப்படி எனத் தெரியவில்லை. அரசு அலுவலகத்தில் உள்ள கோப்புகளை தனியாருக்கு வெளியில் கொண்டு செல்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
கடந்த ஆண்டு நாமக்கல்-சேலம் சாலையில் காகித மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது.
லாரி உரிமையாளர் சங்கம் அருகே செல்லும் போது லாரியில் இருந்த மூட்டைகளில் இருந்து ஏராளமான காகிதங்கள் கொத்து கொத்தாக கீழே சிதறி விழுந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் லாரியை நிறுத்தக் கோரி கூச்சல் போட்டனர். ஆனால் லாரி நிற்காமல் சென்று விட்டது. இதனால் லாரியில் இருந்து கீழே விழுந்த காகிதங்களை மக்கள் சேகரித்து பார்த்த போது, அவைகள் நலவாரியத்துக்காக விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் என்பது தெரிய வந்தது. பெரும்பாலான விண்ணப்பங்கள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவையாக இருந்தன. உடல் உழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்திருந்த தொழிலாளர்களின் புகைப்படம் மற்றும் அனைத்து விவரங்களும் இதில் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து புகாரும் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 7 மாவட்டங்களில் உள்ள பல லட்சம் உறுப்பினர்களின் படிவங்களை பதிவு செய்யும் பணிகள் எப்படி பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அரசு பதிவு பெற்ற அமைப்புகள் பலஇருக்கும் போது, விருதுநகரில் இருந்து நாகர்கோவிலில் வரை விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியை யார் உதவியோடு பெறப்பட்டுள்ளது என்ற கேள்வியை ஊழியர்கள் எழுப்புகின்றனர்.
மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 27 லட்சம் பதிவுகள் நடைபெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது. ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்ய 2 ரூபாய் 90 பைசா வழங்கப்படுகிறது. இப்படி பதிவு செய்யப்பட்ட குறுந்தகட்டில் உள்ள விபரங்கள் சரியாக இல்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள நலவாரிய அலுவலகத்தில் பலமுறை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பணிகள் குறுந்தகட்டில் பதிவு செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டதில் அவை முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் 7 மாவட்ட விண்ணப்பங்களை பதிவு செய்த நிறுவனம் தொழிலாளர் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ புள்ளி விபர குறுந்தகட்டை எக்செல் வடிவத்தில் குறுந்தகடாக மாற்றி வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன் படி மாற்றி மீண்டும் அனைத்து மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்களுக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டது. இந்த குறுந்தகடுகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர் நல அலுவலர்கள் மீண்டும் இவற்றை சரிபார்த்து தொகை வழங்குவதற்காக சென்னை கட்டுமான தொழிலாளர் நலவாரிய செயலாளரிடம் அனுப்பி வைத்தார். புள்ளி விபரங்களை சரிபார்த்து கணினி பயன்பாடு செய்து வழங்கும் மென்பொருளை தயாரித்து வழங்கிய வேறு ஒரு நிறுவனத்திடம் குறுந்தகட்டை ஒப்படைக்கச் சொல்லியுள்ளனர். இந்த நிறுவனமும் கணினி பயன்பாடு செய்து தருவதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என சொல்லியுள்ளது. அதன் அடிப்படையில் அந்தத்தொகையை கடந்த 26.5.2009 அன்று வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த நிறுவனத்தின் மூலம் காரியாபட்டி நிறுவனம் வழங்கிய குறுந்தகடுகளை கணினி பயன்பாடு செய்து மீண்டும் கட்டுமான தொழிலாளர் நலவாரியச்செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ளது“ என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு பதிவை குறுந்தகட்டில் பதிவு செய்த பின் திறந்து பார்ப்பதற்கு, சங்கேத குறியீடு தயார் செய்து வைத்திருக்கப்படும். அந்தப்பணிக்கு வேறு ஒரு நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதன் சங்கேதக்குறியீடு இல்லாமல் காரியாபட்டி நிறுவனம் குறுந்தகட்டில் பதிவு செய்த பணிகளில் பல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் தாங்கள் செய்து தந்த பணிகளில் எழுத்துப்பிழை. இதர பிழைகளை சரிசெய்து தருவதாக அந்த நிறுவனம் கூறியிருந்தது. அதன்படி தவறுகளை சரிசெய்யும் வேலையையும் தற்போது பல கணினிகளைக் கொண்டு செய்து வருகிறது.
இப்படி பதிவு செய்யப்பட்ட குறுந்தகட்டுப்பணியில் ஒரு மாவட்டத்தின் பதிவில் சம்பந்தமில்லாத வேறு மாவட்டத்தின் பதிவு வந்துள்ளது. பல மாவட்ட பதிவுகளில் உறுப்பிர்களின் விபரங்களுக்குப் பதில் வெள்ளையாக இருந்ததுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையாளர் அலுவலகத்தில் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட பணிகளுக்கு எப்படி பல லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது என்றும், எப்படி இதற்கு காசோலைகள் வழங்கினீர்கள் என்ற கேள்வியையும் சென்னையில் உள்ள அதிகாரிகள் எழுப்பியுள்ளனர். இப்படிப்பணிக்கு வேலை முழுவதும் முடியும் முன் காசோலை வழங்கச்சொன்னது யார், 7 மாவட்டப்பணிகளையும் ஒரே நிறுவனத்திற்கு வழங்கியது யார் என்ற விசாரணையை மேற்கொள்வதன் மூலம் மிகப்பெரிய முறைகேட்டினை தமிழக அரசு தடுத்திட முடியும். இந்தப்பணியை அரசு செய்யுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக