செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010
சிலுவை சுமக்க தேவ மகனல்ல நாங்கள் . . .
எத்தனை முறை நீங்கள்
விலைகளை உயர்த்தினாலும்
உங்களுக்கு தாங்கக்கூடியவர்கள் தான் மக்கள்!
எத்தனைமுறை ஏற்றினீர்கள் என
கணக்கு வைக்கமுடியாத அளவு
உயர்த்தப்பட்ட பொருட்களின் விலை உயர்வால்
வரிகளைச் சுமக்கும் மக்கள்
உங்களுக்கு தாங்கக்கூடியவர்கள் தான்!
அண்டை மாநிலங்களை விட
தமிழகத்தில் குறைவென
அறிக்கையில் ஒளிந்து கிடக்கும்
உங்கள் சாமர்த்தியத்தினால்
குறைந்து விடவில்லை
மக்கள் சுமையின் கனம்.
ஆட்சிக்கட்டிலில்
அடுத்து யார் அமரவேண்டுமென்ற
கணக்கு வழக்குகளில் உள்ள
உங்களுக்கு- மக்களின் வருவாய் நிலை
தெரிந்திருக்க நியாயமில்லை தான்!
வீட்டுக்கு ஒரு தொலைக்காட்சி தந்த
உங்கள் ஆட்சி -குடும்பத்திற்கு
ஒரு வீடு வழங்கியிருந்தால் பரவாயில்லை.
பத்துக்குப் பத்து அறைகளில்
அட்டை பூச்சி போல
ஒட்டிக்கிடக்கும் குடும்பங்களின்
மின்கட்டணம் - எப்போதும் இருமடங்கு தான்
என்ற விபரம் தெரியுமா உங்களுக்கு?
ஒரு ரூபாய் தான் உயர்த்தியுள்ளதாக
கூறுகிறீர்கள் . . .
கல்வாரி மலையில்
சிலுவை சுமந்த
தேவ மகனல்ல மக்கள்.
நீங்கள் எத்தனை முறை
சுமத்தினாலும் சுமக்க . . .
தாங்கியவர்கள் நிமிர்ந்தெழுந்தால்
தாங்க முடியாத நிலை வரும்.,
அது ஆட்சி நாற்காலியை
குப்புறத்தள்ளும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக