சனி, 14 ஆகஸ்ட், 2010

மூவர்ணக்கொடியின் கீழே . . .



நாய்கள் ஜாக்கிரதை என்ற
போர்டுகள் தொங்கும் வீடுகள்
முதல்முதலாக பிரவேசித்தலுக்கான 
சுதந்திரம் குறித்த புரிதலை
எனக்கு உருவாக்கின.

யாரிடமும் கேட்காது
பெய்யும் மழையும், வெயிலும்
கிழிந்த கூரைகள் வழியாக
எங்கள் வசிப்பிடங்களை
அணுகிய போது தான்
இயற்கையின் சுதந்திரம்
எப்படிப்பட்டது என உணர்ந்தோம்.

கதர்க்குல்லா அணிந்த காங்கிரஸ்காரர்களின்
வந்தே மாதரம் முழக்கங்களுக்கு மத்தியில்
எங்கள் ஊர் பள்ளிகளில் ஏற்றப்படும்
மூவர்ணக்கொடியின் கீழே
அணிவகுத்து நிற்கும் குழந்தைகளிடம்
ஆரஞ்சு மிட்டாய் வடிவத்தில்
பத்திரமாய் இருக்கிறது
இன்னமும்  சுதந்திரத்திருநாள்.

கடையில் விற்றப் பொருளை
வாங்கித்தந்தது போல
அரையாடை தரித்தவர்
வாங்கித் தந்தது  சுதந்திரம் என்றவர்கள்
அவரின் பெயரிலேயே
பேரன் வரை பிரதமராக
பெயர் பட்டியலை
தயாராகவே வைத்துள்ளார்கள்.
குலக்கல்வி முறை ஒழிந்த நாட்டில்
குலஆட்சி முறை இன்னமும் ஒழியவில்லை.
அது தமிழகத்திலும் தொலையவில்லை.

கப்பல்கள் மூலம் வந்து
அடிமைப்படுத்தியது ஒரு காலம்.
காகிதம் மூலம்
அடிமைப்படுத்துவது இக்காலம்.
அன்று அதற்கு பெயர்
வியாபாரம் என்றார்கள்
இன்று  ஒப்பந்தம் என்று பெயர் சூட்டுகிறார்கள்.

இருந்ததை  இழந்து
அடிமைகளாய் மாறி
போராடித்தான் பெற்றோம் சுதந்திரத்தை
பெற்றதைக் காக்க
பெரும்போர் புரிய வேண்டியிருக்கிறது. 
வித்தியாசம் ஒன்றே ஒன்று தான்
அன்று  ஆங்கிலேயரிடம் போராடினோம்.
இன்று ஆட்சியாளர்களிடம் போராடுகிறோம்.

1 கருத்து:

கலகலப்ரியா சொன்னது…

நல்லா எழுதுறீங்க... பின்னூட்டமெதுவும் காணோம்.. தமிழ்மணம், இன்ட்லி திரட்டிகளில் இணைக்கலாமே...