அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்ற கோரிக்கையை தானே எழுப்பி தானே நிறைவேற்றியதாக தமிழக முதல்வர் கருணாநிதிகூறியிருந்தார். கடந்த பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களில் அடித்தட்டு மக்களாக கிடந்த அருந்ததிய மக்களுக்கு ஆதரவான அமைப்புகளின் தொடர்போராட்டங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் எழுச்சிமிகு இயக்கங்களும் அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததே வரலாறு. அதை நிறைவேற்றித்தரும் இடத்தில் தமிழக அரசு இருந்துள்ளது.
தமிழக முதல்வரால் பெருமையாக பேசப்படும் அருந்ததிய மக்களுக்கான உள்ஒதுக்கீடு பள்ளிக்கல்வித்துறையில் நடைமுறைப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவது குறித்த செய்தி வந்ததும் விசாரிக்க ஆரம்பித்தோம்.
மத்திய அரசும், மாநில அரசும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசுப்பணியிடங்களில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15(4)- ன் படி உரிய அடிப்படை உரிமைகளை வழங்கிட வேஒடும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், மத்திய, மாநில அரசுகளின் அனைத்துத்துறைகளிலும் தலித் மக்களுக்கான வேலைவாய்ப்புகள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. அத்துடன் ஒரு சில இடங்களில் சுழற்சி முறை என்ற பெயரில் தலித் மக்களுக்கான பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பளித்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய அரசின் ரயில்வே, இன்சூரன்ஸ், தபால், தந்தி போன்ற துறைகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தலித் என்ற போலி சாதிச்சான்றிதழ் பெற்று பணியில் இருந்து வருகின்றனர். ஒரு சில துறைகளில் இதுபோன்ற போலிச்சான்றிதழ் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தான் தமிழக முதல்வர் கருணாநிதி, அருந்ததிய மக்களுக்கு கடந்த 29.4.2009 அன்று உள்ஒதுக்கீடு என்ற அரசாணையை அறிவித்தார். ஆனால், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், பள்ளிக்கல்வித்துறையின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்( P.E.T.) 853 பணியிடங்களுக்கான பணி நியமனம் செய்ய 12.11.2009 அன்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனைக் கண்ட நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலூகாவிலுள்ள அயிந்துமனை கிராமத்தில் வசிக்கும் அருந்ததிய பிவைச் சேர்ந்த கே.ரவி என்பவர் கடந்த 5.1.2010 அன்று உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என அரசுக்கு முறையாக மனு அனுப்பினார். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். அதன்படி அவருக்கு பணி ஒதுக்கீடு செய்ய அரசாணை எண்: 50/2009-ன் அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து தலித் விடுதலை இயக்கம் சார்பில் முதல்வர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அரசின் முன்மைச்செயலாளர், ஆணையர் ஆசிரியர் பணி நியமன வாரியம், அரசுச்செயலாளர் ஆதிதிராவிடர்நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்பிரிவு இயக்குநர் ஆகியோருக்கு மனு அனுப்பியும் இதுவரை நீதிமன்ற பரிந்துரை அமலாகவில்லை. அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கிய முதல்வர் கருணாநிதி, அதை நிறைவேற்றவும் முன் வர வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தின் பல திசைகளிலும் இருந்து எழுந்துள்ளது. முதல்வர் என்ன செய்யப்போகிறார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக