இசையை மறக்காத குயில்கள்
வழக்கம் போல
இன்றும் புதிய பாடல்களை இசைத்தன.
கொட்டும் அருவிகள்
தாளம் தப்பாமல்
வழக்கம் போல
ராகமிசைத்தன.
மடிமுட்டி
பால் குடிக்கும் கன்றுகளுக்கு
தாய்ப்பசுக்கள்
வழக்கம் போல
தூய பாலை ஈந்தன.
இலையுதிர்கால மரங்கள்
பூமியை முத்தமிட
வழக்கம் போல
இலைகளை வாரி வாரி இறைத்தன.
பார்வையற்ற
யாசகனின் கெஞ்சலை
வழக்கம் போல - உலோபி
உதாசீனப்படுத்தினான்.
ஆசனவாய் மூலம்
மனிதர்கள்
வழக்கம் போல
மலம் கழித்தனர்.
பொதுவேலைநிறுத்தத்தன்று
வழக்கம் போலவே
எல்லாம் நடந்தன . . . .
அத்தியாவசியப் பொருட்களுக்கு
விண்ணைத் தொட
விலைவாசி சிறகு பொருத்திப் பார்க்கும்
அதிசயம்
ஆட்சியாளர்களுக்கு
வழக்கமானது தான்.
வெறி நிறைந்த வரியால்
பிற தேசத்தைக் காட்டிலும்
பெட்ரோலியப்பொருட்கள்
விலை இருமடங்கு
இந்தியாவில் இருப்பது
வழக்கமானது தான் என்று
நீங்கள் சொல்வதை
ஏற்றுக்கொள்ள
நாங்கள் உங்கள் மந்திரிகள் அல்ல. . .
மக்கள்.
வர்த்தகம் என்ற பெயரில் வந்து
ஆட்சியாளர்களாய் மாறிய
கும்பினிப்படைகள்
இன்னும் அகன்றிடவில்லை.
கள்வனிடமே
சாவி கொடுப்பது போல
பெட்ரோலிய விலைகளைத் தீர்மானிக்க
கம்பெனிக்கே அனுமதியா என்று
கொதித்தெழும் மக்கள்
கோபத்தணலோடு
வீதிக்கு வந்தால்
காக்கிகளையும், காலிகளையும்
கொண்டு தாக்குகிறீர்கள்.
எல்லாம் வழக்கம் போல
நடந்ததாகக் கூறுகிறீர்கள்.
பிடியில்லா ஆயுதமான
வன்முறையை ஏவினால்
பிடித்த கரங்கள் சீழ்பிடிக்கும்.
அதை ஏவிவிட்டவர்களையே
பாழடிக்கும்.
வழக்கம் போல நடப்பதற்கு
வாழ்க்கை ஒன்றும் துறவறமல்ல . . . .
போராட்டம் !


1 கருத்து:
arumayana, azhamana arthamulla varigal analum aruvarukkam avasiyam illatha andha iru varigal
ahatrapada vendum.
adhan pagaram achiduga ayiram
veru adaylangal.
adhu thoondum aavalai padithida
allel achuruthum anugida.
vazhthidum
venkatraaj.
கருத்துரையிடுக