வெள்ளி, 2 ஏப்ரல், 2010
கனவின் கனவில். . .
வாழ்க்கைக்கான
போராட்டம் போல
தூக்கத்திற்கான
போராட்டமும் தொடருகிறது.
கழுத்தை நெரிக்கும்
நாளையை நினைத்து
இன்றைய இரவுகளும்
இன்றை நினைத்து
நாளைய இரவுகளும்
கழிந்து கொண்டிருக்கின்றன.
பால்க்காரனின்
மணியோசையோடு
துவங்கும் எனது
சயனநேரத்தில்
தட்டுப்படும் கனவுகளில்கூட
புன்னகைப்பூ பூப்பதில்லை.
புன்னகையைத் தவழவிட்டவாறு
உறங்கிக்கொண்டிருக்கிறாள்
அருகில் என் செல்லமகள்.
அவளது கனவுக்குள்
நுழைந்தேன்.
கடவாயோரம் தேக்கிவைத்த
பாலை எனக்குப் புகட்டியவாறு
அவள் உலகிற்கு
அழைத்துச் சென்றாள்.
தனது நான்கைந்து பொம்மைகள்
பேசிக்கொண்டிருந்ததை
எனக்குக் காட்டினாள்.
நான் வராவிட்டால்
பொம்மைகளோடு
உரையாடிக் கொண்டிருப்பாளாம்.
லேசாக ஈரம்பட்ட
அவளது ஆடையைக் கழற்றி விட்டு
வேறு ஆடை உடுத்தி
உதட்டில் முத்தமிடும் தாயின்
தொடுதலில்
மீண்டும் சிரிக்கிறாள்.
கனவை விட்டு
வெளியேறும் போது
எனது கைகளில் திணித்தாள்
ஒரு பொம்மையை.
விடியலில்
என் கரங்களில்
உறங்கிக் கொண்டிருந்தது
மகள் கொடுத்த பொம்மை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக