தீண்டாமை ஒழிய வேண்டும் என்றார் மகாத்மா காந்தி. இன்று அவருடைய பெயரில் உள்ள மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தலித் மக்கள் தீண்டாமையின் பெயரால் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
தற்போது காந்தி அருங்காட்சியகமாக அமைந்துள்ள இடம், மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்தது. 13.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தை புதுதில்லியில் உள்ள அகில இந்திய காந்திய ஸ்மாரட் நிதிக்கு நன்கொடையாக தமிழக அரசு வழங்கியது என்பது வரலாறு. மதுரையைத் தவிர இந்தியாவில் தில்லி, மும்பை, பாட்னா, கொல்கொத்தா, புனே, குஜராத் ஆகிய இடங்களில் காந்தி நினைவு அருட்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென் இந்தியாவில் காந்தியின் நினைவைப் போற்றும் வகையில், மதுரை காந்தி அருட்காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு தான் காந்தியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரியவகை புகைப்படங்கள், அவரது மூக்குக்கண்ணாடி,
ராட்டையில் நூற்றநூல், அவர் பயன்படுத்திய கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் மிகவும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்துடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட காந்தியின் அஸ்தி, மியூசியத்தில் உள்ள, அமைதிப்பூங்கா என்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
எப்போது இந்தியாவை விட்டு தீண்டாமை விலகுமோ அப்போது தான் உண்மையான சுதந்திரம் வந்ததாக் கொள்ள வேண்டும் என மனம் புழுங்கிப் பேசியவர் காந்தி. அவரின் பெயரில் உள்ள மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தலித் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் விசாரிக்க ஆரம்பித்தோம்.
1956-ஆம் ஆண்டு காந்தி மியூசியம் கட்டுமானப்பணி துவங்கிய போது அங்கு வேலைக்கு வந்தவர் வி.முனியாண்டி, கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூரைச் சேர்ந்த இவருக்கு 8 குழந்தைகள். இதில் தற்போது 6 பேர் உயிருடன் உள்ளனர். கட்டுமான வேலைக்கு வந்தவர், காந்தியின் புகழைக் கேட்டு அங்கேயே தோட்டி வேலை செய்ய ஆரம்பித்தார். அப்படியே அங்கேயே தங்கி வேலை செய்ய ஆரம்பித்தவருக்கு காந்தி அருட்காட்சியகம் திறக்கும் போது பண்டித ஜவஹர்லால் நேரு,பணிநியமன ஆணையை வழங்கினார். இவரைப் போன்றே இதே காலக்கட்டங்களில் ஆர்.முனியாண்டி, பி.குருசாமி ஆகியோர் காந்தி அருட்காட்சியகத்தில் தோட்டி வேலைக்கு வந்தார்கள்.
காந்தி அருட்காட்சியகத்தின் வலப்புறம் உள்ள வீடுகளில் இவர்கள் மூன்று பேரின் குடும்பங்கள் இருந்து வருகின்றன. அவர்களின் குடும்பங்களைக் காலி செய்ய வேண்டும் என காந்தி அருட்காட்சியக நிர்வாகம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. குறைந்த அளவு படிப்பறிவு உள்ள மூவரும் தங்களது பிள்ளைகளை போதிய அளவுப்படிக்க வைக்கவில்லை. தற்போது இவர்கள் மூன்று பேரின் குடும்பத்தினரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
தங்களுடைய மகன்களுக்கு காந்தி அருட்காட்சியகத்தில் வேலை வழங்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக மனு செய்து வருகின்றனர். ஆனால், யாருக்கும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து வி.முனியாண்டி, காந்தி அருட்காட்சியக செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியுள்ளதாவது: "நான் காந்தியத்தின் ஊழியன், ஓய்வுபெற்ற நாள் முதல் என் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். எனவே தான் என் மகனுக்கு வேலை வேண்டி உங்களிடம் 14 ஆண்டுகளாக மனுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். ஜாதி அடிப்படையில் வேலை கேட்கவில்லை. காந்தியத்தின் மூத்த ஊழியன் என்ற முறையில் கருணையின் அடிப்படையில் தான் வேலை கேட்கிறேன். 1956-ஆம் ஆண்டு ஒரு தோட்டியாகத்தான் பணியில் சேர்ந்தேன். எனது ஊதியம் மிகவும் குறைவு. எனவே என் பிள்ளைகளை என்னால் முழுமையாக படிக்கவைக்க இயலவில்லை. என் மகனுக்கு வேலை கொடுத்து எங்களின் குடும்பத்தை வாழ வைக்க வேண்டுகிறேன். என் மகனுக்கு கல்வியறிவு குறைவு தான். என்னைப் போன்று காந்தியத்திற்கு தன் குடும்பத்தை அர்ப்பணிக்க என் மகன் தகுதியானவன். தோட்ட வேலை, வாட்ச்மேன் வேலை, உதவியாளர் என அவனுடைய தகுதிக்கு தகுந்த ஏதாவது வேலை போட்டுக் கொடுங்கள்" என்று எழுதியுள்ளார்.
ஓய்வுபெற்ற இவரது வீட்டின் மின்இணைப்பு, தண்ணீர்க்குழாய் இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் காந்தி அருட்காட்சியகத்தில் இருளில் வசித்து வந்த வி.முனியாண்டி தனது குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி துண்டிக்கப்பட்ட இணைப்புகளைப் பெற்றார்.பி.குருசாமி என்பவரும் தோட்டி வேலை செய்து ஓய்வுபெற்றவராவார்.ஆர்.முனியாண்டி என்பவர் தோட்டி வேலை செய்து ஓய்வுபெற்று இறந்துவிட்டார். இவர்களுடைய குடும்பத்தினர் தற்போது காந்தி அருட்காட்சியகத்தில் புதர்கள் மண்டிக் கிடக்கும் பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளுக்குள் குழாய் இணைப்பு இருந்ததது போல, இவர்கள் வீடுகளுக்குள்ளும் குழாய் இணைப்பு இருந்துள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலே இவர்கள் வீட்டுக்குள் இருந்து குழாய் இணைப்புத் துண்டிக்கப்பட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த கிணறுகள் தூர்ந்து போய் உள்ளதால், போர்வெல் போடப்பட்டும் அது பயன்பாடில்லாமல் கிடக்கிறது. 600 தென்னை மரங்கள், கனகாம்பரம், நெல் என நன்றாக விளைந்த இந்த காந்தி அருட்காட்சியகத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் அதிகாரியாக இருக்கும் போது நிர்வாகம் நன்றாக இருந்தது. தோட்டி வேலை என்றாலும், காலையில் எழுந்தவுடன், கைராட்டையில் நெசவு செய்து விட்டுத்தான் மற்ற வேலைகளைச் செய்வோம் என பழைய நினைவுகளை வி.முனியாண்டி பகிர்ந்து கொண்டார்.
காந்தி அருட்காட்சியகத்தில் மற்றசாதிக்காரர்கள் வசிக்கும் வீடுகளைப் மராமத்துப் பார்த்துக் கொடுத்தவர்கள், எங்களுடைய வீடுகள் பக்கம் தலைவைத்துப் படுக்க மறுக்கிறார்கள் என வி.முனியாண்டியின் மகன் கண்ணன் கூறினார். இதே போல தங்களுடைய வீடுகளுக்குச் செல்லும் வழியில் தார்ச்சாலை அமைத்தவர்கள் எங்களுடைய பகுதியை கண்டுகொள்ளவில்லை என்றார் குருசாமியின் மகன் முத்துக்குமார். கமிட்டி கூடி தான் வேலை வழங்க வேண்டும் என்கிறார்கள். எத்தனை முறை எங்களுடைய தந்தைகள் மனு போட்டுள்ளனர். ஒருநாளாவது எங்களை அழைத்து கமிட்டி பேசியுள்ளதா என அவர் வினா எழுப்பினார்.
ஓய்வுபெற்றவர்கள் இரண்டு மாதகாலத்திற்குள் வீட்டைக்காலி செய்ய வேண்டும் என தலித் மக்களான எங்களுக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஆனால், இங்கு பணிபுரிந்த ஒருவர் ஓய்வுபெற்று இரண்டு ஆண்டுகளாகியும் வீட்டைக்காலி செய்யவில்லை. அவரது மகனுக்கு வேலை போட்டுத்தரப்பட்டு அவர்கள் இன்னமும் இங்கேயே வசித்து வருகின்றனர் எனக்கூறும் அவர்கள், அதே போல எங்களுடைய பிள்ளைகளுக்கும் வேலை போட்டுத்தரட்டும் எனக்கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காந்தி அருட்காட்சியகத்தில் தோட்டவேலை மற்றும் வாட்ச்மேன் பணி தனியாரிடம் விடப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், 6 மாதங்களாக பணியாற்றியவர்களுக்கு சம்பளம் தரவில்லை. அதனால் காந்தி அருட்காட்சியகமே அவர்களுக்கு ஊதியத்தைக் கொடுத்து மீண்டும் வேலைக்கு அமர்த்திக் கொண்டது. தற்போது அவர்களுக்கு காந்தி அருட்காட்சியகமே ஊதியம் வழங்கி வருகிறது. ஆகவே. ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தும் காந்தி அருங்காட்சியக நிர்வாகம், 40 ஆண்டுகளாக பணியாற்றிய தலித் மக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கருணையின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். தீண்டாமை என்பது ஒரு பாவச்செயல் என்று சொன்ன காந்தியடிகளின் பெயரில் உள்ள காந்தி அருட்காட்சியகத்தில் தலித் மக்களுக்கு தீண்டாமை இழைத்துவிடக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக