சனி, 27 மார்ச், 2010
காற்றைக் கைகாட்டி தப்பிக்கமுடியுமா?
சங்ககாலம்
காப்பிய காலம்
நீதி நூல் காலம்
பக்தி இலக்கிய காலம்
படித்த நாங்கள்
இருண்ட காலத்தில்
என்ன படிப்பது?
ஏனெனில்
இது தேர்வு காலம்.
தேர்வு நேரமானாலும்
தெளிவாக அறிவிக்காத
மின்வெட்டால்
இருட்டாகிப் போகுமோ
எங்கள் எதிர்காலம் ?
இருட்டைப் பயன்படுத்தி
குற்றங்கள் நடந்தது
ஒரு காலம்.
இருட்டே
குற்றமாகி
நிற்பது இக்காலம்.
இருண்ட கால பாடல்களின்
பக்கங்களை எங்களை விட
வேகமாக புரட்டுகின்றன
கொசுக்கள்.
மன்னர்கள் ஆட்சியில்
கவரி வீசிய காலம் போல
இந்நாளில்
விசிறி வீசி திரிகிறோம்.
காற்றாலைகள்
கைவிட்டதால்
மின் வெட்டு விழுவதாக
எத்தனை முறை சொன்னாலும்
அனலும், புனலும் கொண்டு
சேர்க்காத மின்சாரத்தை
காற்றைக் கைகாட்டி
ஆட்சியாளர்கள் தப்பிக்க முடியுமா?
முன்பு மாதத்தில் ஒருநாள்
மின்வெட்டு நடக்கும்.
அதுகுறித்த அறிவிப்புகள்
தந்தி போலிருக்கும்.
இப்போது
எப்போது போகும் என
அறிவிப்பில்லாததால்
செத்துக் கிடக்கின்றன
சின்ன, சின்ன ஆலைகள்.
வேலை இழந்தகூட்டம்
கடனுக்கு கைநீட்ட
கழுத்தை நெறிக்கிறது
கந்துவட்டிக்கூட்டம்.
கைவிளக்கேந்திய காரிகையாக
மெழுகுவர்த்தி ஏந்திய
தேவதைகளாக
வீட்டுப் பெண்கள் மாறி
வெகுகாலமாகி விட்டது.
மின்சாரத்தைக் கண்டுபிடித்தது யார்
என்ற கேள்வியைப்போல்
மின்வெட்டைக் கண்டுபிடித்தது
யார் என்றால்- அதற்கு கட்டாயம் பதில்
தாமஸ் ஆல்வா எடிசனாயிருக்காது.
ஆள்பவர்களைக் கேட்டால்
அந்த பதில் தெரியக்கூடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக