செவ்வாய், 23 மார்ச், 2010

யோக்கிய சிகாமணிகள்



பென்னாகரம் இடைத்தேர்தல் மார்ச்-27ந் தேதி நடை பெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்து பென்னாகரத்தில் திமுகவினர் குவிக்கப்பட்டு, வீடு வாரியாக கணக்கெடுப்பு செய்யப்பட்டும், மகளிர் சுயஉதவிக்குழுவினரைக் கொண்டும் பணம் பட்டுவாடா நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி, மதுரை திருமங்கலம் பாணியில், ஆரத்தி தட்டுக்களில் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை விட்டெறிந்தும் வாக்குகளைப் பறிக்க திமுக முயற்சி செய்வதை வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திடம் பாமக புகார் செய்தது. ஆனாலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் நடவடிக்கை எடுக்காததால், தேர்தல் ஆணையம் அவரை உடனடியாக மாற்றியது. ஆனாலும், திமுக தேர்தல் விதிமுறைகளை மதித்ததா?


சைரன் பொருத்திய கார்களை தேர்தல் நேரத்தில் பயன் படுத்தக்கூடாது என்ற விதிமுறைகளை மீறி தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் துரைசாமி, பென்னாகரம் தொகுதிக்குள் சைரன் காருடன் பவனி வந்ததையும். அக்கார் பறிமுதல் செய்யப்பட்டதையும் திமுக வசதியாக மறந்து விட்டது. இது மட்டுமின்றி பென்னாகரத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் படம் அச்ச டிக்கப்பட்ட பையை தொகுதி முழுவதும் திமுகவினர் வினி யோகம் செய்துள்ளதையும் செய்தித்தாள்கள் படத்துடன் சுட்டிக்காட்டியுள்ளன.



காவல்துறை பாதுகாப்போடு ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, முதல் கட்டமாக பண வினியோகத்தை முடித்து விட்டதாக ஏற்கனவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.


தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, பணத்தைக் கொண்டு வெற்றிப் பெற்று விடலாம் என திமுக மனப்பால் குடிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சுட்டிக்காட்டியிருந்தார். உடனே தனது பாணியில் “யோக்கிய சிகாமணிகள்” என முரசொலி பெட்டிச்செய்தி வெளியிடுகிறது.



“பீகாரில் கூட தேர்தலை முறையாக நடத்தி விடலாம். காஷ்மீரில் கூட தேர்தலை நடத்தி விடலாம். ஆனால், தமி ழகத்தில் அப்படி நடத்த முடியாத நிலை உள்ளது என தலைமை தேர்தல் ஆணையராக இருந்த கோபால்சாமி சுட்டிக்காட்டியதை வசதியாக மறந்து விட்ட திமுக, யோக்கியம் குறித்துப் பேசுகிறது.







கருத்துகள் இல்லை: