திங்கள், 15 மார்ச், 2010

கந்து வட்டி ஒழிப்புச்சட்டம் ஒழிந்து போனதா?


                                                     தோழர் வேலுச்சாமி


நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கந்து வட்டிக் கும்பலால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் கந்து வட்டி ஒழிப்புச்சட்டம் எந்த லட்சணத்தில் அமலாகிறது என்பதற்கு  நல்ல உதாரணம். தமிழக  சட்டமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜீலை 21 ந் தேதி  பேசிய முதல்வர் கருணாநிதி, " கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுக்கும் " என்று கூறினார். அரசின் தீவிர முயற்சி என்றால் தமிழகத்தில் எத்தனை கந்து வட்டிக்காரர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்?
பேச்சு என்னாச்சு?
கந்து வட்டிக்கும்பல்களால் கொலைகள் மட்டுமின்றி தற்கொலைகளும் அதிகமாக நடைபெற்று வருகிறது. நடிகை சுலக்சனா கந்து வட்டிக்கும்பல் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரிட்டதும், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் செல்லப்பாண்டியன் கந்து வட்டிக் கும்பலின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதும் முதல்வர் சட்டமன்றத்தில் பேசியதற்கு பின் நடைபெற்ற சம்பவங்கள் ஆகும். இது போல ஏராளமான குற்றச்சம்பவங்களை நாம் பட்டியலிட முடியும்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டிக்கடைகள் உள்ளன. தினவட்டி, மணி நேர வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் போன்ற வரன்முறை இல்லா வட்டி, ரன் வட்டி என பல பெயர்களில் கந்துவட்டி வசூலிக்கப்படுகின்றது. இதில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள கந்து வட்டிக்கடைகளில் ஆயிரம் ரூபாய்க்கு 200 ரூபாய் என அநியாய வட்டி வசூலிக்கப்படுகிறது. அன்றாடக்கூலிகளான நெசவாளர்களைக் குறிவைத்து இறங்கிய கந்து வட்டிக்கும்பலிடம் 2 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி அந்தப் பாக்கியை வாரம், வாரம்  செலுத்தி வந்த பெண்ணின் மகள், பணம் கொடுக்கச் சென்ற போது தான் அக்கும்பலின் தூண்டுதலால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு அதை செல்போன் மூலம் படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்ட கொடுமை இது வரை தமிழகம் கண்டறியாத கொடுமையாகும்.
சந்தைப்படுத்தப்படும் பொருளாதாரம்
பெண்களை மனிதர்கள் என்ற  நிலைமறந்து, அவர்களைச்  சந்தைப்படுத்தும் பொருளாக காட்சி ஊடகங்கள் பயன்படுத்தி வருவது தான் விளைவு தான்  சைபர் கிரைம் எனப்படும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் நோக்கமாகும். அதன் வெளிப்பாடு தான் பள்ளிப்பாளையத்தில் அந்தப் பெண்ணுக்கு நடைபெற்ற சொல்லக்கூசும் சம்பவமாகும்.
எந்தப்பொருள் என்றாலும் அதை விளம்பரப்படுத்துவதற்காக பெண்களைப் பயன்படுத்தும் உத்தியை(அது ஆண்கள் பயன்படுத்தும் உள்ளாடையாக இருந்தாலும்) ஊடகங்கள் கைகொள்ள ஆரம்பித்ததன்  இந்திய தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பர வர்த்தக வருவாய் கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதலாகியுள்ளது என சென்டர் பார் மீடியா ஸ்டேடிஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பரத் தொழில் சந்தை மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 16 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 2000-ஆம் ஆண்டு 100 கோடியாக இருந்த இருந்த வர்த்தகம் நடப்பாண்டில் ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் அந்தப்புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
1.1 மில்லியன் டாலர் இழப்பு
பெண்களை குறிவைத்து ஊடங்கள் நடத்தும் யுத்தத்தின் காரணமாக  பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாள்தோறும்  பெருகி வருவதாக பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தணிக்கை இல்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போல, எங்கு பார்த்தாலும்  செல்போன், இணையம் மூலம் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள்,  சித்தரிப்புகள் ஆபாசங்களாக சிடிகளாவும், டிவிடிகளாகவும் மாறி குவிந்து முதலீட்டைக்கு குவித்து வருகிறது. இக்குற்ற நடவடிக்கைகள் சைபர் கிரைம் என அழைக்கப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி வரை உலகம் முழுவதும் 6 லட்சத்து 70 ஆயிரம் சைபர் கிரைம் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதன் மூலம் 1.1 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்தியன் கம்ப்யூட்டர் ரெஸ்பான்ஸ் டீமின் ஆய்வு தெரிவிக்கிறது. இணையத்தளங்கள் மூலம் நடைபெறும் குற்றநடவடிக்கைகளைத் தடுக்க தமிழகம் முழுவதும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
பள்ளிப்பாளையத்தில் கந்து வட்டிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட சைபர் குற்ற நடவடிக்கையை எதிர்த்து காவல் நிலையம் சென்றார் என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி தோழர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டுள்ளார் என நினைக்கும் போது, தமிழகத்தில் 6 ஆயிரம் காவலர்களுக்கு சைபர் கிரைம் குற்றம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது என்ன ஆனது என நமது நினைவுக்கு வருகிறது.
சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் போக்கைத் தடுக்க காவல்துறை போதிய ஆர்வம் காட்டாததன் விளைவு தான் பள்ளிப்பாளையத்தில் நடைபெற்ற கொலை. பாலியல் வல்லுறவு சம்பவங்கள் என உறுதிப்படுத்த முடியும். கடந்த 2007-ஆம் ஆண்டு மட்டும் 20 ஆயிரத்து 771  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவேடு ஆவணம் தெரிவிக்கிறது. இதில் 10 வயதிற்குப்பட்ட பெண்கள் 617 பேர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.
கந்து வட்டி குறித்து ரிசர்வ் வங்கி
எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறுக்குப்புத்திக்காரர்களின் தொழில் பெரும்பாலும், கந்துவட்டியாகத்தான் இருக்கிறது. பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கும் கந்து வட்டியால், தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நபர்கள், குற்ற நடவடிக்கைகளையும் பெருக்கிக் கொள்கிறார்கள். சிறுதொழில்களில் துவங்கி ரியல் எஸ்டேட், சினிமா என முதலீட்டை வேறுப்பாதைக்கும் திருப்பிவிடுகின்றனர். ஆனாலும், அங்கும் இருப்பது கந்து வட்டி தான். தமிழகத்தின் தலைச்சிறந்த தயாரிப்பாளர் என பெயர் பெற்ற ஜி.வெங்கடேஸ்வரன் என்ற ஜிவி கந்துவட்டிக்கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
கந்து வட்டிக்காரர்கள் குறித்து ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது தெரியுமா?" தனியார் நிறுவனமோ, தனியாரோ வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது பற்றி, வரைவுச்சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது. அதன் படி, சொத்து பத்திரங்களை கொடுத்து கடன் பெற்றால், ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டி வசூலித்துக் கொள்ளலாம். சொத்துப்பத்திரங்கள் கொடுக்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் பெற்றால், ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி வசூலித்துக் கொள்ளலாம். வட்டிக்குப் பணம் கொடுப்பவர், இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மிகவும் குறைவான லாம் கிடைக்கும். அதனால், அநியாய வட்டி வசூலிக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்து விசாரிக்கும் போது, இந்த தில்லு, முல்லு வெளியாகி வழக்குப்பதிவு வரை செல்கிறது" எனக் கூறியுள்ளது.
கந்துவட்டிக்காரர்கள் அநியாய வட்டி வசூலிப்பதாக ரிசர்வ் வங்கியே கூறும் போது, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர், அதற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாமா? கடந்த 2003 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட "தமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு சட்டத்தை" முறையாக அமல்படுத்த வேண்டாமா?.
சட்டம் என்ன ஆனது?
"1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில் கண்டுள்ளது எது எவ்வாறு இருப்பினும் , எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் காப்புரைகளை மீறுவாராயின் அல்லது கடன் தொகையினை வசூல் செய்திட எவரேனும் கடனாளியை தொந்தரவு அல்லது தொந்தரவு செய்திட உடந்தையாக இருப்பாராயின், 3 ஆண்டுகள் வரையிலான ஒரு காலத்திற்கு நீட்டிக்கத்தக்க சிறைத்தண்டனையுடன் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கத்தக்க பணத்தண்டமும் விதித்து தண்டிக்கப்படுவார்" என கந்து வட்டி ஒழிப்புச் சட்டம் சொல்கிறது. கடனாளியை தொந்தரவு செய்தாலே 3 ஆண்டுகள் என்றால், கடனாளியை பாலியல் வல்லுறவு செய்ததோடு அதை படம் எடுத்து இணையத்தில் ஒளிபரப்பியதுடன், அதைத் தட்டிக் கேட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியரையும் வெட்டிப்படுகொலை செய்தவர்களுக்கு தமிழக அரசு என்ன தண்டனை அளிக்கப்போகிறது.
சமூகக்குற்றங்களுக்கு எதிராக களம் இறங்கும் மார்க்சிஸ்ட்டுகளைக் கொல்வதன் மூலம் பிரச்சனைகள் முடிந்து போகலாம் சிலர் நினைக்கக்கூடும். துப்பாக்கிக்குண்டுகளையும்,தூக்குக்கயிறுகளையும் முத்தமிட்டவர்கள்  `மார்க்சிஸ்டுகள்.  இருட்டறைச் சிறையேகி தேசவிடுதலைக்கும், சமூகவிடுதலைக்கும் வெளிச்சம் பாய்ச்சியவர்கள். கொங்கு மண்ணில் வீழ்ந்த இதற்கு முன்பு விழுந்த சின்னியம்பாளையம் தியாகிகள், ரத்தினசாமி போன்ற சிவப்பு விதைகளால் முளைத்து நிற்கும் மார்க்சிஸ்ட் பேரியக்கத்தின் சார்பில்  மார்ச்-15ந் தேதி தமிழகம் முமுவதும் கண்டன இயக்கங்கத்தின் முழக்கங்கள் விண்ணதிர நடைபெறுகிறது. பள்ளிப்பாளையத்தில் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தோழர் வேலுச்சாமியின் படுகொலைக்குக் காரணமான அனைவர் மீதும் உரிய நடவடிக்கை  எடுப்பதுடன், கந்து வட்டிக்கொடுமைக்கு எதிராக  உறுதியான நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்ற  இப்போராட்டம் வீறுகொண்டு எழும்.

1 கருத்து:

Unknown சொன்னது…

PALLIPALAYAM NAGARIL KANDHU VATTI INNUM OLIYA VILLAI MARAGA NALUKKU NAL VALARNTHU KONDU POKIRATHU,, RS,20000.00 KU VARAM 2000.00 VATTI VANKUM AVALAM INRUM ULLATHU,, MARAKA DOCUMENT ENRA PEYARIL MUTHIRAI THALIL MATRUM VETRU THALIL SINGNATURE MATRUM CHEQUE LEAF PONRA AVANANGALAI VANKI KONDU AVARKALIDAM VANKIYA THOKAIKKU 3 OR 4 MADANKU VASUL SEITHA PIRAKUM KOODA DOCUMENTAI THARAMAL MELUM PANAM KETTU THONTHARAVU SEIKIRARKAL ITHANAI SARI SEIYYA EATHENUM VALI UNDAA,,? THMILAGA MAKKALIN NAMPIKKAI CHINNAMAI VILANGUM DR,KALAIYAR KARUNANIRI AVARKALAL MATTUMEA ITANAI OLIKKA VALI KANA MUDIYUM,, ENGAL KORIKKAI NIRAIVERUMA...?