வெள்ளி, 12 மார்ச், 2010

வந்தது காற்றா, வழக்கா?

  


ஒரு காலத்தில் சன் தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் “மிட்நைட் மசாலா“ என்ற பெயரில் பாடல்களை ஒளிபரப்பு செய்வார்கள். அதாவது அனைவரும் தூங்கிய பின்பு இரவுப்ப்பாடலை விரும்புவர்கள் பார்ப்பதற்கான ஏற்பாடு இது என சொல்லப்பட்டது. அதன் பின் மெல்ல, மெல்ல நாலாந்தரமான படங்களில் இடம் பாடல் காட்சிகள் மற்றும் படக்காட்சிகள்,  நாடகம் என்ற பெயரில் உறவுமுறைகளை கொச்சைப்படுத்தும் காட்சிகளும் அன்றாடம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
நாடகம், திரைப்படம், பாடல் போன்றவற்றில் ஆபாசக்காட்சிகள் வருவதற்கு வழி உள்ளது. ஆனால் தமிழ் செய்திகளில் இதுவரை அப்படி வந்ததில்லை. ஆனால், அதற்கு வேட்டு வைக்கும் வகையில்  “கதவைத்திற காற்று வரட்டும்“ என்ற தத்துவத்தை உதிர்த்த சுவாமி நித்யானந்தர், நடிகை ரஞ்சிதாவுடன் தனி அறையில் இருந்ததை சன்நியூஸ் தொலைக்காட்சி மீண்டும், மீண்டும் ஒளிபரப்பு செய்தது. கதவை திறந்து வைக்கச் சொன்ன சுவாமி, நடிகையுடன் இருக்கும் போது அப்படியே இருந்து விட்டாரா எனத் தெரியவில்லை. காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீனியாக தான் இருக்கப் போகிறோம் என நித்யானந்தர் நினைத்திருக்க வாய்ப்பில்லை. எப்படி இந்தக்காட்சிகள் எடுக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு மத்தியில், அவருடைய சீடர் ஒருவர் இதனை எடுத்துள்ளார் என்ற செய்திகள தற்போது உலா வருகின்றன. ஆன்மீகம் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக இது போன்ற செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டாலும், அதை இந்த அளவு பூதாகரமாக்கியிருக்க வேண்டும் என கேள்வி எழுகிறது.
இந்தியாவில் பக்தியின் பெயரால் நன்றாக வியாபாரம்  நடைபெற்று வருகிறது என்பதற்கு தொலைக்காட்சிகளில் அன்றாடம் தோன்றி அருள்வாக்கு சொல்லும் சாமியார்கள், கோமாதா பூசை செய்யும் சுவாமிகள், பரிகாரம் சொல்லும் சுவாமிகள், பக்தியால் நீங்கும் தோஷங்கள், பாவமன்னிப்புகளால் தீரும் நோய்கள்  என பலரை வைத்து இதே தொலைக்காட்சிகள் தான் காசு கறக்கின்றன. இதில் புலனாய்வு புடலங்காய் என்ற பெயரில் ஏதோ குக்கிராமத்தில் குறிசொல்லும் சாமியரைக் கூட விடாமல் விரட்டி நிஜமாக  நடந்தது என்ன என்று  நம்பினால் நம்புங்கள்என கதை விடுகிறார்கள். இதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல்  சுவாமி நித்யானந்தர் , நடிகை ரஞ்சிதா காட்சிகளை ஒளிபரப்பினார்கள். இக்காட்சி ஒளிபரப்பாகிய அடுத்த சில நாட்களிலேயே  இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபாலன் களத்திற்கு வந்து விட்டார். “ இதுவரை எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி அவர் குற்றமற்றவர் என்றே நம்புகிறோம் என்ற ராம.கோபாலன், நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் ஒருவர் குற்றமற்றவர் என்று நினைப்பது தான் மரபும், பண்பாடும்“ என்றும் கூறியுள்ளார்.
அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடித்த இந்துத்துவ சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் சொன்ன போது, நாங்கள் நீதிமன்றங்களை விட மக்கள் மன்றங்களைத் தான் மதிப்போம் என்று வாதாடிய ராம.கோபாலன், தற்போது நித்யானந்தர் விவகாரத்தில் மட்டும் நீதிமன்றத்தின் பக்கம் கடைக்கண்ணைத் திறந்துள்ளார். நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கில் தண்டனை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்ட பாபர் மசூதி வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்களுக்கு தீர்ப்பெழுதக்கூடாது என துடிப்பவர்கள்,மறுபக்கம் நீதி என்கிறார்கள். என்ன நாடகம் இது ?

  

கருத்துகள் இல்லை: