புதன், 10 மார்ச், 2010
இடிந்து கிடக்கும் தலித் மக்களின் தொகுப்பு வீடுகள்
தொகுப்பு வீடு இடிந்து பெண் பலி, குழந்தை பலி என அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. கட்டப்பட்ட வீடுகளைப் பராமரிக்காமல், அரசு கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவுதான் இச்சாவுகளுக்கு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட தலித் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் தாட்கோ மூலம் மட்டுமே வீடு கட்டித்தர வேண்டும். இந்த நிதியை வேறு எந்தத் திட்டத்திற்கும் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறி தமிழகத்தில் சமத்துவபுரத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
கட்டப்பட்ட வீடுகள்
தலித் மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பிற சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் வீடுகள் கட்டித்தரலாமா என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ள இலவச வீடு, மனை, நிலம் ஆகியவற்றில் அனைத்து மாநிலங்களையும் விஞ்சிவிட்டதாக புள்ளிவிபரங்களை அள்ளிவிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் கட்டப்பட்டு வரும் வீடுகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 840 வீடுகள் எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு புள்ளி விபரத்தை கூறியுள்ள முதல்வர் இதற்கு முன் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையையும் சொல்லலாம். ஆனால், அப்படி ஏற்கெனவே கட்டப்பட்ட வீடுகளில் பயனாளிகள், குறிப்பாக தலித் மக்கள் வசிக்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டியது அவசியமாகிறது.
தொகுப்பு வீடுகள்
மதுரையில் கடந்த 1971-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கான வீடுகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் தற்போது இடிந்து கிடக்கிறது.
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் கூறப்படுகிறது. இங்கு கடந்த 19.4.1971 ஆம் ஆண்டு துப்புரவுப்பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு 24 தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது.
அன்றைய தமிழ்நாடு மேலவைத் தலைவராக இருந்த சி.பி.சிற்றரசு இந்த வீடுகளைத் திறந்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடுகள் முழுமையாக சேதம் அடைந்து மக்கள் வசிப்பதற்கு லாயக்கற்று உள்ளது. திருப்பரங்குன்றம் பேரூராட்சியாக இருந்த போது கட்டப்பட்ட வீடுகள், இப்போது மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும், துப்புரவுப்பணியாளர்களின் வீடுகள் தரம் உயராமல் இடிந்து போய் கிடக்கின்றன.
துப்புரவுப்பணியில் ஈடுபடும் அருந்ததிய மக்கள் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். முருகத்தலமாக விளங்கும் திருப்பரங்குன்றத்திற்கு அன்றாடம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். போதிய ஊழியர்கள் இல்லாததால் தற்போது நோயின் பிடியிலும் திருப்பரங்குன்றம் சிக்கியுள்ளது.
குப்பை அள்ளுவதிலும் கொள்ளை
திருப்பரங்குன்றம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் துப்புரவுப்பணிக்கென நியமிக்கப்பட்ட 41 பணியாளர்களில் பலர் வேறு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றனர். குடிநீர் பராமரிப்புபணிக்கு 7 பேரும், அலுவலகத்தில் இரவுக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு 3 பேரும் இதில் பயன்படுத்தப்படுகின்றனர். மொத்தமுள்ள வார்டுகளில் 10 வார்டுகளின் பராமரிப்பு பணியை தனியார் வசம் ஒப்படைத்துள்ளனர். இதற்காக ஆண்டிற்கு 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆளுங்கட்சியினரின் பினாமிகளுக்கு இந்த பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட1,2,3,12, 13, 21 ஆகிய வார்டுகளில் நகராட்சி பணியாளர்களைக் கொண்டே வேலை வாங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது. ஆனால், இந்த வேலையையும் தங்களது ஊழியர்களை வைத்துத் தான் செய்ததாக பல ஆண்டுகளாக தனியார் கணக்கு காட்டி வருகின்றனர். இதில் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெறுவதாக புகார் கூறப்படுகிறது.
வெற்றுப்பேப்பரில் கையெழுத்து
கல்வி நிலையில் பின்தங்கியுள்ள அருந்ததிய மக்களிடம், தீபாவளி பண்டிகை அட்வான்ஸ், மருத்துவ விடுப்பு மற்றும் பணிவிடுப்பு கடிதம் தருவதற்கெனக் கூறி, துப்புரவுப் பணியாளர்களிடம் வெள்ளைப் பேப்பரில் எழுதி வாங்கும் அக்கிரமமும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு சுகாதார ஆய்வாளராக உள்ள ஹம்சத் இப்ராஹீம் என்பவர் இச்செயலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து நிர்வாக செயல் அலுவலரிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் உள்ள திருப்பரங்குன்றம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதுடன், அவர்களுக்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்துள்ளதால் கான்கிரிட் வீடுகள் கட்டித்தர வேண்டும். போதிய அளவிற்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர் துப்புரவுப்பணியாளர்களிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கிய பேப்பர்களைத் திரும்ப வழங்க வேண்டும். தனியார் வசம் துப்புரவுப்பணிகளை ஒப்படைக்கக்கூடாது என மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் பொன்.கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் வரும் 6 ஆண்டுகளில் 3 லட்சம் குடிசை வீடுகளை மாற்றி அமைக்கும் திட்டம் தீட்டியுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, அவர் ஆட்சியில் ஏற்கெனவே கட்டப்பட்ட திருப்பரங்குன்றம் பகுதி துப்புரவுப்பணியாளர்களின் வீடுகளையும் கொஞ்சம் கண்டு கொண்டால் நல்லது. கண்டுகொள்வாரா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக