செவ்வாய், 9 மார்ச், 2010

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை. . . .

 

“கழுதை தேய்ந்து கட்டெறும்பானது“ என கிராமத்தில் ஒரு சொலவடை உள்ளது. இந்தப்பழமொழி எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ தமிழக அரசு அறிவித்த 2 ஏக்கர் நிலம் வழங்கும்( ! ) திட்டத்திற்குப் பொருந்தும் போலிருக்கிறது.


நிலத்தோடு பிணைந்தது மனித வாழ்க்கை. ஏழை பாழைகளின் ஏக்கப்பெருமூச்சாக நிலம் மாறியுள்ளது. அவர்களின் கனவை நனவாக்கத்தான் தமிழகத்தில் தஞ்சை தரணியில் தோழர் பி.சீனிவாசராவ் துவக்கி வைத்த நிலமீட்புப்போராட்டத்தை இன்னமும் அதே வீரியத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கமும் தொடர்ந்து நடத்தி வருகின்றன.


முதல்வரின் கோபம்


உழைக்கும் மக்களுக்கான இப்போராட்டங்கள் சூடுபிடிப்பதைக் கண்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோபம் கொப்பளிக்கிறது.“ ஒவ்வொரு கட்சியினரும் இவ்வாறு சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்து, தாங்களும் நிலங்களையோ, கட்டடங்களையோ கைப்பற்றி, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்குகிறோம் என்றால், இதென்ன தமிழகமா? மேற்கு வங்கமா?“ என அறிக்கை விடுகிறார்.


இப்படி அறிக்கை விடும் முதல்வர், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சொன்னது என்ன தெரியுமா? “ இந்தத்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், இந்த 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலமும், முதலைகளின் வாய்களுக்குச் சென்று அவர்கள் ஏப்பம் விட்டு விடாமல், முனியன், கந்தன், மூப்பன், குப்பன் என்ற ஏழைகளுக்கும், பாட்டாளிகளுக்கும் கூலி வேலை செய்பவர்களுக்கும், குக்கிராமத்தில் எலும்பொடிய பாடுபடுபவனுக்கும் கிடைக்கும். அதை தான் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்“ என கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கருணாநிதி பேசினார். சொன்னதை செய்வோம் என அறிக்கை மட்டும் போதாது, காரியமாற்றுங்கள் எனப் போராடினால் இது மேற்குவங்கம் இல்லை என மிரட்டுகிறார்.


50 லட்சம் ஏக்கர்


கடந்த 11.4.2006 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது திமுக தலைவர் கருணாநிதி கூறியது என்ன கூறினார் தெரியுமா?, “ 20 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பதாக அவர்களே ஒப்புக்கொண்ட உண்மைச்செய்தி. ஒரு ஹெக்டேர் என்பது 2.47 ஏக்கருக்குச் சமமாகும். எனவே, 20 லட்சம் ஹெக்டேர் என்பது 50 லட்சம் ஏக்கருக்குச் சமமாகும். இந்தக்கணக்குக்கூடத் தெரியாமல் ஒரு முதலமைச்சர் கூறிய பொய்யைப் பத்திரிகைகளும் வெளியிட்டு அதையும் நம்பிக் கொண்டு நீங்கள் என்னை வந்து கேட்கிறீர்கள்“ என பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்தார்.


அதாவது, தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கருக்குச் சமமான நிலமிருப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இப்படி சொன்னவர் தமிழக சட்டமன்றத்தில் 1.8.2006 அன்று விதி எண்: 110 ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது, முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலத்தை மேம்படுத்தி இந்த அரசால் வழங்கப்படும்“ என அறிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன் 55 லட்சம் ஏக்கர் நிலத்தை முதலைகளின் வாய்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பேன் என்பவர் திடீரென 5லட்சம் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு என எண்ணிக்கையைக் குறைத்தார். ஏற்கனவே அறிவித்தபடி நிலம் வழங்குங்கள் என சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு,முன்பு முதல்வராயிருந்த ஜெயலலிதாவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் தங்களது தேர்தல் அறிக்கையில் சொன்னதையே தான், தங்கள் தேர்தல் அறிக்கையிலும் சொன்னதாக முதல்வர் கருணாநிதி பின்பு சப்பைக்கட்டு கட்டினார். தமிழகத்தில் 4 முறை முதல்வராக இருந்தவருக்கு எவ்வளவு தரிசு நிலங்கள் இருக்கிறது எனத் தெரியாதா? முன்னாள் முதல்வர் சொன்னதை அப்படியே இவரது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்ல முடியுமா என்ற கேள்விகள் அலை அலையாய் எழுகிறது.


32 ஆயிரம் பயனாளிகள்


“ அரசுப் புறம்போக்கு தரிசு நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் மேம்படுத்தி, நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் வழங்கப்படும். அதே நேரத்தில் சொந்தமாக தரிசு நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயக் குடும்பங்களைப் பொறுத்தவரை, அந்நிலங்களை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலமாக மாற்றித் தரவேண்டும் என்று அவர்களாகவே கேட்பார்களேயானால், அவற்றை அரசு செலவில் மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றி அவர்களிடமே திருப்பி அளிக்கப்படும்“ என கடந்த 26.8.2006 அன்று வெளியிடப்பட்ட அரசாணை(நிலை) எண்: 555 கூறுகிறது.


திமுக நாடாளுமன்றத் தேர்தலின் போது, பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு நிலம் வழங்கியதாக கூறியது. இந்தக்கணக்கு உண்மையா என தமிழகம் முழுவதும் கணக்கெடுத்தால் அது உண்மையான எனத்தெரிய வரும்.


தமிழகத்தில் 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் குறித்து, சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் க.ஆனந்தன், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி தமிழ்நாடு நீர்பிடிப்பு முகமையிடம் சில தகவல்களைக் கேட்டிருந்தார். அதற்கு கடந்த 23.1.2009 அன்று தமிழ்நாடு நீர்பிடிப்பு முகமை செயல் இயக்குநர் அலுவலகம் அளித்த தகவல் இது தான். “ இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது முதல் 31.10.2009 ந்தேதி வரை 52 ஆயிரத்து 838 ஏக்கர் பரப்பு நிலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 810.33 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை 32 ஆயிரத்து 895 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்“ என தகவல் அறியும் சட்டத்தின் பதிலளிக்கப்பட்டுள்ளது.


ஆனால், கடந்த 9.10.2009 அன்று அறிக்கை விட்டுள்ள தமிழக முதல்வர், இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலம், ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 789 நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு இந்த அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அப்படியென்றால் நீர்பிடிப்பு முகமை கொடுத்த புள்ளி விபரம் கூறும் தகவல் உண்மையா? முதல்வர் கொடுத்துள்ள புள்ளி விபரம் உண்மையா?


இராமநாதபுரத்திற்கு கல்தா


தமிழகத்தில் 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்திற்குத் தலைமைச்செயலாளர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக நிலநிர்வாக ஆணையர் நியமிக்கப்பட்டார். அவரிடம், இத்திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டால் அவர்,மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறார். ஆனால், மாவட்ட ஆட்சியர்களோ வட்டாட்சியர்கள் தகவல் தரவேண்டும் என அடுத்த நபருக்குப் பிரச்சனையைத் தள்ளிவிடுகின்றனர்.


தகவல்அறியும் உரிமைச்சட்டத்திற்கு மதிப்பளித்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாமக்கல், வேலூர், திண்டுக்கல், திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் தகவல் அளித்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுசமுத்திரத்திட்டம் தடையாணையில் உள்ளதால் 2 ஏக்கர் திட்டத்தின் கீழ் நிலம் வழங்க தகுதியான நிலங்கள் இல்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், தமிழக வரைபடத்தில் உள்ள இராமநாதபுரம் இந்தத்திட்டம் பொருந்தாதா? பல மாவட்டங்களில் சிறு, குறு விவசாயிகளைத் தவிர யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என ஆட்சியர்கள் அறிக்கை அளித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் பெரும் விவசாயிகள், பண்ணை முதலைகளிடம் சிக்கியுள்ள நிலங்கள் எவ்வளவு என்ற விபரங்கள் பல மாவட்டங்களில் கணக்கெடுப்பவேயில்லை. தற்போது இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இதுவரை 2355 நபர்களுக்கு 2558.98 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு செய்யாத நபர்களுககு பட்டா வழங்கப்படவில்லை என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?


இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட சாத்தியமென்றால், தமிழகத்தில் இதுவரை யார், யார் 2 ஏக்கர் நிலம் பெற்றுள்ளார்கள் என்ற விபரத்தை இணையதளத்தில் தமிழக அரசால் வெளியிட முடியாதா என விவசாய சங்கத்தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதில் இலவச நிலம் எவ்வளவு, சிறு, குறு விவசாயிகள் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு தரிசு நிலம் எவ்வளவு, விவசாயிகளிடம் உள்ள அவர்களது நிலத்தை பண்படுத்திக் கொடுத்தது, பள்ளி, கல்லூரி. அறக்கட்டளை என வளைக்கப்பட்டுள்ள அரசு நிலங்கள் எவ்வளவு என பட்டியலிட தமிழக அரசு தயாராக உள்ளதா என்ற கேள்வியையும் இணைத்தே எழுப்புகின்றனர். மேற்குவங்கத்தை சிறுமைப்படுத்துவதற்காக நிலச்சீர்த்திருத்தம் குறித்து பல புள்ளி விபரங்களை அள்ளி விடும் முதல்வர், ஆட்சிக்கு முன் சொன்ன புள்ளி விபரம் படி தற்போது நிலம் தமிழகத்தில் உள்ளதா, வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.











 



கருத்துகள் இல்லை: