சனி, 20 மார்ச், 2010

தீண்டாமையின் பிடியில் அம்பேத்கர்


கடந்த 1998-ஆம் ஆண்டு மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் (என்எப்டிசி) தயாரித்து, நடிகர் மம்முட்டிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த " டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்" திரைப்படத்தை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பி டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யும் நோக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி உதவியில், "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்" திரைப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் தயாரித்தது. இப்படத்தில் அம்பேத்கராக நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு  தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டி இப்படத்திற்காக பெற்றுள்ளார். மேலும், சிறந்த ஆங்கில மொழிப்படத்திற்கான விருது, சிறந்த கலை இயக்குநருக்கான விருது என பல விருதுகளை இப்படம் பெற்றுள்ளது. ஆனால், என்ன கொடுமை என்றால், இப்படம் மகாராஷ்டிரா மாநிலத்தை தவிர வேறு எங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.
சுமார் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய ஆங்கிலப்படமான டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படத்தை இந்தியா முழுவதும் வெளியிடுவதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் க.ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு சாதியத்தலைவராக சுருக்கப்பட்டுள்ள அம்பேத்கருக்கு பல முகங்கள் உண்டு. குறிப்பாக கிராமங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் அவர் சொன்ன கருத்துக்கள் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். காந்தி படத்திற்கு வரிவிலக்கு அளித்து இந்தியா முழுவதும் மத்திய அரசு வெளியிட்டது. ஆனால், அம்பேத்கர் படத்தை முடக்கி வைத்துள்ளதை ஒரு தீண்டாமையாகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் அம்பேத்கர் பெயரைச் சொல்லும் எத்தனையோ தலித் அரசியல் இயக்கங்களாகட்டும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஸ்.சி., எஸ்.டி சங்கங்களாகட்டும், இத்தனையிருந்தும் இப்படம் வெளியிடப்பட வேண்டும் என்ற நோக்கம் இவர்களுக்கு இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது. ஆகவே இப்படத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 3 ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். ஒத்தக்கருத்துள்ள அனைவரையும் இணைத்து இப்போராட்டம் நடைபெற உள்ளது என அவர் கூறினார்.
இப்படத்தை, தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்திடம் இருந்து மக்களிடம் ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ள இருப்பதாக கூறிய அவர், பெரியார் படத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி வெளியிட்டது போல, அம்பேத்கர் படத்தையும் தமிழில் வெளியிட முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் இதுகுறித்து கூறுகையில்,  தேசிய விருதுகளைப் பெற்ற படத்தை கடந்த 12 ஆண்டுகளாக திரையிட முடியவில்லை என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. டாக்டர் அம்பேத்கர் சிறந்த மனிதஉரிமைப்போராளி. எல்லாவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக குரல் எழுப்பியவர். இந்திய வரலாற்றில் அவரது பணி நினைவுகூரத்தக்க வகையில் சிறப்பானதாகும். கடந்த 12 ஆண்டுகளாக அவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை எந்த சக்தி தடுத்தது என புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு எப்படி இதற்கு இரையானது என்றும் தெரியவில்லை. காலதாமதமானாலும் இப்படத்தை உடனடியாக வெளியிட உரிய ஏற்பாட்டை மத்திய அரசு எடுக்க வேண்டும். தமிழக அரசும் இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இப்படத்தை வெளியிட தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் உறுதியான முறையில் செயலாற்ற வேண்டும் என அவர் கூறினார்.


















கருத்துகள் இல்லை: