வியாழன், 4 பிப்ரவரி, 2010
காந்தி கணக்கு
நெருப்பு தகிக்க வேண்டிய
அடுப்பில்- குட்டிகளோடு
விளையாடிக் கொண்டிருக்கிற
பூனைக்குத் தெரியாது
நெருப்பின் சூடு.
கார்த்திகைக்கு ஏற்றப்படும்
திருவண்ணாமலை தீபத்திலும்
திருப்பரங்குன்றம்
மலைஉச்சியில் ஏற்றப்படும் தீபத்திலும்
கொளுத்தப்படும் சொக்கப்பான்களிலும்
ஒளிந்து கொண்டிருக்கும்
நெருப்பின் குணம்
ஒளியை மட்டுமல்ல
வலியையும் வழங்கும் என்பது
அனைவருக்கும் தெரியும்.
கீழ் வெண்மணியில்
ஆண்டைகளினால்
அந்த டிசம்பர் மாத இரவில்
அரைப்படி நெல் அதிகமாக
கூலி கேட்டதற்காக
கொல்லப்பட்ட 44 பேரின்
உடலை சாவுக்கு முன்
தீண்டிய நெருப்பின்
சூடு இன்னும் கனன்று எரிகிறது.
பனி காலத்தில்
கொளுத்தப்படும்
தெருவோரக்குப்பைகளில்
எரியும் நெருப்பு
யாசகர்களுக்கு
கதகதப்பைத் தரும்.
கோவில் தட்டுகளில்
எரியும் நெருப்பு
பிரகார இருட்டைவிட
அச்சகரின் வீட்டின்
வறுமை இருட்டை விரட்டும்.
நெருப்பு
காலுக்குக் கீழே கிடந்தால்
மிதிக்கச் சொல்கிறது.
முகத்திற்கு மேல் வந்தால்
கன்னத்தில் போட்டுக்
கொள்ளச் சொல்கிறது.
நெருப்பு -ஒரு
புரிந்து கொள்ளமுடியாத புதிர்.
ரோம் நகர் பற்றி எரிந்த போது
நீரோ மன்னன்
பிடில் வாசித்தான். . . .
கருத்துக்கணிப்பு நடத்திய
அலுவலகம் ஒன்றில்-மூவர்
கரிக்கட்டையாக்கிப்பட்டதற்கு
கருணையோடு பிடிவிடுதலை என
நீதியரசர் ஒருவர்
தீர்ப்பு வாசிக்கிறார்.
நீதிகள் வழங்கப்படுவதை விட
வாங்கப்படுவதாக ஊரெல்லாம்
கதைக்கிறார்கள்.
நீதிகளை வாங்க முடிந்த
எங்கள் ஊரில்
கத்திரிக்காய்களை கூட
கடைகளில்
வாங்கமுடியவில்லை.
தங்கம் போல தாறுமாறாக
விலையேறும் தக்காளி
ஏழைகளின் ஆப்பிளாய்
இனிமேல் இல்லை .
பருப்பு இல்லாமல்
கல்யாணமா எனப்போய்
பருப்புடன் கல்யாணமா என
கேட்கும் அளவிற்கு
பருப்பின் விலை பறக்கிறது
சந்திராயனை விட உயரமாக !
இலவச தொலைக்காட்சியில்
இடையூறாது ஒலிக்கும்
கட்டுமரமாயிருப்பேன் குரல்
ஏழைகளை நட்டாற்றில் தள்ளிவிட்டுள்ளது.
இருட்டைக் கொண்டு வந்த
சூரியனுக்கு -இப்போது
சிவப்பைக் கண்டால்
பிடிப்பதேயில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில்
சீட்டுகளை வைத்து
தோற்றுப்பிழையை
தோற்றப்பிழை என்கிறது.
ராமனுக்கு
பதினான்கு ஆண்டுகள்
சூரியனுக்கு
பதிமூன்று ஆண்டுகள் என்ற
வனவாச கணக்கு இப்போதும்
எங்களுக்கு நினைவில் இருக்கிறது.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காணச்சொன்னவரின்
சீடர்கள்
காந்தி நோட்டுக்களைக் காட்டி
ஏழைகளை ஏய்க்கப்பார்க்கிறார்கள்.
நமது ஊரில் டீக்கடையில்
கடன் சொல்பவர்கள்
காந்தி கணக்கில்
வைத்துக் கொள் என்பார்கள்.
சூரியன் கணக்கும்
காந்தி கணக்குத்தான்.
ஜனநாயகத்தில் அது
என்றும் செல்லாது தான்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

1 கருத்து:
இது ஒரு நெடுங்கவிதை. ஆனால் அப்படி ஒரு அலுப்பே தோன்றவில்லை. பரபரப்பாக ஆரம்பித்து, பரபரப்புடன் முடியும் இந்தக்கவிதையில் இருட்டை கொண்டு வந்த சூரியனுக்கு சிவப்பைக்கண்டால் பிடிக்கவில்லை. கருத்துக்கணிப்பு போட்ட பத்திரிகை அலுவலகத்தில் கரிக்கட்டையான மூவர்........காலுக்கு கீழே கிடக்கும் நெருப்புக்கும் முகத்துக்கு நேரே நீட்டப்படும் நெருப்புக்குமான வித்தியாசம் போன்ற விஷயங்கள் அற்புதம்.
க.சிவஞானம்
கருத்துரையிடுக