வியாழன், 4 பிப்ரவரி, 2010

ப்ரிய மழை

மண் மணக்க, மணக்க

பெய்கிறது மழை.

தொட்டியில் உரமிட்டும்

தழையாத ரோஜா

துளியாய் மழையிறங்கியதும்

சிவந்து வெட்கத்தால்

தலைகுனிந்து விடுகிறது.

வேப்பமரத்தில்

கட்டப்பட்ட கூட்டில்

இரை ஏந்தும் பொருட்டு

வாய்திறக்கும் குருவிகளுக்கு

அமுதூட்டும் மழை

அப்படியே

தெருவோர நாய்களையும்

குளிப்பாட்டி விடுகிறது.

நான் நனைந்தால்

முடியாமல் போகும்

அம்மாவுக்கு என்பதால்

குடைக்குள் இருந்து கொண்டு

ஜதி சொல்லும்

மழையின் தாளத்தை

ரசிக்கத் தவறுவதேயில்லை.

பருவம் தவறி பெய்தாலும்

பிழையாக இல்லை மழை.

விரல்களால் மழையை

பிடிக்க முயன்று

தோற்று மீண்டும் முயலும்

அவளுக்குப் பிடிக்கும் என்பதால்

மழையை எனக்கும் பிடிக்கிறது.

எப்படியோ-மழை

எல்லோருக்கும்

பிடித்தமானதாய் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: