அழகர்கோவில் சாலையிலிருக்கும்
அந்த புளியமரத்தை
பேய்மரம் என்றார்கள்.
வீங்கி நிற்கும்
அதன் வேர்ப்பகுதி
யாரையோ பாதி விழுங்கி
மீதி விழுங்காமல்
விட்டது போலிருக்கும்.
மரத்தில் பூ விட ஆரம்பித்ததும்
கூடுகட்ட வந்துவிடும்
காக்கைகள்
திடீரென எதனால்
அலறியடித்துப் பறக்கின்றன?
காற்றடிக்கும் போது
சடை சடையாகத் தொங்கும்
புளியம்பழங்கள்
உரசிக்கொள்ளும் சத்தம்
சலங்கையைக் கட்டிக்கொண்டு
ஓடும் பெண்ணைப் போலிருக்கும்.
காக்கைக் கூட்டில்
தவறி வளர்ந்த குயிலின்
இனிமையான இசையை
ரசிக்கவிடாது மிரட்டும்
பேய்மரம்.
யார் வைத்தது எனத்தெரியாமல்
வளர்ந்து நின்ற மரத்தில்
பொதுப்பணித்துறையினர்
அரசு மரமென
முத்திரைக்குத்திச் சென்றனர்.
புளியமரத்தில் பேயிருப்பதாக
பெருங்கதை சொன்ன
கோடங்கியடித்துக் குறிசொல்லும்
காளிமுத்து சித்தப்பா
புளியம்பழம் இறக்க
குத்தகை எடுத்தார்.
பேய்மரம் திடீரென
சாமி மரமானது.
மஞ்சள்துணி சுற்றி
வேல் அருகே குத்தி
பத்தி சொருகி விட்டார்கள்.
இப்போது இரவு நேரங்களில்
புளியம்பழங்கள்
உரசிக்கொள்ளும் சத்தம்
உண்டியலை உடைத்து
சித்தப்பா
சில்லறை எண்ணும்
சத்தமாகவே கேட்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக