புதன், 17 பிப்ரவரி, 2010

அரிசி நெல்லாகும் அசத்தல் '' சாதனை ''


தமிழக அரசு அறிவித்துள்ள 1 கிலோ அரிசி 2 ரூபாய் திட்டத்திற்காக வாங்கப்படும் நெல்லைக் கடத்தி விட்டு அதற்குப் பதிலாக ரேசன் அரிசியை வாங்கி மீண்டும் நெல்லாக்க முயலும் கில்லாடிகளின் வேலையால் திகைத்து நிற்கிறது குடிமைப்பொருள் இலாகா.


ஒரு காலத்தில் ரேசன் அரிசி டிரைசைக்கிளில் கடத்தப்பட்டது. அது கொஞ்சம் , கொஞ்சமாக வளர்ந்து வேன், கார், லாரி என ஆரம்பித்து கடைசியில் ரயிலை வைத்து கடத்தும் அளவிற்கு கடத்தல்காரர்களின் ஆதிக்கம் பெருகியுள்ளது.

நெல்கொள்முதல்

இப்படி ரயிலில் ரேசன் அரிசி ஏன் கடத்தப்படுகிறது என்றால், வெளிமாநிலங்களுக்கு நல்ல விலையில் இந்த அரிசியைக் கடத்துகிறார்கள் என நினைப்போம். ஆனால், புதிய உத்தியை ரேசன் அரிசி கடத்தல்காரர்கள் கண்டுபிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.

தமிழக அரசு, ரேசன் கடைகளில் அரிசியை மானியவிலையில் தருவதற்காக விவசாயிகளிடம் சுமார் 17 லட்சம் டன் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக நெல்கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல்லை அரைத்து அரிசியாக்க தனியார் ஆலைகளுக்கு டிஎன்சிஎஸ்சி அனுமதி வழங்கியுள்ளது. இந்த நெல்லை அரைத்து தான் ரேசன் அரிசிக்குப் பயன்படுத்துகிறார்கள்.இதற்காக தமிழகம் முழுவதும் சில ஆலைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் 26 ஆலைகளுக்கு இப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு வழங்கும் நெல்லை அதிக விலைக்கு விற்றுவிட்டு, அதற்குப்பதிலாக நெல்லுக்குப்பதில் ரேசன் அரிசியை வாங்கி, அரசுக்கு ரேசன் அரிசியாக மீண்டும் அனுப்பும் புது உத்தியைக் கடத்தல்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடத்தலின் மதிப்பு 11 கோடி

கடந்த 2007-ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் மட்டும் கடத்தப்பட்ட ரேசன் அரிசியின் அளவு 1.09 லட்சம் குவிண்டல் எனப்படுகிறது. இதன் மதிப்பு 11 கோடி ரூபாயாகும். கோவை வழியாக 1.16 கோடி அளவிலும், கிருஷ்ணகிரி வழியாக 98 லட்சம் அளவிலும், வேலூர் வழியாக 79 லட்சம் அளவிலும், வடசென்னை வழியாக 62 லட்சம் அளவிலும், சேலம் வழியாக 55 லட்சம் அளவிலும், ஈரோடு வழியாக 53 லட்சம் அளவிலும், மதுரை வழியாக 55 லட்சம் அளவிலும், நீலகிரி வழியாக 17 லட்சம் அளவிலும் ரேசன் அரிசி கடத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2007-ஆம் ஆண்டு 2 ஆயிரம் டன் தமிழக ரேசன் அரிசி, பாண்டிச்சேரி ரயில் நிலையத்தில் பிடிபட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அளவிற்கு ரேசன் அரிசி கடத்தல் மாறியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவிற்கு 2212 டன் அரிசி கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஹரி அன் கோ என்ற நிறுவனம் கடந்த 23 ந்தேதி மாலத்தீவிற்கு ஐஆர் 64 ரக அரிசியை ஏற்றுமதி செய்ய இருப்பதாக தெரிவித்து ஆவணங்களை சுங்க இலாகாவிற்கு சமர்ப்பித்தது.

கப்பலில் கடத்தப்படும் அரிசி

அதில் அரிசியின் மதிப்பு 3 கோடியே 89 லட்ச ரூபாய் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஆவணங்களைச் சரிபார்த்து மாலத்தீவு செல்ல இருந்த எம்வி போந்தி-2 என்ற கப்பலில் அரிசி மூட்டை ஏற்றப்பட்டன. இந்தப்பணியை சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மூட்டைகளை சோதித்து பார்த்த போது அதில் இருந்தவை ரேசன் என தெரியவந்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கப்பலில் இருந்த 1700 மன் அரிசி மற்றும் கப்பலில் ஏற்ற 19 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட 192 டன் அரிசியை பறிமுதல் செய்தனர். இப்படி 2 ஆயிரம் டன்னுக்கு மேலாக வெளிநாடுகளுக்கு அரிசி கடத்தப்படுவது ஒரு புறம் என்றாலும், தமிழகத்தில் உள்ள ஆலைகளுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் இந்த அரிசி கடத்தப்படுகிறது என விசாரித்தால் பெரும்மோசடி அம்பலத்திற்கு வந்தது.

விவசாயிகளிடம் இருந்த வாங்கப்பட்ட நெல்லை ஆலைகளுக்கு அளிக்கும் போது, அதை அரைத்து தரமான அரிசியை அரசிடம் வழங்க வேண்டும் என சில நிபந்தனைகள் உள்ளன. இந்த அரிசி தான் 2 ரூபாய்க்கு ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் நெல்லை, நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அதற்குப்பதிலாக ரேசன் அரிசியை வாங்கி தாங்கள் தயாரிக்கும் அரிசியோடு இந்த அரிசியைக் கலந்து கணக்கு காட்டுகிறார்கள்.

நெல்லுக்குப்பதில் அரிசி

ஒரு அரிசி ஆலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 1 லாரி நெல் மட்டுமே தயார் செய்ய முடியும். ஆனால், இந்த ஆலைகளுக்கு நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 லாரி நெல் வழங்கப்படுவதால் இதை அரைப்பதற்குப்பதில், வெளிமார்க்கெட்டில் நல்ல விலைக்கு இந்த நெல்லை விற்றுவிட்டு, அதற்குப்பதில் ரேசன் அரிசியை வாங்கிக் கலந்துவிடுகிறார்கள். இதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. இதைக்கண்காணிக்க வேண்டிய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், டிஎன்சிஎஸ்சி, குடிமைப்பொருள் குற்றப்பிரிவு, பறக்கும் படை இந்தக்குற்றத்தைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாகவே கிளப்படுகிறது. மதுரையில் ஆவின்நகர், குமாரம், சாமநத்தம், தெப்பக்குளம், பங்கஜம் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள சில தனியார் அரிசி ஆலைகளில் இந்த மோசடி பலமாகவே நடைபெற்று வருகிறது. மதுரையில் கடந்த 2 ஆண்டுகளில் பிடிக்கப்பட்ட ரேசன் அரிசி விவரம் குறித்து குடிமைப்பொருள் குற்றப்பிரிவு காவல்துறையிடம் கேட்டதற்கு, கடைசி வரை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் மோசடி செய்யும் தனியார் ஆலைகள் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக 135 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரேசன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் என அரசு கூறுகிறது. ஆனால், ஆளுங்கட்சியினரின் ஆசியோடு அரிசி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரேசன் கடைகளில் அறிவிக்கப்படாத ஊழியர்களாக திமுகவினர் பணிபுரிவதைத் தடுக்க முடியாமல் திணறிவருகிறது. ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்க 5 கிலோ பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்யவேண்டும். டிஎன்சிஎஸ்சி, தனியார் அரிசி ஆலைகளைக் கண்காணிக்க தனிப்பிரிவு துவக்கப்பட வேண்டும். அத்துடன் தனியார் ஆலைகளின் மின்சாரத்தினை கணக்கீட்டு செய்தால் அவர்கள் எவ்வளவு நெல் அரைத்துக் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும் என பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள். அதுவரை அரிசியை நெல்லுக்கும் கில்லாடிகள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது எனக் கேட்கிறார்கள்.

1 கருத்து:

பாலா சொன்னது…

நம்மாலுக கில்லாடிங்கப்பா.....