(போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பாலாஜி)
அன்று அதிகாலை நேரம், கொல்லாறங்க. . . கொல்லறங்க என்ற சத்தம் அனைத்து வீடுகளில் இருந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது. தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்ட ஒரு கட்சியின் தலைவரை காவல்துறை அதிகாரிகள் இழுத்துப்போன காட்சிகளும், அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் தமிழகத்தில் மனித உரிமை என்னபாடுபட்டது என்பதை பறைசாற்றியது. அதிகாரங்கள் குவியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்படும் கட்டளைகளை நிறைவேற்றும் கருவிகளாக காவல்துறை மாற்றப்பட்டது என்பது இது முதல்முறையல்ல. ஆட்சி மாற்றங்களும், அதனைத் தொடர்ந்து எழும் ஊழல்குற்றச்சாட்டுகளும், வருமானவரி சோதனைகளும் தமிழகத்தில் தொடர்கதைகள் தான். ஆனால் அதிகாலை நேரத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட ஒருவரை, தமிழகத்தின் முதல்வராக இருந்தவரை பெரும்குற்றவாளிபோல கைது செய்து இழுத்துச்சென்றவர்கள், இழுத்துசெல்லப்பட்டவரிடமே மீண்டும் பதவிகளைப்பெற காத்திருந்த கொடுமையை எல்லாம் கண்டது தமிழகம்.
அந்த அதிகாலை சம்பவமே ஆட்சிமாற்றத்திற்கு அச்சாரமாய் ஒளிஊடகத்தில் மீண்டும், மீண்டும் காட்சி தந்தததும், மனித உரிமை எப்படி தமிழகத்தில் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்றெல்லாம் தொடர்ந்ததையும் நாடு அறியும். ஒருகைது சம்பவம் மனித உரிமை மீறலான விஷயமாக உச்சநீதிமன்றம் வரை சென்றது. ஆனால் தமிழகத்தில் அதே பாதிக்கப்பட்டவரின் ஆட்சியில் காவல்துறையின் குண்டுகள் மனிதன் மீது பாய்வது மனித உரிமை மீறிய செயலாக பாவிக்கப்படுவதில்லை.
தமிழக காவல்துறை சட்டத்தை மதிக்கவில்லையோ என நினைக்கும் வகையில் என்கவுண்டர் என்ற பெயரில் நடத்தப்படும் மோதல்சாவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ராஜன்(எ)உருண்டைராஜன், நாகூர்மீரான், செந்தில்குமார், ரவி(எ) முட்டைரவி, குமார்(எ)பங்க்குமார், கிருஷ்ணன்(எ)கொரகிருஷ்ணன், மாரிமுத்து(எ)டோரிமாரி, சங்கர்(எ)மணல்மேடு சங்கர், வெள்ளை ரவி, குணா, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயக்குமார், சுடலைமணி, நவீன்பிரசாத், பாம்பாலாஜி, பாபா சுரேஷ் ஆகியோர் காவல்துறையின் துப்பாக்கிக்குண்டுகளுக்கு பலியாகியுள்ளார்கள். கொல்லப்பட்டவர்கள் குற்றவாளிகளா, இல்லையா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கும் முன் காவல்துறை துப்பாக்கிக் குண்டுகளால் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது.
தமிழகத்தில் மோதல்சாவுகள் என்ற பெயரில் நடைபெறும் கொலைகளைத் தடுக்க அரசிடம் இருந்து ஒரு ஆணைபிறப்பிக்கப்பட்ட.து. கடந்த 8.8.2007 அன்று காவல்துறை இயக்குகுநர்,சிறைத்துறை கூடுதல் இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு "மிகஅவசரம்"என்ற பெயரில் தமிழக தலைமைச்செயலாளர் எல்.கே.திரிபாதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். மிகஅவசரம் என்ற பெயரில் எழுதப்பட்ட அக்கடித்தில் கூறப்பட்டிருந்ததாவது: மோதல் கொலைகள் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை கறாராக செயல்படுத்த வேண்டும். காவல்துறை நடத்தும் மோதல் படுகொலைகளில் ஆர்டிஓ விசாரணைக்குப் பதிலாக இனி நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்படும். கொல்லப்பட்டவரின் உடனடி உறவினரை இவ்விசாரணையில் பங்கேற்க செய்யவேண்டும். மோதல் கொலையில் பங்குபெற்ற அதிகாரிகளுக்கு உடனடிப்பதவி உயர்வுகள், வீரப்பரிசுகள் வழங்கப்படக்கூடாது. மோதல் நடைபெற்ற இடம் எந்தக் காவல்நிலைய எல்லைக்குள் வருகிறதோ அந்த நிலையத்தைச் சேர்ந்த அதிகாரியே மோதலில் பங்கு பெற்றிருக்கும் பட்சத்தில் வழக்கு விசாரணை சிபிசிஐடி போன்ற சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளுக்கு மாற்றப்பட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகள், அதன்வடிவம், தொனி ஆகிய இரண்டிலும் அப்படியே பின்பற்றப்படாவிட்டால் அது கடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். மாவட்ட அளவிலான அதிகாரிகள் அதற்குப் பொறுப்பாக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கையுடன் அக்கடிதம் அனுப்பப்பட்டது(கடித எண்: 9008/எல். ஒ.ஏ/2007. தேதி: 8.8.2007)
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கும் நேரத்தில் திடீரென யாராவது ஒரு நபர் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொல்லப்படுவது வாடிக்கையாகி விட்டது. தமிழக தலைமைச்செயலாளர் திரிபாதி அனுப்பிய கடிதத்திற்கு பிறகு, காவல்துறை 6-க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காவல்துறை அமைச்சராக இருக்கும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாமலா உள்துறைச்செயலாளர் திரிபாதி, என்கவுன்டர் குறித்த கடிதம் அனுப்பினார் என்பது இன்னும் விடைதெரியாத வினாவாக உள்ளது.
"தவிர்க்க இயலாமல் மோதலில் ஒருவர் கொல்லப்பட்டக்கூடிய நிலை ஏற்படுமானால் என்கவுண்டர் செய்த அதிகாரி மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் குற்றவாளி இல்லையென நிறுவப்படும் வரை வேலையில் இருந்து அவரை நீக்கி வைக்கப்பட வேண்டும்" என்பது மனிதஉரிமை ஆணையம் வழங்கியுள்ள நெறிமுறையாகும். ஆனால் அந்த நெறிமுறைகள் தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். உள்துறை செயலாளர் அனுப்பிய எச்சரிக்கையை மதிக்காமல், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டுகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி அவர்களை மேலும் துப்பாக்கி தூக்கவைக்கும் ஏடிஜிபி மீது ஏன் தமிழக அரசு ஏன் நடடிவக்கை எடுக்கவில்லை என்ற மனிதஉரிமை ஆர்வலர்களின் குரல் காற்றில் கரைந்த கற்பூரமாகிவிட்டது.
ஒருநபரைச் சுட்டுக்கொன்று விட்டால், அவர் மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் இருந்தது என பத்திரிகைகளுக்கு செய்தி தட்டிவிடப்படுகிறது. தாக்க வந்தார்கள். அதனால் துப்பாக்கித் துhக்க நேர்ந்தது என தொடர்கதை கூறும் காவல்துறை, கொல்லப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்? அப்படியென்றால் காவல்துறையின் துப்பாக்கிக்குண்டுகளால் முற்றுப்பெற்றுவிடுகின்றதா கொல்லப்பட்டவர் மீதான வழக்குகள்? காவல்துறை அமைச்சரான தமிழக முதல்வர் கருணாநிதி இதற்கு அளிக்கும் பதில் தான் என்ன? (ஜனசக்தியில் வெளிவந்தது)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக