புதன், 13 ஜனவரி, 2010

மரணத்தைக் கொண்டாடுவதா?


ஜென்னி மார்க்சின்
பால்வற்றிய மார்பில்
ரத்தம் குடித்துச் செத்துப்போன
குழந்தையின்
மரணத்தில் இருந்து துவங்குகிறது
இந்த கவிதை.

வறுமையாலும், துரோகங்களாலும்
தொடர்கின்றன மரணங்கள். . . . .

முப்பது வெள்ளிக்காசுகளுக்காக
யூதாசின் துரோகத்தால்
இயேசு கிறிஸ்துவிற்கு
வழங்கப்பட்டது மரணம்.


பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின்
பிடரியைப் பிடித்து
உலுக்கியதற்காக
பகத்சிங்கிற்கு வழங்கப்பட்டது
தூக்கு கயிற்றில் மரணம்

மதவெறி கூடாது என்றதால்
சொந்த மதத்துக்காரனால்
தோட்டாக்கள் மூலம்
வழங்கப்பட்டது
மகாத்மா காந்திக்கு மரணம்.


பேரழிவு ஆயுதங்கள் என்ற பெயரில்
அமெரிக்க அயோக்கியர்களால்
சதாம் உசேனுக்கு வழங்கப்பட்டது
பொம்மைகளின் மூலம் மரணம்.


மரணத்தை விட கொடியதாக
மாறியுள்ளது வாழ்க்கை.
வாழ்வதற்கான போராட்டத்தை
வாழ்க்கைக்காக
நடத்த வேண்டியதாய் உள்ளது.


மத்திய நிதி அமைச்சரின்
புள்ளிகள், விபரங்களை வைத்து
யார் வீட்டின் முன்பும் கோலம் கூட
போட முடியாது.

தரித்திர நாராயணர்களை
தாராளமாய் உற்பத்தி செய்யும்
எங்கள் தேசத்தில்
குசேலன்கள் மட்டும் எப்போதும்
கோடீஸ்வரர்களாகவே இருக்கிறார்கள்


பட்டினி மரணங்கள் என்றாலும்
தண்டனை மரணங்கள் என்றாலும்
ஏற்கும் மனநிலை
எமக்கு எப்போதும் வராது

மரணத்தைக் கொண்டாடும்
மனநிலை எல்லாருக்கும்
உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
மதத்தின் பேரால்
கொண்டாட்டமாய்
நிற்கிறது ஒருவனின் சாவு.

தண்டனை என்ற பெயரில்
மரணம் விளைவிப்பவர்களிடம்
கேட்போம். . . .
சாவுகள் மூலம் தான்
சட்டங்களை காக்கமுடியும் என்றால்
காருண்ய சீலர் காந்தியின் படங்கள்
நீதிமன்றங்களில் எதற்கு?

கருத்துகள் இல்லை: