தலித் இலக்கியத்தை தலித்துகள் தான்
படைக்க வேண்டும் என தரம் பிரிப்பது தவறு!
--------------------------------------------------------------------------------------
மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலன் நேர்காணல்
தமிழகத்தில் மொழிபெயர்ப்பு துறைக்கு பெரும்பங்களித்து வருபவர்களில் முக்கியமானவர் குறிஞ்சிவேலன். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்திடல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்க முயன்று வரும் உக்கிர படைப்பாளி. மொழியாக்கத்திற்காக திசை எட்டும் என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்.
மலையாளத்தில் வெளியான" விஷக்கன்னி" படைப்பை மொழிபெயர்ப்பு செய்ததற்காக 1994-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுபெற்ற தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை தனது பெயரில் பதிவு செய்துள்ள இவருடன் மதுரையில் ஒரு காலைப்பொழுதில் நிகழ்ந்த சந்திப்பு இது. மொழிபெயர்ப்பு குறித்தும் சமகால இலக்கியம் குறித்தும் மடைதிறந்த வெள்ளம் போல அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகள் தமிழ்படைப்புலகம் குறித்து அவர் கொண்ட அக்கறையை எடுத்துரைத்தது.
சந்திப்பு : ப.கவிதா குமார்
மொழிபெயர்ப்பு துறைக்கு எப்படி நீங்கள் வந்தீர்கள்?
குறிஞ்சி: 1960-ஆம் ஆண்டு வரை தமிழ்ப்படைப்புலகம் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருந்தேன். கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்காக ஒசூர் சென்ற போது தெலுங்கு, கன்னடம் ஆகியவை முழுமையாக படிக்க முடிந்தது. பிறகு, 1964-ஆம் ஆண்டு பணிநிமித்தம் சம்பந்தமாக நத்தம் வந்தேன். ஒரு வருடத்திற்கு பிறகு, எனது அதிகாரிக்கும், எனக்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதற்காக என்னை வண்டிப்பெரியாறுக்கு அனுப்பினார். கேரளாவில் இருந்தும், தமிழகத்திலிருந்தும் வண்டிப்பெரியாறு 2 கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்போது அது தண்ணீர் இல்லாத காடாகத்தான் இருந்தது. தனிமையான காலம் என்பதால் அங்கிருந்த பள்ளிக்குழந்தைகள் எனக்கு ஆசிரியராக இருந்து மலையாளத்தை கற்றுத்தந்தனர். அந்த மக்களுடன் வாழ்ந்ததால் அவர்களின் கலாச்சாரம், பண்பாட்டை அறிந்து கொள்ளமுடிந்தது.
தமிழ் சிறுகதைகள் குறித்து 1965-ஆம் ஆண்டு மாத்ருபூமி இதழில் விமர்சனக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது.தமிழ் சிறுகதைகள் இரண்டாம்தரமானவை என அதில் விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. எனக்கு வந்த கோபத்தின் வெளிப்பாடாக அந்த கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து தீபம் இதழுக்கு அனுப்பினேன். எனது முதல் மொழிபெயர்ப்பு அது தான். ஆனாலும் தமிழ் எழுத்தாளர்கள் அந்த விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து பல படைப்புகளை மொழி பெயர்க்க ஆரம்பித்தேன். மலையாற்றூர் ராமகிருஷ்ணனுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக அவரது நாவல்களை மொழிபெயர்த்து, தீபத்திற்கு அனுப்ப ஆரம்பித்தேன்.
மலையாள நாடு பத்திரிகையில் வெளிவந்த மலையாள படைப்பாளிகளின் படைப்பு மனநிலை குறித்து எழுதப்பட்ட," முழுமையை தேடும் முழுமையற்ற புள்ளிகள்" மொழிபெயர்ப்பு எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
1980-ஆம் ஆண்டு எஸ்.கே. பொற்றகேட் எழுதிய விஷக்கன்னி நாவலை மொழிபெயர்க்கச்சொல்லி நேசனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா கேட்டது. நான் அந்நூலை 1981-ஆம் ஆண்டே மொழிபெயர்த்துக் கொடுத்து விட்டேன். ஆனாலும் அந்த நூல் 1991- ஆம்ஆண்டு தான் வெளிவந்தது. 1994-ஆம் ஆண்டு அந்த நூலுக்கு எனக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பே 3 நாவல்கள் எழுதிவிட்டேன். இதனைத் தொடர்ந்து எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பீமன் பார்வையில் மகாபாரதக்கதையான," இரண்டாவது இடம்" எனக்கு 2001-ஆம் ஆண்டு தமுஎசவின் விருதைப் பெற்றுத்தந்தது. சேது எழுதிய, "பாண்டவபுரம்" எனது மொழிபெயர்ப்புக்காக திருப்பூர் தமிழ்சங்கத்தின் விருதைப்பெற்றுத்தந்தது. ," முழுமையை தேடும் முழுமையற்ற புள்ளிகள்" நூலுக்கு இரண்டாவது முறையாக தமுஎசவின் விருது கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கடந்த 2003-ஆம் ஆண்டு வரை 34 புத்தகங்களை எழுதியுள்ளேன். அதற்கு பிறகு மொழிபெயர்ப்புக்காக திசை எட்டும் காலாண்டிதழைத் துவக்கினேன். எனது ஓய்வூதியத் தொகையை முழுமையாக மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்காக பயன்படுத்த ஆரம்பித்தேன்.
சுயபடைப்புகளை உருவாக்க நினைக்கும் படைப்பு மனோபாவத்திற்கிடையே மற்ற படைப்பாளிகளின் படைப்புகளை மொழிபெயர்க்க முயன்றது ஏன்?
குறிஞ்சி: ஆரம்பத்தில் நான் 5 சிறுகதைகளை எழுதினேன். அப்போது ரஷ்யா மொழிபெயர்ப்பு இலக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் நான் எழுதிய சிறுகதைகள் எனக்குப் பிடிக்காமல் போனது. அதனால் மேலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். ரஷ்ய அனைத்து மொழிபெயர்ப்பு நூல்களும் எனது நூலகத்தில் உள்ளது. ரஷ்ய மொழியும் கற்க ஆரம்பித்தேன். ஆனாலும் அது முழுமை பெறாமல் போய்விட்டது. பிற மொழி படைப்புகளை எனது மொழிக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் மலையாளம், ஹிந்தி, பெங்காலி, கன்னடம் ஆகியவற்றை கற்க ஆரம்பித்தேன். ஆனாலும் நான் மலையாளம் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட்ட அளவுக்கு மற்ற மொழிகளில் செய்யாததற்கு காரணம் கலாச்சாரம் தெரியாமல் மொழிபெயர்க்கக்கூடாது என்பதற்காக தான். தெலுங்கில் இருந்து ஒரு மொழிபெயர்ப்பு நூலை தமிழுக்கு கொண்டு வந்தேன்.
தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கிய உலகம் எப்படி உள்ளது?
குறிஞ்சி: முதன் முதலாக நான் எழுதிய மொழிபெயர்ப்பு படைப்புகளை நூலாக்க வேண்டும் என்ற ஆசையோடு சென்னையில் ஏறாத பதிப்பகங்களே இல்லை. "தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து என்னத்த எழுதிட்டு வந்துட்டே" என்ற வார்த்தைகள் என்னை அவமானத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது. எங்கள் ஊரில் வசதியாக வாழ்ந்தவர்களிடம் பதிப்பங்கள் ஆரம்பியுங்கள் என்ற கோரிக்கையை எழுப்பி 3 பதிப்பங்களை துவக்கினோம். அதன் மூலம் தான் தமிழகத்தின் சிறந்த படைப்பாளிகளான எங்களது மாவட்டங்களைச் சேர்ந்த வே.சபாநாயகம், ப.ஜீவகாருண்யன், விழி.பா.இதயவேந்தன், கண்மணி குணசேகரன் படைப்புகள் நூலூக்கப்பட்டன. ஆனால் தற்போது மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் தாக்கம் பல நாட்டுப்படைப்புகளை நமக்கு தந்துள்ளது.ஆனால் அதே அளவு தமிழ் படைப்புகள் வெளி மொழிக்கு செல்லாமல் தேக்கநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழில் இருந்து கட்டுரைகளை வேறு மொழிக்கு கொண்டு சென்று காசு பார்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கவிதை, நாடகம், சிறுகதை, நாவல் ஆகியவை கொண்டு செல்லப்படவில்லை. ஆனாலும் அமரந்தா, லதா ராமகிருஷ்ணன், சா.தேவதாஸ், கே.எஸ்.சுப்ரமணியம், வெ.ஸ்ரீராம், ஜெயராஜ் டேனியல், ஆர்.நடராஜன் போன்றவர்கள் வேற்று மொழி இலக்கியத்தை தமிழுக்கும், தமிழ் மொழி இலக்கியத்தை வேற்று மொழிகளுக்கும் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஆனாலும் இப்பணி மேலும் முன்னெடுத்துச்செல்லப்பட வேண்டும்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பெரும் உதவி தேவைப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் இருந்து படைக்கப்பட்ட படைப்புகளுக்கு மூலப்படைப்பாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவது போல, தமிழகத்தில் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை என அனைத்து மொழிபெயர்ப்புக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் தரவேண்டும். ஆனால் மொழிபெயர்ப்பு என தமிழ்நாட்டில் ஒரே ஒரு விருது மட்டும் வழங்கப்படுகிறது.தமிழை வளர்க்கிறேன் என்பவர்கள் ஆட்சியில், தமிழை வேற்று மொழிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களை உச்சத்தில் வைத்துப் பார்க்காவிட்டாலும், ஓரத்தில் வைத்தாவது பார்க்க வேண்டும்.
தலித் இலக்கியத்தை தலித்துகள் தான் படைக்க வேண்டும் என்ற குரல்களின் கோரிக்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள். . . .
குறிஞ்சி: இலக்கியம் என்பது எல்லாம் ஒன்று தான். இலக்கியத்தை தலித் இலக்கியம், பெண்ணியம் என பிரிப்பதே குழுக்களின் முயற்சி தான். அந்த குழுக்களின் முயற்சிகள் தோற்றுக்கொண்டு இருக்கின்றன. ஏனெனில், அவர்களுக்கான இலக்கியத்தை நாம் ஏன் படிக்க வேண்டும் என்ற மனநிலையை பிறருக்கு உண்டாக்க முயற்சிக்கிறார்கள். அது எடுபடவில்லை. பொருளாதார ரீதியாக அனைத்து பிரிவுகளிலும் விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். அதே போல பொருளாதார ரீதியாக வசதியாகவும் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளனர். இப்படி சூழலில் இலக்கியத்தை தரம் பிரிப்பது தவறான செயலாகும். இப்படி குழுவாதமாக நினைக்க ஆரம்பித்திருந்தால் நான் மொழிபெயர்ப்புத் துறைக்கு சென்றே இருக்கமுடியாது. ஆனால் எனது மொழியை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் தான் எழுத ஆரம்பித்தேன். இதில் இலக்கியத்தை தலித் இலக்கியத்தை தலித்துகள் தான் எழுத வேண்டும் என தரம் பிரிப்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக