புதன், 13 ஜனவரி, 2010

வையை என்னும் பொய்யாக்குலக்கொடி


சித்திரைத் திருவிழாவிற்கு
ஆத்துல அழகரு பார்க்கப் போனப்ப
அண்ணன் தொலைஞ்சு போனான்.
இரண்டு நாள் காணாமல் போக
செத்துப்போனதாக ஊரே கூடி அழுதது.
தேர்வில் பெயிலானதால்
அப்பா அடிப்பாரென்று
இராமநாதபுரத்தில் பதுங்கிய அண்ணன்
சில நாட்களுக்குள் திரும்பி விட்டான்.
ஆற்றின் மேல உள்ள ஆல்பர்ட் விக்டர்
பாலத்தில் பேருந்தில் கடக்கும் போதெல்லாம்
வைகையைப் பார்த்து இன்னும்
வசைமாரி பொழிகிறாள் அம்மா.
இதுவரை என்னை
அழகரைப் பார்க்க அழைத்துப் போனதில்லை.
என் குழந்தைக்கு மொட்டையெடுக்க
சித்திரைத் திருவிழாவில்
ஆற்றில் உறவே திரண்டிருக்க
அம்மா மட்டும் வரவேயில்லை.
கலங்கிக் கிடக்கிறது வைகை.

(செம்மலரில் வெளியான கவிதை)

கருத்துகள் இல்லை: