வெள்ளி, 15 ஜனவரி, 2010

மூன்று தீபாவளிகள். . . . .


சினிமா பேச ஆரம்பித்ததில் இருந்து எத்தனையோ கதாநாயகிகளை தமிழ்நாடு கண்டுள்ளது. மொழிகளால் பலர் நடித்தாலும் விழிகளால் நடித்து பெயர் பெற்றவர் டி.ஆர்.ராஜகுமாரி.

விபத்தாக நடிக்க வந்தவர் ராஜாயி என்ற ராஜகுமாரி. தஞ்சை கலைக்குடும்பத்தில் பிறந்த இவரது அத்தை ஒரு நடிகை. அவருடன் சினிமா படப்பிடிப்புக்கு சென்ற போது இயக்குநர் கே.சுப்ரமணியம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு நடிகையாக அறிமுகம் ஆனவர் ராஜகுமாரி. அவரின் "கச்சதேவயானி" என்ற படத்தின் மூலம் 1941-ஆம் ஆண்டு அறிமுகமான டி.ஆர்.ராஜகுமாரி, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்கள் என வர்ணிக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய 5 பேருடன் நடித்தவர். இவருக்கு அடுத்து அந்த பெயரை பெற்றவர் பானுமதியாவார்.

எம்.கே.தியாகராஜ பாகவதருடன் 1943-ஆம் ஆண்டு "சிவகவி" படத்தில் நடிக்கத்துவங்கிய டி.ஆர்.ராஜகுமாரி, அதே ஆண்டு அவருடன் நடித்த "ஹரிதாஸ்" மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடி சாதனை படைத்த படமாகும். இன்னும் அந்த சாதனையை எந்த படமும் செய்யவில்லை. அதிக பாடல்களைக் கொண்ட இப்படத்தில் தான், பாகவதர் பாடிய, "மன்மதலீலையை வென்றார் உண்டோ"என்ற புகழ்பெற்ற பாடலுக்கு,டி.ஆர்.ராஜகுமாரி நடனம் புரிந்திருப்பார். யுத்தகாலத்தைக் கணக்கில் கொண்டு இப்படத்தின் நீளம் 11 அடிக்கு குறைக்கப்பட்டது தனிக்கதை.

தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்ற சொல்லை அறிமுகப்படுத்திய எஸ்.எஸ்.வாசனின் , "சந்திரலேகா" அன்றைய தினத்தில் 30 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட முதல்படமாகும். எம்.கே.ராதாவுடன் இணைந்து நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, இப்படத்தில் சர்க்கஸ் கலைஞராக நடித்தார். இப்படம் இந்தி, ஆங்கில மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

தமிழ்சினிமா நடிகைகளில் முதல்முதலாக திரையரங்கு கட்டிய டி.ஆர்.ராஜகுமாரி, தனது தம்பி டி.ஆர்.ராமண்ணாவுடன் இணைந்து பலபடங்களை தயாரித்தார். அதில் முக்கியமான படம் எம்.ஜி.ஆர், சிவாஜி இணைந்து நடித்த ஒரே படம் "கூண்டுக்கிளி".1963- ஆம் ஆண்டு "வானம்பாடி" படத்துடன் தனது நடிப்புலக பயணத்தை நிறுத்திக் கொண்ட டி.ஆர்.ராஜகுமாரி அதன் பிறகு நடிக்கவேயில்லை. கடந்த 1999-ஆம் ஆண்டு அவர் காலமானார்.

கருத்துகள் இல்லை: