வெள்ளி, 15 ஜனவரி, 2010
தமிழ்சினிமாவின் நவீன கதை சொல்லி. . . .
தமிழ்சினிமா பலதிருப்புமுனைகளைச் சந்தித்தே வந்துள்ளது.ஸ்வாமியும், நாதாவும் என்ற பதங்கள் தவறாது தமிழ்சினிமாவில் ஒலித்த நேரத்தில், " அடேய் பூசாரி "என அதிர்ச்சி வசனங்கள் ஒலிக்க ஆரம்பித்தன் அறிகுறி புதுவீச்சை தந்தது.
அறிஞர் அண்ணா, இளங்கோவன், கண்ணதாசன், மு.கருணாநிதி ஆகியோர் திரையில் நிகழ்த்திக் காட்டிய வசனப்புரட்சி இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் புகுந்த இயக்குநர் ஸ்ரீதர் தனக்கென வகுத்த பாணி தமிழ்சினிமா ரசிகர்களை வேறுபக்கம் திருப்பியது. மென்மையான முக்கோண காதல்கதைகளை அறிமுகப்படுத்திய ஸ்ரீதரின் படங்கள் மாடர்ன் படங்கள் என்று வர்ணிக்கப்பட்டது.
ரத்தபாசம் படத்தின் மூலம் தமிழ்திரையில் பிரவேசித்த ஸ்ரீதருக்கு பல சிறப்பு உண்டு. முதல் முதலாக காஷ்மீரில்,"தேன்நிலவு" திரைப்படத்திற்காக படப்பிடிப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மட்டுமின்றி வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, ரவிச்சந்திரன், காஞ்சனா, ஜெயஸ்ரீ, விக்ரம் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை படம் என்று சொல்லப்படும், "காதலிக்க நேரமில்லை "படத்தை இயக்கிய ஸ்ரீதருக்கு நகைச்சுவை மீது அளவு கடந்த மதிப்பிருந்தது. அதன் தொடர்ச்சியாக உத்தரவன்றி உள்ளே வா, ஊட்டி வரை உறவு போன்ற நகைச்சுவை படங்களையும் தந்தார்.
காதலை மையப்படுத்தி ஸ்ரீதர் இயக்கிய, கல்யாணபரிசும், நெஞ்சில் ஓர் ஆலயமும் நீங்காத இடம்பெற்றுள்ளது. எம்.ஜி.ஆர் நடித்த உரிமைக்குரல் படத்தை எடுத்த ஸ்ரீதர், சுமைதாங்கி, அவளுக்கென்று ஒரு மனம், சிவந்த மண், இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன், ஆலயதீபம், நானும் ஒரு தொழிலாளி, தென்றலே என்னைத் தொடு, தந்து விட்டேன் என்னை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீதர் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் நவீன கதைசொல்லியான அவரின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு என்றால் அது மிகையில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக