எப்போதோ வாங்கப்பட்டதென்றாலும்
ஒவ்வொரு ஆண்டின்
துவக்க மாதத்தில்
மறக்காமல் அந்த முகவரிகளுக்கு
அனுப்பப்படுகின்றன
வாழ்த்து அட்டைகள்.
பலவற்றிற்கு
நன்றிகளாவும்
சிலவற்றிக்கு
ஆளில்லை என்றும்
திரும்பி வந்துவிடுகின்றன.
தொடர்பற்று
முகவரி தொலைந்தவர்களின்
பெயர்களின் எண்ணிக்கை
டைரிகளில் இருந்து
குறைந்து போவதைப் போல
புதிய தொடர்புகளால்
பெயர்களின் எண்ணிக்கை
கூடிவருகின்றன.
விஞ்ஞானம் வளர்ந்தும்
இன்னமும்
வாழ்த்து அட்டையா?
அருகில் இருந்து
அழைக்கும் போது
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருப்பதாக
சமிக்ஞை காட்டும்
அலைபேசியின்
பதிலுரையை விட
முகவரி கொடுக்காமல்
சென்றுவிட்ட நண்பனின்
பழைய இருப்பிடம்
சென்று திரும்பும்
வாழ்த்துக்களில் இருக்கிறது
எனக்கும் அவனுக்குமான நட்பு.
(தீக்கதிரில் பொங்கலன்று பிரசுரமான கவிதை)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக