இந்திய விடுதலை என்பது ஒருபுறம் மகாத்மா காந்தி போன்றவர்களின் அறவழிப்போராட்டங்களாலும், மறுபுறம் திலகர், பகத்சிங் போன்றவர்களின் ஆயுதப்போராட்டங்களாலும் மலர்ந்தது. ஆனாலும் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்ததாக பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா முழுவதும் இளைஞர்கள் மத்தியில் சுழலும் மந்திரச்சொல்லாக மாறியுள்ள பெயர் பகத்சிங். அதனால் தான், நாத்திகம் பேசிய பகத்சிங் படத்தை மதவாத அமைப்புகளும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அப்படிப்பட்ட தியாகியின் நினைவைப் போற்றும் வகையில் மதுரையில் “மாவீரன் பகத்சிங்‘ என்ற நாடகம் நடத்தப்பட்டது. நாடகம் என்றாலே கண்ணீர், சூழ்ச்சி, வஞ்சகம், அடுத்தவனை ஏமாற்றுவது எனக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது, மிக தைரியமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாவீரன் பகத்சிங் நாடகத்தை நடத்திக் காட்டினர். சென்னை அக்னி கலைக்குழுவால் 1998-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த நாடகம் பல நூறுகளைக் கண்டிருந்தாலும் மதுரையில் முதல்முறையாக நடத்தப்பட்டது.
வரலாற்று நாடகம் என்ற கவனத்துடன் உருவாக்கப்பட்டிருந்த இந்த நாடகத்தை எழுதி இயக்கிய கண்ணன், பகத்சிங்காக மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அறிவொளி இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் வீதி நாடகங்களை நடத்திய கண்ணன், மேடை அரங்கில் மிகச்சிறப்பாகவே நாடகத்தை நடத்திக் காட்டினார்.
இறுதிக்காட்சியில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு தூக்கு அறிவித்த பின், காவல்துறை அதிகாரி,“ உங்கள் ஆத்மா சாந்தி அடைய மதகுருக்கள் பிரார்த்திக்க வந்திருக்கிறார்கள். செய்யலாமா?“ என கேள்வி எழுப்புகிறார்.
“ நாங்கள் நாத்திகர்கள். யாதார்த்தத்தையும், விஞ்ஞானத்தையும் நம்புபவர்கள். மக்களை மூடர்களாக்கும் சடங்கு சம்பிரதாயங்களை வெறுப்பவர்கள். அனைத்து சமூக கொடுமைகளிலிருந்தும் மக்களை விடுவித்து, பூமியிலேயே சொர்க்கத்தையும் படைக்க முடியும் என்று நம்பும் பொதுவுடமைவாதிகள். இந்த பிரார்த்தனை வேண்டாம்“ என பகத்சிங் பதிலளிக்கிறார். சமூகத்தின் மீது கொண்ட அக்கறையோடு வசனங்கள் எழுதப்பட்டிருந்தன என்பதற்கு இக்காட்சி ஒரு சான்றாக அமைந்திருந்தது.
ஆசாத்தாக விக்டரி ரவி, காவலராகவும், வழக்கறிஞராகவும் நடித்த பாண்டித்துரை ஆகியோரின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது. பாஸ்கரின் ஒலி அமைப்பில், அன்புராஜ் இசையில், தியாகி மணவாளன் எழுதிய “விடுதலைப்போரில் வீழ்ந்த மலரே... தோழா“ என்ற பாடல் கண்கலங்கவைத்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி. நாடகம் பார்க்க கட்டணம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், கொட்டும் மழை நாளில் நடைபெற்ற இந்நாடகம் பார்க்க திரண்டிருந்த கூட்டத்தால் அரங்கு நிரம்பி வழிந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக