வெள்ளி, 17 ஜூலை, 2009

தீ சமைக்கும் உயிர்கள்


ஆதியில் கல்உரசி தீயைக்கண்டுபிடித்த மனிதன் அதைக் கொண்டு உணவு சமைத்தது மனித குல வளர்ச்சியின் உச்சம் எனப்போற்றப்படுகிறது. ஆனால், அதே மனிதன், தீக்கு இரையாகி வரும் அவலம் பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெறும் விபத்துகள் மூலம் அரங்கேறி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வடக்கம்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் நடைபெற்ற வெடிவிபத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 19 பேர் மாண்டுபோனார்கள் என்ற செய்தி நெஞ்சைப்பதற வைக்கிறது.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நடைபெற்றுள்ள விபத்துகளால் உயிரிழந்தவர்கள், உடல் அங்ககீனம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடாக இல்லை.
கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் உள்ள பர்மாகாலனியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மருந்து செலுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பத்து பேர் உடல் சிதறி பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர். இதே போன்று திண்டிவனத்தில் உள்ள செண்டூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வெடிமருந்து ஏற்றி வந்த ஜீப் வெடித்து சிதறியதில் 16 பேர் பலியானார்கள். பாரதிப்புலியூர் வெடிமருந்து கிடங்கில் இருந்து பாறைகளை தகர்க்க சக்தி வாய்ந்த ஜெலட்டின் குச்சிக்களை ஏற்றி வந்த போது இந்த விபத்து நடந்தது. 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியானார்கள். 2008- ஜனவரி மாதம் சிவகாசி புதுத்தெருவில் அனுமதியின்றி பட்டாசு செய்து வைத்திருந்ததில் அவை திடீரென வெடித்து மூன்று சிறுமிகள் படுகாயமடைந்தனர். பிப்ரவரி மாதம் சாத்தூர் சாலையில் உள்ள அனுப்பன் குளம் என்ற இடத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அன்றைய தினம் அங்கிருந்த தொழிலாளர்கள் வெடிமாதிரிகளை வெடிக்க வைத்துச் சோதனை செய்ய சென்றதால் உயிர்பிழைத்தார்கள். அதே ஆண்டு மார்ச் மாதம் சிவகாசி விளாம்பட்டியில் உள்ள கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அந்த ஆலையே முழுமையாக தரைமட்டமானது. ஜூன் மாதம் சிவகாசி கீழத்திருத்தங்கல்லில் ரசாயன கலவை வெடித்து கட்டிடம் தரைமட்டமானது. இப்படி விபத்துகள், விபரீதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சுற்றி தான் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. வெம்பக்கோட்டை, சாத்தூர், ஆர்.ஆர்.நகர், விருதுநகர் ஆகிய இடங்களில் சுமார் 650 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு மட்டுமின்றி, திருமண மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வெடி மற்றும் மத்தாப்பு வகைகள் தயார் செய்யப்படுகின்றன. தமிழகம் மற்றும் வடமாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பட்டாசு தொழிற்சாலைகள் கடைபிடிக்க வேண்டிய விதிகள் காற்றில் பறக்கின்றன. பத்துக்கு பத்து அறையில் 4 பேர் தான் பணிபுரிய வேண்டும். ஒரு அறைக்கு நான்கு வழிகள் இருக்க வேண்டும் என்ற விதியை பெரும்பாலான தொழிற்சாலை முதலாளிகள் கடைப்பிடிப்பதில்லை. சரவெடிகள் செய்ய அலுமினிய கம்பிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், விலை அதிகம் என்பதால் அதற்குப்பதில் இரும்புக்கம்பிகளை பட்டாசில் சுற்றுகிறார்கள். இதனால் சில நேரங்களில் அழுத்தம் தாங்காது வெடிவிபத்து நிகழ்கிறது.
அத்துடன் தொழிற்சாலைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்துகளை வாங்குவதற்குப் பதில், விலை குறைந்த மருந்துகளை வாங்குவதாலும் பல பிரச்சனைகள் எழுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பட்டாசு ஆலை முதலாளிகளின் பணம் குவிக்கும் லாபவெறியும், கண்காணிப்பு அதிகாரிகளின் பணம் சம்பாதிக்கும் குறுக்குப்புத்தியும், அரசின் கண்டுகொள்ளாத போக்கும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஆரத்தி எடுக்கின்றன.
பட்டாசுகளில் மருந்து செலுத்தும் பணி மூன்று மணி நேரம் மட்டும் செய்யப்பட வேண்டும். ஆனால், காலையில் இருந்து இரவு வரை இப்பணி நடைபெறுகிறது. இப்படிப்பட்ட ஆலைகளில் சூரிய வெளிச்சத்தில் தான் வேலை செய்ய வேண்டும். இரவு நேர பணி கூடாது என்பதற்காகவே, மின்விளக்கு இருக்கக்கூடாது என்ற விதிமுறைகளை எத்தனை தொழிற்சாலைகள் கடைபிடிக்கின்றன என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். வெடிமருந்துகள் இத்தனை காலத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிகளை வெடிமருந்து கட்டுப்பாட்டுத்துறையும், காவல்துறையும் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை அர்த்தப்படுத்துகின்றன நடைபெற்ற வெடிவிபத்துகள்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய வெடிவகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதற்காக புதிய, புதிய வேதிப்பொருட்கள் கையாளப்படுகின்றன. ஆனால், இவற்றைப்பயன்படுத்த தொழிலாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இதனால் பலநேரங்களில் விபத்து ஏற்படுகிறது. பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க அவசரத்தடுப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலைகள் மேற்கொள்ளாத காரணத்தால் இத்தகைய விபத்துகள் நடக்கும் போது தொழிலாளர்கள் கையறு நிலையில் நின்று தீநாக்குக்கு இரையாகிப்போகிறார்கள்.
பட்டாசு தொழிற்சாலைகளின் மறுபக்கம் இப்படி என்றால், தமிழக அரசின் நிலையோ அதலபாதாளத்தில் உள்ளது. வெடிவிபத்துகளின் மீட்புப்பணியில் ஈடுபடும் தீயணைப்புத்துறையில் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் துவங்கிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் பல இடங்களில் தீயணைப்பு நிலையங்களில் ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஊழியர்கள் பலர் சென்னை, வேலூர் ஆகிய மண்டலங்களுக்கு வெளிப்பணிக்குச் செல்லும் நிலை தொடர்கிறது. மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் முன்பு 40 பேர் வேலை செய்தனர். தற்போது 30 பேர் தான் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.
ஊழியர் எண்ணிக்கை தான் இப்படி என்றால் தீயணைப்பு வாகனங்களின் நிலையோ பரிதாபம். பத்து ஆண்டுகளுக்கு மேல் தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது விதி. ஆனால் மதுரையில் டிஎன் 37 ஜி- 0062, டிஎன் 37 ஜி- 0060 என்ற எண்ணுடைய வாகனங்கள் இன்னும் பயன்படுத்தப்படுவதில் இருந்து புதிய வாகனங்களின் வருகை குறைந்து போனது உண்மை எனத் தெரியவரும். அத்துடன் புதிய கருவிகள் வாங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. "ரெஸ்கியூ டென்டர்" எனப்படும் உயிர்மீட்பு வாகனம் தென்மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை. சென்னையில் இந்த வாகனம் உள்ளது. தீவிபத்து, வாகன விபத்து ஏற்பட்டால் அதில் சிக்கியவர்களை மீட்க எலெக்ரோ கட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, ஹைட்ராலிக் பிளேட் என பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய வாகனம் தென்மாவட்டத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது.
மதுரை மட்டுமின்றி தென்மாவட்டத்தில் எங்கு தீவிபத்தோ, வெடிவிபத்தோ ஏற்பட்டாலும் மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு தான் நோயாளிகள் கொண்டுவரப்படுகின்றனர். தென்மாவட்டங்களுக்கு தலைமை மருத்துவமனையாக செயல்படக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீக்காயத்திற்கு என தனிப்பிரிவு கிடையாது. இம்மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் 301-வது வார்டில் உள்ள இப்பிரிவிற்கு அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து நோயாளிகளைக் கொண்டு வருவதற்குள் பலரின் மூச்சு அடங்கிவிடும் சோகமும் அரங்கேறி வருகிறது. இவ்வளவு பெரிய மருத்துவமனையில் தீக்காயப்பிரிவிற்கென 21 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன. அதற்கு 2 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான செய்தியாகும். இதே போன்று அடிப்படை ஊழியர்கள் 2 பேர் தான் உள்ளனர். மிக சுத்தமாக பேணப்பட வேண்டிய இந்த வார்டில் சுகாதாரப்பணி மேற்கொள்ள ஒரு ஊழியரே உள்ளார். உயிர் காக்க அவசியத் தேவையான குளிர்சாதன வசதி என்பது இப்பிரிவில் அறவே இல்லை. அவசர சிகிச்சைக்குத் தேவையான வெண்டிலேட்டர் தீக்காய சிகிச்சைப்பிரிவில் இல்லை. இதே போன்று தான் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தனியாக தீக்காய சிகிச்சைப்பிரிவு இல்லை. சிவகாசியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்காக 5 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளன.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அருகேயுள்ள உள்ள வடக்கம்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்த 17 பேருக்கும் தலா லட்சம் ரூபாய் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் மூலம் அந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதே வேகத்தில் பட்டாசு தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்கவும், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தீக்காயத்திற்கென தனிப்பிரிவும் துவங்கினால் தீ நாக்குகளுக்கு இரையாகும் மனிதர்களின் எண்ணிக்கை ஏகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை: