
மகாத்மா காந்திக்கும், மதுரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்திற்கு 20 முறை வந்த காந்தி மதுரைக்கு 5 முறை வந்துள்ளார். முழு ஆடை தரித்த காந்தியை, அரையாடை அணிய வைத்த பூமி மதுரை. அப்படிபட்ட மதுரையில் தான் காந்திமியூசியம் உள்ளது.
இந்தியாவில் டில்லி, மும்பை, பாட்னா, கொல்கொத்தா, புனே, குஜராத், தமிழ்நாடு ஆகிய இடங்களில் காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரையில் காந்தி மியூசியம் 1959-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தென் இந்தியாவில் காந்தியின் நினைவு மியூசியம் உள்ளது மதுரையில் மட்டும் தான்.
மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளின் அரண்மனையாக 13.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த இந்த இடம், புதுடில்லியில் உள்ள, அகிலஇந்திய காந்திய ஸ்மாரட் நிதிக்கு நன்கொடையாக தமிழக அரசு வழங்கியது. அதில் தான் மகாத்மா காந்தியின் பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் அரியவகை புகைப்படங்கள், அவரது மூக்குக்கண்ணாடி,ராட்டையில் நூற்றநூல், அவர் பயன்படுத்திய கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருட்கள் மிகவும் பத்திரமாக மதுரை காந்திமியூசியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்துடன் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட காந்தியின் அஸ்தி, மியூசியத்தில் உள்ள, அமைதிப்பூங்கா என்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியத்தைப் பராமரிக்க மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் 1994-1995 ஆம் ஆண்டிலும், 2007-ஆம் ஆண்டிலும் வழங்கப்பட்ட 2 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத்தொகையின் வட்டியும், தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் வழங்கப்படும் ரூ.1.50 லட்சம் மானியத்தில் தான் பராமரிப்பு, 18 ஊழியர்களுக்கு சம்பளம் ஆகியவை வழங்கப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் காந்திமியூசியத்தைப் பார்வையிட வருகின்றனர். இதில் வெளிநாட்டவர்கள் 10 ஆயிரம் பேர் ஆவர். இப்படி வரக்கூடிய சுற்றுலாபயணிகளுக்கு குடிநீர், கழிப்பறை வசதி போதிய அளவு இன்னமும் செய்துதரப்படவில்லை.
காந்தி மியூசியம் 30 பேர் கொண்ட கமிட்டியின் பராமரிப்பில் உள்ளது. இந்த 30 பேரில் மாவட்ட ஆட்சியர், மேயர், பல்கலைக்கழக துணைவேந்தர், கல்வி அமைச்சர், அரசு செயலர் என பதவி வழிவந்த 10 உறுப்பினர்களும், 19 நியமன உறுப்பினர்களும், ஒருவர் ஊழியர் எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2007-ஆம் ஆண்டு பொறுப்பிற்கு வந்த புதிய கமிட்டி, மேலும் 200 உறுப்பினர்களைச் சேர்க்க பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றது. அதன்படி ஒவ்வொரு உறுப்பினரும் சேர 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 130 பேர் பணம்கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும்சர்ச்சை உருவானது. அடிப்படை விதிகளில் மாற்றம் கொண்டுவரக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ள நிலையில் தனிநபர் ஆளுகையின் கீழ் கொண்டு செல்வதற்காக தான் இந்த உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றது, ஆகவே இதை அனுமதிக்கக்கூடாது என சிலர் புகார் எழுப்பினர். இதனால் புதிய உறுப்பினர் சேர்க்கும் முடிவை மாவட்ட பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளார். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த முடிவு முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டியதாகும் என காந்தியின் தொண்டர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் எங்கும் இதுமாதிரியான உறுப்பினர் சேர்ப்பு நடக்காத போது மதுரையில் மட்டும் நடத்துவது விதிகளுக்கு முரணானதாகும் என்றும் கூறுகின்றனர். உறுப்பினர் சேர்ப்பில் ஈடுபடுவதற்குப்பதில் கடந்த 30 ஆண்டுகளாக காந்திமியூசியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் நிலையை உணர்ந்தாவது இவர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் அல்லது அதற்கு அரசிடம் இருந்து சம்பளமானியம் பெறவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வேறுஎந்த பயன்பாட்டிற்கும் காந்திமியூசியத்தைப் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் காந்திமியூசியம் முன்பு உள்ள காந்திகுடிலை மறைக்கும் வகையில் எஸ்டிடிபூத், பிரவுசிங் சென்டர், காந்திமீடியா சென்டர்,விஞ்ஞான் கேந்திரா, பழமுதிர்சோலை உள்ளிட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. காந்தியின் நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கும் காந்திமியூசியத்தை மறைத்து நந்தியாக நிற்கும் கடைகளால் அதன் இயற்கை அழகுகெட்டுக்கொண்டிருக்கிறது.
காந்திமியூசியத்தில் காந்திய கல்வியியல் ஆராய்ச்சி மையம் நிறுவுவதற்காக கடந்த 2005-ஆம் ஆண்டு கூடங்குளம் அணுமின்நிலையம் சார்பில் 20 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், 20 லட்சரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த ஆராய்ச்சி மையத்திற்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், இதுநாள் வரை அந்த ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டு கண்காட்சிக்கூடமாக காட்சியளிக்கிறது. முறைப்படி இக்கட்டிடம் கட்டப்படவில்லை என கடந்த 2007-ஆம் ஆண்டு எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்னும் ஆராய்ச்சி மையம் திறக்கப்படாமல் உள்ளது.
இந்துமதவெறியன் விநாயக் நாதுராம் கோட்சேவின் துப்பாக்கிக்குண்டை நெஞ்சில் தாங்கிய போது சிந்திய ரத்தக்கறை படிந்த காந்தியின் வேஷ்டி, வெண்மைப்பூச்சோடு காட்சியளிக்கும் மதுரை காந்திமியூசியத்தில் பத்திரமாக பாதுகாக்கப்படுவது போல அருங்காட்சியகத்தன் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறது மத்திய அரசும், மாநில அரசும் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக