
பிணத்தை விட
மோசமாக வீசுகிறது
உங்கள் சாதியம்.
மரங்களில்
வனங்களில்
வசித்த மூதாதைகளின்
அடையாளம் மறக்காத
உங்களின் மலையேற்றங்கள்
இன்னும்
சொல்லிக்கொடுக்கின்றன
மனிதன் பிறந்த கதையை.
கழுவேற்றிக் கொன்ற
சமணர்களின் ரத்தத்தில்
ஏற்கனவே
பூத்துக்கிடக்கிறது மதுரை.
உங்களின் அதிகாரங்களின்
மட்டங்கள்
வைகையை விட
மேலெழும்பி செல்கிறது.
முல்லைக்குத் தேர்
மயிலுக்கு போர்வை
காப்பியங்களில் கதைக்கலாம்.
இதையும் சேர்க்க வேண்டும்
மனிதரைப் பிரிக்க சுவர்.
ஆளும்வர்க்கத்தின்
ஏவலாளிகள்
எட்டி உதைப்பது
எங்களுக்குப்புதிதல்ல. . .
கொடியன்குளம்
நாலுமூலைக்கிணறு
சங்கரலிங்காபுரம்
தாமிரபரணி
ரெட்டணை
என்றதன் தொடர்ச்சியாக
உத்தப்புரம்.
வறுமையைத் தவிர வேறெதும்
குடியேறாத எங்கள் குடிசைக்குள்
மிச்சமிருந்த
எங்களது வாழ்க்கையின் மீதும்
உங்களது தாண்டவத்தின்
தடங்களை விட்டுச்சென்றுள்ளீர்.
பசிக்கழும் குழந்தையின்
துணையான
பொம்மைகள் மீதும்
நடத்தப்பட்டுள்ளது
உங்களது திமிர்த்தனம்.
நந்தனை எரித்து
ஜோதியில் கரைத்த
மூதாதைகளின் வாரிசுகளே. . .
எத்தனை படைவரினும்
எத்தனை முறையெனினும்
மறுபடி
மறுபடி பிறப்பெடுப்போம்
மனுவைக்கொல்லும் வரை. . .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக