வெள்ளி, 2 ஜனவரி, 2009

அரசியல் பிள்ளையார்


விநாயகனே. . .
பெற்றோரைச் சுற்றி
பழம் பெற்றவன் நீ.
உன்னை ஊர் ஊராக
சுற்ற வைத்து சிலர்
பலன் பெற நினைக்கிறார்கள்.
வியாசருக்குக் கொம்பொடித்து
உரை எழுத உதவியன் நீ.
உன்னை ஒடித்துப் புதியகதை
எழுத நினைக்கிறார்கள்.
தாய்க்கு காவல் நின்று
தந்தையைத் தடுத்தால்
தலைவீழ்த்தப்பட்டாய் அன்று.
மின்கம்ப வயர் தட்டுவதால்
தலைசாய்க்கப்படுகிறாய் இன்று.
வீடுகளில் படையல் வைத்து
ஆறுகளில் கரைக்கப்பட்டாய் அன்று.
முச்சந்தி கலவரங்களால்
காவல்துறையினரின்
தண்ணீர் அபிஷேகத்தால்
கரைக்கப்படுகிறாய் நீ.
கடிக்காத எறும்புக்குக் கூட
உன் பெயரை வைத்துத்தான்
அழைக்கின்றோம்.
கடிதங்கள் எழுதும் முன்
விழுகின்ற எழுத்துக்கு
உனக்கே முதல்மரியதை.
சமீபகாலங்களில்
சதுர்த்தி என்ற பெயரில்
வீதிகளில் இழுக்கப்பட்டு
சங்கடத்திற்கு உள்ளாக்கப்படுகிறாய்.
அரசமரப் பிள்ளையாரான உன்னை
அரசியல் பிள்ளையாராக்கப் பார்க்கிறார்கள்.
வினை தீர்ப்பவன் நீயே
வினையாக வரலாமா?

கருத்துகள் இல்லை: