வியாழன், 8 ஜனவரி, 2009

அழுக்கான நெருப்பு






புலராத இரவில்
புயலென நுழைந்த மாக்கள்
வெறித்தே நின்றனர்- எதிரே
உறங்கும் குடிசைகள்.
மலர்களைத் தாங்கும்
கொடி போல- குடிசையில்
குசலம் விசாரித்துக் கொண்டிருந்தது
மார்கழிப்பனி.
எட்டேயிருந்து ஒளி வழங்கிய
நட்சத்திர விளக்குகளைப் பார்த்து
கண்சிமிட்டின சில தீப்பந்தங்கள்.
அக்கினியை அடைகாத்து நின்றன
உறங்கியவர்களின் வயிறுகள்.
அவர்களின் சுவாசச்சூட்டின் வெப்பம்
பனியையும் மீறி
வந்தவர்களின் பாதங்களைச் சுட்டது.
உதடுகள் பிரிக்காத
இந்த ஊமை ஜனங்களா
உரிமை கோருவது. . .
உள்ளத்தில் விழுந்த
நெருப்புப் பொறி
உரத்துக்கட்டளையிட்டது
"கொளுத்துங்கடா "
பற்றிய தீயைக்கண்டு
பதறிய மக்கள்
ஓடிஒளிந்தனர் ஒரே குடிசைக்குள்.
அரைப்படி நெல் கூலி
அதிகம் கேட்டதால் அந்த 44 பேரும்
கோரிக்கைகளோடுச் சேர்த்து
கொளுத்தப்பட்டனர்.
வான் ஒளி வழிகாட்ட
தேவகுமாரனைத் தேடிப்புறப்பட்ட
அந்த டிசம்பர்-25ல்
வெண்மணி வீதியின்
உரிமை ஜுவாலை
பற்றிப்படருகிறது
காற்றின் திசைகள் எங்கும்.

1 கருத்து:

HS சொன்னது…

Thanks Kavitha
www.kelvi.net