
விடிவதற்குள்
எப்படியேனும் வந்துவிடுகிறது கனவு.
ஜன்னல் கதவுகளை
கொண்டியில் அடைத்த விரல்களுக்கு
மனக்கதவை அடைக்க
மார்க்கம் தெரியவில்லை.
ஒவ்வொரு நாளும்
துரத்தி துரத்தி
விரட்டும் கனவில்
வந்து தொலைப்பவர்களின் முகங்கள்
கல்லெறிந்த குளத்தில்
தட்டுப்படும் பிம்பங்கள்.
வயிற்றில் அமர்ந்து
கழுத்தை நெரிக்கும்
வளையல் கரத்திற்கு
சொந்தமானவளின்
முகம் தேடி
விழித்த இரவுகளின் எண்ணிக்கை
பல வாரங்களைத்தின்றது.
இரண்டாவது ஆட்டம்
சினிமா பார்த்துவிட்டு வரும்போது
தெருவில் விரட்டிய நாய்களில்
எந்த நாய் கனவில் வந்ததென
இதுவரை தெரியவில்லை.
இரவில் எழுந்து
விளக்கை ஏற்றி
சிறுநீர் கழிக்கச் செல்லும் போது
தட்டுப்படும்
முரட்டு மீசை கரப்பான் பூச்சி
கனவில் வந்து கதைத்துச் செல்கிறது.
கனவுகளற்ற பொழுதுகள்
எப்படியிருக்கும் என அறிய
கனவுகளுடன்
காத்திருக்கும் வேளைகள்.. . . .
என் தலையணை
எத்தனை கனவுகளை
புதைத்து வைத்திருக்கிறதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக