திங்கள், 15 டிசம்பர், 2008

காசு கேட்கும் கடவுள்கள்


இடைவிடாத
நாய் குரைப்புகளுக்கிடையே
வீட்டின் அழைப்புமணியை
அழுத்தும் ஓசை.
கதவைத்திறந்தால்
கையேந்தி நின்றான் அனுமன்.
கோடு, கோடாக
கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது
பச்சையாய் வியர்வை.
கதாயுதத்திற்கு பதிலாக
கையில் அலுமினியத்தட்டு
அதில் கையளவு அரிசி
சில்லரைக்காசுகள்.
சஞ்சீவி மலையை
எளிதாய்த் தூக்கியவன் கையில்
பழைய துணிமூடை.
அவனுக்குப் பின்னால்
ஆர்மோனியப்பெட்டியுடன் ஸ்ரீராமன்
தெலுங்குப்பாடலைப்
பாடிக்கொண்டே
துரத்தி வரும் நாயை
விரட்டிக் கொண்டிருந்தான்.
அவதாரப் புருஷர்களை
அறியாத மனைவி
சில்லரையில்லை
சென்று வா என்கிறாள்.
வீடு வீடாக
கதவைத்தட்டி
காசு கேட்கிறார்கள் கடவுள்கள்.

கருத்துகள் இல்லை: