திங்கள், 15 டிசம்பர், 2008

கிராமத்து அத்தியாயம்

கிராமத்தின்
எஞ்சிய அடையாளமும்
தொலைந்து போனது.
தாயக்கட்டங்களும்
ஆடு,புலி ஆட்டக்கோடுகளும்
பெருசுகளின் அரட்டையேதுமின்றி
தூசிபடிந்து கிடக்கிறது
கிராமத்து மந்தை.
ஆண்டுக்காண்டு
வெளியூரெல்லாம் சென்று
வெற்றிக்கோப்பைப் பறித்து வந்த
கபடி வீரர்களின்
காலடித்தனம் பதியாமல்
முட்கள் பூத்துக்கிடக்கிறது
விளையாட்டுத்திடல்.
கிளை ஒடிக்காது
வளர்ச்சி குன்றிப்போய் நிற்கும்
வேப்பமரத்தின் அடியில்
துப்பப்படுகிறது
பற்பசை எச்சில்.
சுருக்குப்பைக்குப் பதில்
மணிபர்சுக்கு மாறிய ஆத்தா
வெத்தலை பாக்கு வைக்கமுடியாது
திணறித்தான் போகிறாள்.
அஞ்சறைப்பெட்டி
உழக்கை, உரி
குளுமை,. மாடக்குழி
பாம்படமென்ற அடையாளங்கள்
மெல்ல மெல்ல
அடையாளமிழந்து போனது.
நாகரீகமென்ற பூச்சூட
மொட்டையடித்துக்கொண்டவர்களின்
நீண்டபட்டியலில்
குழந்தைகளும் அடங்கிவிட்டன.
தலைச்சுமை இறக்கி வைக்க
சுமைதாங்கிக்கல் தேடுபவர்களிடம்
கேட்கவேண்டும்
அவர்களின் அடையாளங்களை.

கருத்துகள் இல்லை: