வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தியாகி லீலாவதியை வரலாறு என்றும் மறந்து விடாது . . . .





மத்திய அரசின் கொள்கையால்
மான்சென்டோ விதையால்
பொய்த்துப் போன பூமி
அடுத்த ஆண்டாவது
நல்ல விளைச்சல் கொடுக்க
வேண்டும் என்ற நேர்த்திக்கடனோடு
கிராமங்களில் இருந்து
அழகர்கோவிலுக்கு
அணிவகுத்து வரும்
மாட்டுவண்டிகளின்
மணிச்சத்தங்கள்
மதுரை வீதிகளில்
எதிரொலிக்கும்
சித்திரை மாதம்.

மதபேதமில்லாமல்
ரமேசும், ராவுத்தரும்
சர்க்கரை ஏந்தி நிற்க
அழகர்மலைக் கள்வர்கள் போல
வேடமிட்டவர்களும்
மந்திகளைப் போல
முகமூடி அணிந்தவர்களும்
" கோவிந்தா" முழக்கங்களோடு
காசுக்காகக் கையேந்தி வரும்
கருட எதிர்சேவை நாள்.

உச்சிச்சூரியன்
உறுப்புகளை
அறுக்கும் வெறியுடன்
உஷ்ணம் கொட்ட
வில்லாபுரம் வீதியில்
வீராங்கனை லீலாவதி
வெட்டிக் கொல்லப்பட்டார்.

நதியின் முகவரி தொலைத்த
வைகை ஆற்றின் மீது நின்று
மாநகராட்சி நீரில்
எழுந்தருளும் கள்ளழகர் மீது
பக்தர்கள் பரவசமாய்ப்
பீய்ச்சுகிறார்கள் தண்ணீர்.

தாகம் தீர்க்கும் தண்ணீர்
விற்பனைப் பொருளாய்
மாறியதற்கெதிராய்
மாமன்றத்தில்
மக்கள் மன்றத்தில் ஒலித்த
எங்கள் தோழர் லீலாவதியின்
குரல்வளை நோக்கி வீசப்பட்ட
கொடிய ஆயுதங்களால்
கொட்டிய குருதி வீதிகளில்
செந்நீராய் ஓடியது.

எண்ணெய் வளத்திற்காக
ஒரு தலைவன் கொல்லப்பட்டான்
என்பது வரலாறு.

தண்ணீருக்காக
ஒரு தலைவி கொல்லப்பட்டார்
என்பதும் வரலாறு.


கொல்லப்பட்டவர்களையும்
கொன்று போட்டவர்களையும்
வரலாறு
என்றும் மறந்து விடாது.


உயிரற்றது
ஜடப்பொருள் என்கிறது கோட்பாடு.‘
அந்தக்கோட்பாட்டை உடைத்தது
தியாகி லீலாவதியின் மரணம்.
ஆம் ! லீலாவதி
ஜடப்பொருள் அல்ல. .  . .
என்றும் பேசும் பொருள்.
(தியாகி லீலாவதி வெட்டிக்கொல்லப்பட்ட நினைவு நாள் - ஏப்ரல் 23 )



கருத்துகள் இல்லை: